Monday, November 2, 2020

 ஆர்.எஸ்.எஸ். பதுங்குகிறதா, பின்வாங்குகிறதா?

பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தபின் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக சர்வாதிகாரப் போக்கில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் நாடெங்கும் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு குறித்த சட்டங்கள், காஷ்மீர் சிறப்புத் தகுதிக்கான பிரிவு 370 நீக்கம், விவசாயிகளுக்கெதிரான மூன்று சட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டங்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் நலன்களையும் கேள்விக்குள்ளாக்கும் சட்டங்கள் நம் நாடு முழுதும் பெரும் போராட்டங்களைக் கிளப்பியுள்ளது. சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மற்றும் தலித், பழங்குடியினர் மீது நித்தம் தொடுக்கப்படும் பாலியல், வன்முறைத் தாக்குதல்கள்1அகில உலக அளவில் மனித உரிமைக்கான அமைப்புகளின் கடுங்கண்டனத்திற்கு பிஜேபி அரசு ஆளாகி உள்ளது.

குறிப்பாக, கொரோனாத் தொற்றுக்கு ஆளான இந்த எட்டு மாதங்களில் மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை. இந்த சூழ்நிலையில், ஆர்.ஸ்.ஸ்-இன் சர்சங்க்சாலக் மோஹன் பகவத் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு கருத்துக்களை திருவாய் மலர்ந்து வெளியிட்டுள்ளார். 

“உலகிலேயே முஸ்லிம் மக்கள் மிகமிக மகிழ்ச்சியாக வாழும் நாடு இந்தியாதான். இந்த நாட்டு அரசியல் அமைப்புச் சட்டம், இந்துக்கள் மட்டும்தான் இங்கு வாழ முடியும் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. இந்த நாட்டில் சிறுபான்மை மதத்தினர் வாழ வேண்டும் எனில், அவர்கள், இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறவில்லை.முஸ்லிம் மக்களும் சம தகுதி உள்ளவர்கள்”, என இந்துத்வா தத்துவத்திலிருந்து முற்றிலும் விலகியவராக, புது வேடம் தரித்திருக்கிறார். மத்திய அரசுக்கு எதிராக நாளுக்குநாள் பெருகி எழும் எதிர்ப்புப் பேரலையைக் கண்டு ஏற்பட்ட கலக்கம் அவர் மனதில் இந்த திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மனமாற்றம் வரவேற்கத் தக்கதே. ஆனால் சிறுபான்மை மக்கள் மிகமிக மகிழ்ச்சியில் வாழ்கிறார்கள் என்பதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை நாம் அவருக்கு உணர்த்த வேண்டியது அவசியமாகிறது. 

இந்து மதத்தின் அடிப்படை அம்சமான சகிப்புத் தன்மை, அனைவரையும் அரவணைக்கும் பெருந்தன்மை ஆகிய அனைத்து மனிதாபிமானப் பண்புகளை புறக்கணித்து, இந்து தேசியவாதம் என்னும் ஃபாசிச வெறியைத் தூக்கிப் பிடிக்கும் இந்துத்வா ஆர்.எஸ்.ஸ். சாத்தான் ஓதும் புதிய வேதம் குறித்து நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டி உள்ளது. இந்தியா என்பதை இந்து ராஷ்ட்ரம் ஆக்குவதையே தலையாயப் பணி என்ற முழக்கத்தில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் அந்த அமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை. பிஜேபி ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் உண்டாக்கியிருக்கிற அரசியல் ரீதியான நெருக்கடியே இந்த மன மாற்றத்திற்குக் காரணம். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் மதச்சார்பின்மைக்கு எதிரான எந்தக் கொள்கையையும் இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ். இந்துத்வா கும்பல் உணரத் துவங்கி உள்ளது.

ஆனாலும், மோஹன் பகவத் கூறுவது போல், முஸ்லிம் மக்கள் உலகிலேயே இங்குதான் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதில் துளியும் உண்மையில்லை. அகில உலக அளவில் ஆய்வு செய்யும் அமைப்புகள் தங்கள் அறிக்கையின் மூலம் இதை உறுதி செய்து இருக்கிறார்கள். மார்ச், 2020 இல் ‘எட்டாம் உலகம்’(Eighth World) என்ற அமைப்பு வெளியிட்ட ‘மகிழ்ச்சி அறிக்கை’ (Happiness Report), 153 நாடுகளில், இந்தியா 144 வது இடத்தில் இருக்கிறது. முதல் ஐந்து இடத்தில் ஃபின்லாந்து, டென்மார்க்,ஸ்விட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் வருகின்றன. பாகிஸ்தான் 66 வது இடத்தில். வங்க தேசம் 107 வது இடத்தில். பல இஸ்லாமிய நாடுகள் நம்மைவிட மிகவும் முன்னணியில். உள்ளன. மகிழ்ச்சியற்ற நாடுகளான ஆஃப்கானிஸ்தான் (153), சூடான் (152), ஜிம்ப்பாப்வே(151) ஆகிய நாடுகளுக்கு அருகே கடைசி பத்து நாடுகளுக்குள் நாம் வருகிறோம். பொதுவான நல்ல வாழ்க்கை, நல்லுணர்வு, ஓரளவு ஏற்றத்தாழ்வு இல்லா சமூகம், வேலையில்லாத் திண்டாட்டம், நீடித்த ஆயுள், சுதந்திரம், வருமானம், லஞ்ச லாவண்யமற்ற சமூகம் ஆகியவையே மதிப்பீடு செய்யும் அளவு கோள்கள். நம் நாடு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பின்னடைந்து உள்ளதை ஆய்வறிக்கை சுட்டுகிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து இருப்பதோடு, ஏறத்தாழ 12 கோடிப் பேர் கொரோனாத் தொற்றுக் காலத்தில் வேலையை இழந்துள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய எந்த விபரமும் கைவசம் இல்லை என வெட்கமின்றி மத்திய ஆட்சியாளர்கள் அறிவிக்கிறார்கள். தொழிலாளர் நலத்துறை தூங்குகிறது. ஆனால் தொழிலாளர் விரோத, தொழிற்சங்க சட்டங்களை அமுல் படுத்துவதில் மட்டும் தன் அசுர வேகத்தைக் காட்டுகிறது.

உலகப் பட்டினி தர வரிசைப் பட்டியல், 2020 இல் வெளியாகி உள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 107 நாடுகளில் இந்தியா, 94 வது இடத்தில் உள்ளது. வளர்ச்சி ஒன்றே மோடியின் குறிக்கோள் என வாய்ப்பந்தல் போடும் பிஜேபி மற்றும் மோகன் பகவத் கும்பல்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும், அதை மறைத்து பொய்யுரைப்பதில் பிரதமர் முதல் கடைசி இந்துத்வா தொண்டன் வரை ஒருவருக்கொருவர் சளைப்பதில்லை.

உலக பத்திரிக்கை சுதந்திரம் குறித்த பட்டியலில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனப் பெருமை பேசும் நாம், 180 நாடுகள் கொண்ட வரிசைப் பட்டியலில் 142 ஆவது இடத்தில்  பின் தங்கி நிற்கிறோம். மலேசியா, துனீஷியா போன்ற இஸ்லாமிய நாடுகள் நம்மை விட முன்னணியில் உள்ளன. பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்கள் மீதான  தாக்குதல்கள் பன்மடங்காக அதிகரித்திருப்பதே நம் பின்னடைவுக்குக் காரணம். மனித உரிமைகளுக்காகப் போராடுகின்ற, எழுதுகின்ற அறிஞர்கள், தீவிர வாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு எந்த விசாரணையுமின்றி சிறைக் கொட்டடிகளில் ஆண்டுக் கணக்கில் சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் கொடுமை இதற்கு முன் இல்லாத அளவிற்கு இழைக்கப்படுகிறது.

சட்டத்தின் ஆட்சி என்பது ஒழிந்து, நீதி மன்றங்கள் ஆட்சியாளரின் அடிவருடிகளாக மாறிப் போனதை நாளுக்கு நாள் உயரமை நீதி மன்றங்கள் வெளியிடும் தீர்ப்புகள் நிரூபிக்கின்றன. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தந்த நீதிமன்றத் தீர்ப்பு, நீதி மன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. இது பற்றிய ஆய்வறிக்கை வெளியிட்ட 128 நாடுகள் கொண்ட வரிசையில் நாம் 69 வது இடத்தில். மோடியின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, அகில உலக மதச்சுதந்திரம் குறித்த ஆணையம், இந்திய பற்றிக் குறிப்பிடுகையில், “இந்தியா, 2019 இல் மதச்சுதந்திரத்தை அளிப்பதில் மிகவும் கீழ்நோக்கி வீழ்ச்சி அடைந்துள்ளது.மத்தியில் ஆளும் அரசாங்கம், தனது பாராளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி, மதங்களுக்கான சுதந்திரம் வழங்குவதில், புதிய நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கெதிரான கொள்கைகளை அமுல் படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது”, எனக் கூறுகிறது. சிறைக்கொடுமைகள், அவமானகரமாக குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களை நடத்துவது, சுதந்திரமாக வாழ்வதைத் தடுப்பது, தனி நபர் பாது காப்பின்மை, தலித் மக்கள் மீதான சாதியக் கொடுமைகள், பாலியல் குற்றம் புரியும் சமூக மேலாண்மையாளர்களுக்குப் பாதுகாப்பு என பல வழிகளில் தனி மனித சமூக சுதந்திரம் துளியும் இல்லாததே  இந்த இழிநிலைக்குக் காரணம். 

மேலும், பகவத், ‘எந்த நாட்டிலும், சிறுபான்மை சமூகம் தொடர்ந்து வாழ முடியாது’ எனக் கூறியதன் மூலம், தங்கள் இயக்கத்தின் மற்ற மதத்தினர் மீதான சகிப்பின்மையை வெளிப்படையாகக் காடுகிறார். உலகின் பல நாடுகளில் அனைத்து மதம் சார்ந்த மக்கள் ஒருங்கிணைந்து வாழ்கிறார்கள் என்பதை அறியாதவரா மோகன் பகவத்! இந்துத்வா பேரினவாதத்தில் ஊறித் திளைப்பவர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

அனைத்திற்கும் மேலாக அரசியல் நெருக்கடி முற்றும் வேளையில், ஆர்.எஸ்.எஸ். பொய் மான் வேடம் தரிக்கும். விடுதலைப் போராட்ட வரலாறு அவர்களின் துரோகச்செயல்களை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. மோகன் பகவத்தின் மனமாற்றம் நிரந்தரமானது என்பதை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து தங்கள் செயல்களால் நிரூபிக்க வேண்டும். 

பின் வாங்கலா அல்லது பதுங்கலா என்பது அப்போது தெரியும்.


நா.வீரபாண்டியன்,

பட்டுக்கோட்டை.

24-10-2020.