Tuesday, June 30, 2020

கொரோனா காலச் சிந்தனைகள்
பகுதி 2-ஆ

சீனாவின் அதிரடி தாக்குதல் எதிர்பாராத ஒன்று. 2015 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை 2264 முறைகள் எல்லையில் ஒப்பந்தத்தை மீறிய துப்பாக்கி சூடு ( Cease fire violations) உயிர்ச் சேதம் இல்லை என இராணுவமும், அரசும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் ஊடகங்கள் உறுதிப் படுத்துகின்றன. ஆனால் ஜுன் 6 மற்றும் 9 தேதிகளில் இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்து துருப்புகள் பழைய இடத்திற்கு செல்ல உடன்பாடு ஏற்பட்டு விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை (Disengagement) ஜுன் 15 அன்று துவங்கிய போது இரவு ஏழு மணி அளவில் தள்ளு முள்ளு என ஆரம்பித்த மோதல், துப்பாக்கி வெடிச்சத்தமில்லாத, ஆனால் ஆணிகள் பதிக்கப்பட்ட குண்டாந்தடிகளால் மிருகத்தனமாக நமது வீரர்கள் தாக்கப்பட்டு அதில் 20 பேர் கொல்லப்பட்டனர் என்ற செய்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சண்டை அடுத்த நாள் விடியற்காலை மூன்று மணி வரை நடந்ததாகச் செய்தி. இந்த அளவுக்கு சீனாவின் அணுகுமுறையில் ஏற்கமுடியாத மாறுதல் வருவதற்கான காரணங்களை இந்து ஆங்கில நாளிதழில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாரரயணன் அவர்களும், முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த நிருபமா ராவ் அவர்களும் எழுதிய கட்டுரைகள் பட்டியலிடுகின்றன. 

அவற்றை அறியுமுன், 1962 போரில் தோற்ற இந்தியா, 1967 இல் நடந்த இரண்டாவது இந்திய-சீனப் போரில் வெற்றி அடைந்த செய்தியின் விபரங்களைப் பார்க்கலாம். இரு நாடுகளுக்கான போரில் ஒரு நாடு தோற்பதற்கும், எதிரி நாடு வெல்வதற்கும் பூகோள, அரசியல், இராணுவ ரீதியான பல அக, புற காரணங்கள் உண்டு. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தலைமையிலான அச்சு நாடுகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய, ஆசிய நாடுகள் துவக்கத்தில் சரிந்தன. கோடிக்கணக்கான மக்கள் பலியாயினர். சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் பேரரசே பெருந்தோல்வியைச் சந்திக்க வேண்டி வந்தது. 1942 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் மீது தாக்குதலைத் தொடுத்த ஹிட்லரின் நாஜிப் படைகளால் சோவியத் நாட்டு மக்கள் அடைந்த இன்னல்களும், அந்நாட்டு ஆயிரக்கணக்கான கிராமங்களும், பெரு நகரங்களும் அடியோடு அழிக்கப்பட்டன. ஒன்னரை கோடி மக்கள் பலியாயினர். ஆனால் இறுதியில் பாசிசத்தை அடியோடு வீழ்த்தி வரலாறு படைத்தன நேச நாடுகள். ஸ்டாலின் நேச நாடுகளால் பாராட்டப்பட்டு வெற்றியைப் போற்றும் விதத்தில், கம்யூனிசம் ஒரு சாத்தான் எனத் தூற்றிய வின்ஸ்டன் சர்ச்சிலே வீரவாளை மற்ற நேசநாடுகள் சார்பாக அவருக்குப் பரிசாக அளித்தார். உலக மக்கள் முன் ஸ்டாலின் உயர்ந்து நின்றார். வெற்றிக்கும் தோல்விக்குமான பின்னணிகளை ஆய்வு செய்வது எதிர் காலத் திட்டத்திற்கான பாடமாக அமையும். தவறுகளைத் திருத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும். அப்படித்தான் ஒவ்வொரு நாடும் அப்போருக்குப் பின் தங்கள் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை ஆய்வு செய்த அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். யாரையும் துவக்க கால பின்னடைவுகளால் ஏற்பட்ட துயரங்களுக்காகப் பழி தூற்றவில்லை. அதை விடுத்து கீழான அரசியல் செய்து தனிப்பட்டவர்கள் மீது அவதூறு செய்வதும், அதன் மூலம் மக்களின் உணர்வைத் தூண்டி போலித்தனமான தேச பக்தியைக் காட்டிக் கொள்வதும் அரசியல் பிழைப்பு வாதமன்றி வேறொன்றுமல்ல. 1962 போரில் தோல்விக்கு நேரு என்ற தனி மனிதர்தான் காரணம்; அதனால் நம் எல்லையின் ஒரு பகுதியை இழந்தோம் எனத் தொடர்ந்து செய்து வந்த அவதூறு  என்ற அம்பு இப்போது மோடி மேல் திரும்பிப் பாய்கிறது. 1962 தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்த அன்றைய நேரு அரசு, உடனடியான மாற்றங்களை இராணுவத்திலும்,அயல்கொள்கைகளிலும் கொண்டு வந்தது. இராணுவத் தலைமையில் மாற்றம்; ஏழு மலைப்பிரிவு படைக்குழுக்கள் உருவாக்கப் பட்டன. இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டு வலிமை பெருக்கும் திட்டங்கள் விரைவாகச் செயலாக்கப்பட்டன. விளைவு? மீண்டும் 1967 இல் நடந்த இந்திய-சீனப் போரில் இந்தியா வென்றதுடன், சீனத் தரப்பிற்கு பெருஞ்சேதத்தை உண்டாக்கியது. சிக்கிம்- திபெத் எல்லைக்கு அருகே ஜும்பி பள்ளத்தாக்கில் இருந்த நாதுலா கணவாய் மற்றும் சோலா கணவாய் இரண்டிலும் முழுமையான உரிமையை சீனா கோரி வந்தது. இந்தியா தனது படைபலத்தை நன்கு பெருக்கியபின், நிரந்தர தீர்வுக்காக இக்கணவாய்களின் மீதான தனக்குள்ள எல்லைப் பகுதியில் முட்கம்பி வேலியை எடுக்க முனைந்தது. இவ்வேலை சீனாவின் ஆட்சேபத்தாலும், அதையொட்டி அவ்வப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளு போன பிறகு சிறு சிறு மோதல்களாலும் தடைப்பட்டது.  இறுதியாக செப்டம்பர் 11, 1967 அன்று கம்பி வேலி வைக்கும் வேலையை சீனா மறித்ததையும் மீறி இந்திய இராணுவம் தொடர்ந்ததால், நிராயுதபாணியாக பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் மீது எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடத்தி உயிர்ச் சேதத்தை விளைவித்தனர். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்ட இந்திய இராணுவம் திருப்பித் தாக்கத் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெற்ற போரில், சீனா பின்வாங்க நேரிட்டது. லெப்டினன்ட் கர்னல் சகத் சிங் தலைமையிலான இப் போர் வீர காவியமானது. 1967 ஆம் ஆண்டு 1962 அல்ல என்பதை இந்தியா நிரூபித்தது. நாதுலா கணவாயில் நம் பகுதி உரிமை நிலைநாட்டப்பட்டது. சீனத் தரப்பில் பெரும் உயிரச் சேதம் ஏற்பட்டதை எவராலும் மறுக்க இயலவில்லை. அதே ஆண்டு அக்டோபர் முதல் நாள் சிக்கிம்-திபெத் எல்லையை ஒட்டிய சோலா கணவாய் மீது முழு உரிமை கொண்டாடி மீண்டும் போர் தொடுத்த சீனா, இந்தியாவின் பதிலடியால் பின் வாங்கியது. இவை எல்லாம் வரலாறு. 

இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில், இராணுவத்தில் வலிமை மிக்கதாக அன்று உலகெங்கும் பேசப்பட்ட  அமெரிக்க பேட்டன் டாங்குகளைப் பொடிப் பொடியாக்கியும், பாகிஸ்தானின், அமெரிக்க ஜாஃபர் ஜெட் விமானங்களுக்கு பெருத்த அழிவை ஏற்படுத்தியும், இந்திய இராணுவம், அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, தன் வலிமையை பறைசாற்றியது. அப்போது லால் பகதூர் சாஸ்திரி பிரதமர். இந்நிகழ்ச்சிகளை வசதியாக சிலர் மறக்கலாம். ஆனால் அது வரலாறாக என்றும் நிலை பெறும். 

லால் பகதூர் சாஸ்திரி, இந்திய-பாகிஸ்தான் போரை ஒட்டி சோவியத் முயற்சியால் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் அங்கேயே அகால மரணமடைந்தார். அவருக்குப் பின் இந்திரா காந்தி பிரதமராகிறார். 1971 இந்தியா- பாகிஸ்தான் போர் பற்றி இங்கு விளக்கமாகப் பேசத் தேவை ஒன்றும் இல்லை. ஆனால் 1962,1967 போர்களுக்குப் பிறகு இந்திய அரசின் தீவிர முயற்சியால், சர்வ தேச உறவுகளை மேம்படுத்திக் கொண்ட அதே வேளையில் நேருவின் கூட்டு சேராக் கொள்கையிலிருந்து ஒரு நூல் கூட விலகவில்லை. இந்த உறுதி இந்தியாவுக்கு மிகப் பெரிய கவுரவத்தை உலக அரங்கில் ஏற்படுத்தித் தந்தது. அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கினாலும், சோவியத் யூனியனோடு இருபதாண்டு கூட்டுறவு ஒப்பந்த ஆகஸ்ட் 1971 இல் கையெழுத்தானது. கிழக்கு பாகிஸ்தானில் 'கலாச்சார தேசியவாதம்' ஓங்கி, வங்க மொழியின் மீதான உருது மொழியின் மேலாதிக்கத்தை எதிர்த்த கிளர்ச்சி வலுப்பட்டு மேற்கு பாகிஸ்தானுடன் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியின் அடக்குமுறைக்கு ஆளாகி ஏறத்தாழ 5,00,000 கிழக்கு வங்காள மக்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்திய உலக அரங்கில் எடுத்த முயற்சிகள் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளருக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. இதன் வெளிப்பாடு 1971 டிசம்பரில் இந்திய-பாகிஸ்தான் போராக வெடித்தது. டிசம்பர் 3 இல் துவங்கிய போர் டிசம்பர் 16 இல் பதினான்கு நாட்களில் டாக்கா வீழ்ந்ததோடு முடிவுக்கு வந்தது. கிழக்கு பாகிஸ்தான் மக்களின் 'முக்தி பாகினி' யும், இந்திய இராணுவமும் இணைந்து கிழக்கு பாகிஸ்தானை விடுவித்து, வங்க தேசம் (பங்களா தேஷ்) ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ஜனநாயக நாடாக மலர்ந்தது. பிரதமர் இந்திரா காந்தியை, அன்று பாராளுமன்றத்தில், வாஜ்பாய் அவர்கள், துர்க்கா தேவி என மனம் திறந்து பாராட்டினார். இந்தியாவின் இராஜ தந்திரம், இந்தப் போரில் சீனா எந்த விஷமத்தனமான வேலையையும் செய்ய இயலாமல் தடுத்தது. அன்று இந்திரா காந்தியை 'நேரு பேரரசின்
(Dynasty) இளவரசி' என யாரும் அவதூறு செய்யவில்லை. 

போர் உச்ச கட்டத்தில் இருந்த போது, அமெரிக்காவின், வலுமிக்க ஏழாவது கப்பற்படை (USS Enterprises) இந்து மகா சமுத்திரத்திற்குள் பிரவேசித்தது. அணுஆயுதங்களைத்  தாங்கிய ஏவுகணைகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைத் தாங்கிய அக்கப்பல் கூட்டம், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டவரைப் பாதுகாப்பாக மீட்டுச் செல்ல அனுப்பி வைக்கப்பட்டதாக அமெரிக் 'நிக்சன்' அரசு அறிவித்தாலும், நோக்கம் இந்தியாவை அச்சுறுத்தவும், கிழக்கு பாகிஸ்தானின் விடுதலையை தடுக்கவும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சோவியத் யூனியனின் இரண்டு குழுக்களாக விளாடிவாஸ்டக்கிலிருந்து, குரூயிஸ் மற்றும் டெஸ்ட்ராயர்களும் (Cruises and Destroyers) அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கிக் கப்பலும் இந்து மகா சமுத்திரம் நோக்கி அனுப்பப்பட்ட செய்தி கிடைத்ததும், சூழ்நிலை தலைகீழாகப் போனது. டிசம்பரில் 18 ஆம் தேதி முதல் ஜனவரி, 1972 முதல் வாரம் வரை, ஏழாவது கப்பற்படையை சோவியத் கப்பல்கள் பின் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஏழாவது கப்பற்படை வந்த சுவடு தெரியாமல் திரும்பியது. வங்க தேசம் மலர்ந்தது. இதனால் பாகிஸ்தானின் வலிமை பாதியாகக் குறைக்கப் பட்டது. இந்திரா காந்தி தலைமையிலான அரசுதான் இதைச் சாதித்தது. இந்த வரலாறை யாரும் மறைக்கவோ, மாற்றி எழுதவோ முடியாது. ஒரு மொழியைக் கொண்டு இன்னொரு மொழி மேல் ஆதிக்கம் செய்ய முனைந்தது ஒரு நாட்டையே இரண்டாகப் பிளந்ததில் முடிந்தது என்ற பாடத்தை நம்மில் யாரும் கற்கத் தவறக்கூடாது. 

1967 இந்திய-சீனப் போரில் இந்தியத் தரப்பில் 80 வீரர்கள் பலியாயினர். சீனா ஏறத்தாழ 400 வீரர்களை இழந்தது. இதற்குப் பின், எட்டாண்டுகளுக்குப் பிறகு  1975 இல் நடந்த மோதல் குறிப்பிடத்தக்கது. '1967 இல் நடந்த போர்தான் கடைசியாக நடந்தது என்பதும், 1975 இல் நடந்தது ஒரு சிறு விபத்து என்பதும் உண்மையுடன் ஒத்துப் போகாத ஒன்று', என முன்னாள் வெளியுறவுச் செயலரும், சீனாவில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவருமான நிருபமா ராவ் கூறியிருந்தார். இத்தாக்குதல் அக்டோபர் 20, 1975 அன்று அருணாசலப் பிரதேசத்தில் துலுங் (Tulung La) கணவாய்ப் பகுதியில் நடந்தது. அஸ்ஸாம் ரைஃபிள் பிரிவைச் சேர்ந்த ஆறு வீரர்கள் வழக்கமான ரோந்துப் பகுதியில் ஈடுபட்டிருந்த போது, சீனப் படைக்குழு இந்தியப் பகுதிக்குள் வந்து கல்சுவரைக் கட்டி, அதற்குப் பின் ஒளிந்திருந்து தாக்கியதாகக் கூறப்பட்டதை சீனா மறுத்தது. எட்டு நாட்களுக்குப் பிறகு அவரது உடல்கள் மீட்கப்பட்டன. ஏறத்தாழ ஐநூறு மீட்டர் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி இத் தாக்குதல் நடத்தப் பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த ஆண்டு சிக்கிம் 22வது மாநிலமாக, அந்நாட்டு மக்கள் ஓட்டெடுப்பு மூலம் விருப்பம் தெரிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பின், இந்தியாவுடன் இணைந்தது. சீனா, சிக்கிமை இந்தியா இணைத்துக் கொண்டதாகக் கூறி, அதை ஏற்க மறுத்தது. இந்த இணைப்பும், சீனாவின் ஒளிந்திருந்து தாக்குதல் நடத்தக் காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த மோதல் நடந்த பின் 45 ஆண்டுகளில் எந்த உயிர்ச் சேதமும் இல்லை என்ற சாதனை நிலை இப்போது முறியடிக்கப்பட்டு பெரும் மோதலும், போருக்கான பதற்றமும் எல்லையில் ஏற்பட்டுள்ளது. என்ன காரணம்? பார்ப்போம்.



Friday, June 26, 2020

கொரோனா காலச் சிந்தனைகள்-பகுதி 2-அ.

இந்திய-சீன எல்லைச்  
               சண்டை.

இந்திய சீன எல்லைச் சண்டை என்றவுடன் 1962 இல் நடந்த இந்திய சீனப்போர்தான் நினைவுக்கு வரும். இன்றைய தலைமுறைக்கு அது வரலாறாக மாறிப் போன ஒன்று. பலருக்கு அது பற்றிய விபரங்கள் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அப்போரின் பின் விளைவுகள், இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஜவஹர்லால் நேருவின் மறைவுக்கும் அது காரணமாக அமைந்தது என்னும் கருத்து இன்றும் உலவி வருவதை மறுப்பதற்கில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளும் இந்திய அரசின் வர்க்கத் தன்மை குறித்தும், புரட்சியை நடத்த எவ்வழியைத் தேர்வு செய்வது என்பது குறித்தும் ஏற்பட்ட தத்துவார்த்த வேறுபாடுகளால் தலைமை, இரு அணிகளாகக் கட்சிக்குள் பிரிந்து செயல் பட்ட நேரம். இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வென்று உலகைக் காத்த பெரும்பங்கை சோவியத் யூனியன் செய்தாலும், அதற்கு கொடுத்த விலை நேச நாடுகளைவிட பன்மடங்கு அதிகம். நாட்டின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு, மக்கள் வாழ்க்கை பெருஞ்சோகமான சூழ்நிலையில் மீண்டும் தன்னை உலக அரங்கில் வலிமை வாய்ந்த நாடாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் அதற்கு இருந்தது. எனவே சோசலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புவது என்னும் முனைப்பிற்கே முன்னுரிமை தர வேண்டியிருந்தது. மீண்டும் ஒரு போர் என்பதை நினைத்துப் பார்க்கவே தயாரில்லை. சமாதான சகவாழ்வு மூலம் ஏகாதிபத்திய முகாமோடு முரண்களைத் தவிர்த்து அமைதி வழியில் நாட்டை புனரமைக்க எடுத்த நிலைபாடு, சீனாவுக்கு  ஏற்புடைத்ததாக இல்லை. மாவோ தலைமையில் 1949 இல் புரட்சி வெற்றி அடைந்த பிறகு, நாட்டை முன்னேற்ற வேண்டிய அவசியம் அதற்கும் இருந்தது. ஆனால் ஏகாதிபத்திய நாடுகளோடு சமாதானம் என்ற சோவியத் யூனியன் நிலையை சீனா ஏற்கவில்லை. வர்க்க சமரசம் செய்து கொண்டு உலகின் மற்ற பகுதிகளில் நடைபெற வேண்டிய புரட்சியை பலவீனப் படுத்துவதாகக் குற்றம் சுமத்தியது. இந்த அணுகுமுறையில் வந்த வேறுபாடு உலக கம்யூனிச இயக்கங்களிலும் பிரதிபலித்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இந்த கருத்து வேறுபாடு தலைமையில் இரு அணிகளை உருவாக்கியது. இறுதியில் இந்திய சீனப் போருக்குப் பின் 1964 இல் கட்சி இரண்டாகப் பிளந்ததில் முடிந்தது. 

நமது இராணுவம் குறித்த தவறான கணிப்புகளாலும், சீனாவின் மீதான நம்பிக்கையாலும், முன் கூட்டிய தயாரிப்புகளை காலத்தே நமது அரசாங்கம் செய்யாததாலும் போரில் பெரும் பின்னடைவை இந்தியா சந்திக்க வேண்டிவந்தது. தொலை தூரம் இந்திய எல்லைக்குள் முன்னேறிய சீனாவின் மக்கள் விடுதலைப் படை (People's Liberation Army) சிறிது நாட்களில் தானே பின்வாங்கியது. ஆயினும், 'அக்சாய் சின்' (Aksai Chin)  பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏறத்தாழ 38,000 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்தோம். இந்தியாவுக்கு வருகை தந்த சீனப் பிரதமர் சூ-யென்-லாய், பண்டித ஜவஹர்லால் நேருவோடு இணைந்து பவனிவந்த காட்சி, இரு நாடுகளின் நட்புக்கு சான்றாக அமைந்தது. 'இந்தி- சீனி பாய், பாய்' என்ற முழக்கம் இரு நாடுகளிலும் எதிரொலித்து ஓய்வதற்குள் சீனப்படையெடுப்பு நம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நேரு மனமொடிந்து போனார். பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் பதவி விலக நேரிட்டது. 

அக்சாய் சின் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் கருத்து வேறுபாடுகள் இன்றும் நிலவுகின்றன. அந்த இழப்பு உண்மையில் இழப்புதானா என்பதை வேறு கட்டுரையில் பார்க்கலாம். பிரிட்டிஷ் இந்தியா என்பதற்கு முன் மொகலாயர் வசமிருந்த பெரும்பகுதி இணைக்கப்பட்டு மொகலாய இந்தியா உருவானது. கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்து நேரடியாக பிரிட்டிஷ் மகாராணியின் ஆட்சிக்கு மாறியபின், நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் வசம் இருந்த நிலப்பகுதிகள், பிரிட்டிஷ் அரசின் வலிமையாலும், தந்திரங்களாலும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கப்பட்டு பிரிட்டிஷ் இந்தியா உருவானது என்பதை யாரும் மறுக்க முடியாது. அகண்ட பாரதம் என்ற குரலை இன்று உரக்க எழுப்புவர்களின் தலைவர்களும் இதை நன்கு அறிவார்கள். பிரிட்டிஷார் வருகையால் ஏற்பட்ட சில நன்மைகளுள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் எல்லை விரிவு படுத்தும் நோக்கத்தால், இன்றைய இந்தியாவுக்குக் கூடுதலான நிலப்பகுதிகள் கிடைத்ததும் ஒன்று. இன்றைய மணிப்பூர், அஸ்ஸாம் ஆகிய இரண்டு பகுதிகளும் அன்றைய பர்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இன்றைய அருணாசலப் பிரதேசத்தின் தவாங், திபெத் தனிநாட்டுக்குச் சொந்தமாக இருந்தது என்பது இன்று நமக்கு கசப்பான உண்மை. இந்தப் பின்னணியில் தான் இந்திய சீன எல்லைப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும். 'கண்மூடித் தனமான தேசபக்தி' என்னும் கண்ணாடி வழி பார்ப்பவர்கள் தன் சொந்த அரசியல் பிழைப்பிற்காக இப்பிரச்சினையை அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார்கள். நிரந்தரத் தீர்வை விரும்பும் ஒவ்வொருவரும் காய்தலும் உவத்தலும் அகற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

1954 ஆம் ஆண்டு இந்திய-சீன பஞ்ச சீல ஒப்பந்தம் கையெழுத்தானது. சமாதான சகவாழ்வு, எல்லைப் பிரச்சினையில் அமைதி வழிப் பேச்சு வார்த்தை, உள்நாட்டுப் பிரச்சினையில் மற்றொருவர் தலையிடாமை, சம மரியாதை, படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் தவிர்ப்பது ஆகியவை கொள்கைகள். ஆயினும் பர்மாவின் (மியான்மர்) பிரதமர், சூ-யென்-லாயை நம்பக் கூடாது என நேருவை எச்சரித்ததை சற்று கவனத்துடன் நேரு பார்க்கத் துவங்கினார். சீனாவின் நடவடிக்கைகளில் தெரிந்த சில மாற்றங்கள் அதை உறுதிப்படுத்தின. ஏற்கனவே, மாவோ சொன்ன உருவகத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 1949 புரட்சிக்குப் பின், சீனா வேகமாகத் தன்னை புனரமைக்கத் துவங்கியது. அப்போது மாவோ, 'திபெத் நமது பகுதி. இன்று தனி நாடாக உள்ளது. சீனாவுக்கு வலது உள்ளங்கை போன்றது திபெத். அதனுடைய விரல்கள் நேபாளம், சிக்கிம், பூட்டான், லடாக் மற்றும் வடகிழக்கு எல்லைப்புற மாகாணம். எனவே விரல்களை உள்ளங்கையோடு இணைக்க வேண்டும் என்று அறைகூவல் விட்டார். 1962 இந்திய சீனப் போரில், நமது தோல்விக்கு நேருவே காரணம் என பழி தூற்றும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு பழைய வரலாறு தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும், நேருவின் மீதான இந்திய மக்களின் மாறா அன்பை சிதைப்பதையே தலையாய நோக்கமாக, அரசியல் கடமையாக ஓய்வின்றி செய்பவர்கள் அதை இருட்டடிப்பு செய்யும் வேலையை மட்டுமே செய்வார்கள். மாவோ சொன்ன ஐந்து விரல்களும் நம் நாட்டு எல்லையை ஒட்டி உள்ளவை. இந்திய அரசு நேருவின் தலைமையில் எடுத்த கொள்கை முடிவுகள், அவை மீதான இடையறாது உறுதியாகத் தொடர்ந்த பணிகள், மாவோவின்- சீனாவின் கனவு சிதைவதில் முடிந்தது. 1959 இல், திபெத்தை, சீன மக்கள் விடுதலைச் சேனை கைப்பற்றியதும், ஆட்சியாளர் தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சம் அடைந்ததும், இந்திய சீன உறவு சீர்குலையத் துவங்கியது. எனவே மூன்று முக்கியமான முடிவுகளை நேரு தலைமையிலான அரசு எடுத்தது. சீனா, காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைக் கோரியது. நாகா மற்றும் மிஜோ அதிருப்தியாளர்களுக்கு புகலிடம் தந்து இராணுவப் பயிற்சி தந்து நமக்கெதிராகக் கலகம் விளைவிக்கத் தூண்டியது. விரைந்து செயலாற்றத் துவங்கினார் நேரு. 

முதலாவதாக, எல்லைப்புறத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிர்வாகம் செய்யவும் IFAS (Indian Frontier Administrative Services) என்னும் இந்திய எல்லைப்புற நிர்வாகப் பணிகள் துவங்கிட ஒரு பரிசோதனைத் திட்டம் தயாரிக்கப் பட்டது. வெளியுறவுத் துறை செயலாளர் இந்த பணிக்கான தேர்வு வாரியத்தின் தலைவர். IAS, IPS மற்றும் IFS பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்கட்டமைப்பு வேலைகளைக் கவனிக்க, அப்பகுதிகளில் நியமிக்கப்பட்டனர். இந்த அமைப்பின் பணி மகத்தானது. 

இரண்டாவதாக, ஜம்மு காஷ்மீரின் பகுதியாக நம் நாட்டோடு இணைந்த லடாக் மற்றும் வடகிழக்கு எல்லைப்புற மாகாணம் (NEFA), நேபாளம், சிக்கிம், பூடான் ஆகிய அண்டை நாடுகளுடன் உடன்படிக்கைகள் கையெழுத்தானது. சிக்கிம் நாட்டிற்கு பாதுகாவலராக
 (Protectorate) இந்தியா விளங்கும் என்பதற்கான உடன்படிக்கைக்குப் பிறகு 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான அரசு, சிக்கிம் மக்களின் கருத்தொற்றுமையோடு, மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, இந்தியாவின் இருபத்தியிரண்டாவது மாநிலமாக இணைத்தது. NEFA அருணாசலப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இன்னொரு மாநிலமாக நம்மோடு இணைக்கப்பட்டது. இந்த சாதனைகளைச் செய்தது யார்? எந்த அரசு? 'அக்சாய் சின்னை' நேரு இழந்தார் என பரப்புரை செய்பவர்கள், இதை மக்கள் முன் சொல்லத் துணிவார்களா? போடப்பட்ட ஒப்பந்தங்கள் காலாவதியாகும் போது, தேவைக்கேற்ற புதுப்புது மாற்றங்களைச் செய்து அவைகளைப் புதுப்பிக்கும் வேலையையும் முந்தைய அரசுதான் செய்தது. நேபாளம், எல்லை சம்பந்தமாக பேச்சு வார்த்தைக்கு பலமுறை வேண்டுகோள்கள் விடுத்தும், அதை தட்டிக் கழித்ததோடு புதிய தேசப்படத்தை தன்னிச்சையாக பாஜக அரசு வெளியிட்டதால், காலம் காலமாக மத, பண்பாட்டு ரீதியில் தொடர்ச்சியான வலிமை வாய்ந்த நட்புறவு முற்றாக சிதைந்தது. விளைவு? அந்நாட்டு பாராளுமன்றம் இதுவரை இந்தியப் பகுதிகளாக இருந்த லிபிலேக், காலாபாணி மற்றும் லிபிதூரியா ஆகிய எல்லைப்புற பகுதிகள் தங்களுடையது என அறிவித்து, அவைகளை உள்ளடக்கிய தேசப்படத்தை அதிகாரப் பூர்வமாக்கும் வண்ணம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தமும் செய்து தீர்மானத்தை நிறைவேற்றி விட்டது. 
அழுத்தமாக இந்த அரசும், பிரதமரும் வழக்கம் போல மவுனம் சாதிப்பதிலிருந்து வெளியுறவில் நமக்கேற்பட்ட தோல்வி வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

மூன்றாவதாக, திபெத்திலிருந்து அடைக்கலம் அடைந்த தலாய் லாமாவையும், அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களையும் நேரு அரசு 1959 முதல் காப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் வந்தாலும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக அது தொடர்வதற்கு இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். இந்திய அரசு அவ்வமைப்பை அங்கீகரித்ததால், சீனா, அருணாசலப் பிரதேசம் இந்தியாவைச் சேர்ந்தது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த அரசியல் தந்திரத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்குப் பதில் இப்போதைய அரசு என்ன செய்யப் போகிறது என்னும் கேள்வி அனைவரின் மனங்களிலும் எழுவது நியாயம்தானே!

ஜனநாயக நெறிமுறைகளைச் சற்றும் பாராது, பெரும்பான்மை பலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எதையும் செய்துவிட முடியும் என்னும் போக்கை யார் மேற்கொண்டாலும் அதன் விளைவை நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது பொது விதி. இது முதல் கட்டம். அதற்கான விலையை சம்பந்தப்பட்ட அரசு தந்து மக்கள் முன் அம்பலப்பட்டு போவது என்பது அடுத்த கட்டம்.

பதவிக்கு வந்து ஆறாண்டுகளில் ஒன்பது முறை, நினைத்தவுடன் சொந்த ஊருக்குப் போவதுபோல, சீனாவுக்கு திக்விஜயம் செய்த ஒரே பிரதமர் மோடி அவர்கள்தான். (Protocol) வரையறுக்கப் பட்ட மரபு சீர் முறைமைகளை எல்லாம் பாராது, பயணம் செய்தும், சீன அதிபருக்கு தமிழ் பாரம்பரிய உடை அணிவித்து மாமல்லபுரம் அழைத்து வந்து ஊடக ஒளி வெள்ளத்தில் மிதந்தும் சாதித்தது என்ன? 1975 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மோதலில் ஏற்பட்ட இரு தரப்பு உயிரிழப்புகளுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான முறைகள் ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடைபெற்றாலும், இரத்தம் சிந்துதல் இல்லை என்னும் 45 ஆண்டு கால சாதனை ஒரே நாள் இரவில் நொறுக்கப்பட்டு நம் தரப்பில் 20 வீரர்களும், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் சீனத் தரப்பில் அதிகாரப்பூர்வ மற்ற உயிர்ச் சேதமும் ஏற்பட்டது. இதுவரை கத்திமேல் நடப்பது போல காத்துவந்த நட்புறவு சிதையும் சூழ்நிலைக்கான காரணம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. இது பொதுவிதி.

ஆகஸ்ட் மாதம், 2019 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரம்பரிய நிலையை மாற்றி பிரிவு 370 சிறப்புத் தகுதியை ரத்து செய்தது முதல் பிரச்சினை துவங்கியது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை, சீனா பகிரங்கமாக ஆட்சேபித்தது. 'சீனாவின் எல்லை இறையாண்மையை சிறுமைப் படுத்தும் முயற்சி, இதை ஏற்க முடியாது', என அறிவித்தது. இதை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை எதையும் கேட்க வேண்டியதில்லை என்னும் ஆணவப் போக்கு அதிகரிக்கத் துவங்கியது. இதன் உச்சகட்டமாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரையும் (POK), அக்சாய் சின் பகுதியையும் சேர்த்து ஏறத்தாழ 43,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான பகுதிகளை மீட்கப் போவதாக முழங்கினார். இதை வழக்கமான வெற்று முழக்கம்தான் என இந்திய மக்கள் எடுத்துக் கொண்டதைப் போல் அல்லாமல் சீனா மிகவும் கூர்மையாகப் பார்க்கத் துவங்கியது. ஏனெனில், அக்சாய் சின் பகுதியை விட, பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் சீனா முன்னெப்போதும் இல்லாத அளவில் இப்பகுதி வழியே செல்லும் சீன-பாகிஸ்தான் பொருளாதார நீள் பாதை திட்டத்தில் (China-Pakistan Economic Corridor) பெரும் அளவில் நிதி முதலீடு செய்துள்ளது. எனவே சீனா இதற்கேற்ப முந்திக்கொண்டு காய்களை நகர்த்தத் துவங்கி விட்டது. சீன வெறுப்பு பிரச்சாரங்கள் இந்தியாவில் பல்வேறு இன, மத வெறிக் கும்பல்களால் கிளப்பி விடப்பட்டதை தடுக்கும் எண்ணம் ஆணவத் தலைவர்களுக்கு அறவே இல்லை. இப்போக்கிற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை.

அமெரிக்க சீன









Wednesday, June 24, 2020

உயிர் பாதுகாப்பும், உரிமைப்    
                பாதுகாப்பும்.

கொரோனா தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதம் முதல் உலகம் முழுதும் மக்கள் படும்துயர் சொல்லமுடியாத அளவிற்குப் பெருகி விட்டன. உயிர் இழப்புகளும், உடைமை இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பொருளாதார பலம் மிக்க அமெரிக்கா, காட்டுத் தீயாய் பரவி நாசம் செய்யும் கொடுமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணருகிறது. அந்நாட்டு அதிபர் மீண்டும் அதிபராகும் கனவில் தினமும் முன்னுக்குப் பின் முரணாக அதிரடி அறிக்கைகளை வெளியிட்டு தன் இயலாமையை மென்மேலும் நிரூபித்து வருகிறார். மாதக்கணக்கில் தனித்திருப்பதால் பொதுமக்களும், நோயைக் கட்டுப்படுத்தும் பணிகளை இடையறாது செய்ய வேண்டிய காரணத்தால் அப்பணிகளில் ஈடுபடும் பலதுறை அதிகாரிகளும், ஊழியர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாவதால் பல்வேறு மனரீதியான, உடல்ரீதியான நோய்களுக்கு ஆளாகின்றனர். ஆனாலும் சமூகக் கட்டுக்கோப்பையும், அமைதியையும் சட்டம் ஒழுங்கு மூலம் பாதுகாக்க வேண்டிய காவல்துறையும், நீதித் துறையும் தங்களுக்கான கூடுதல் பொறுப்பை மறந்து விட்டார்களோ என பாமர மக்களே எண்ணும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

'லாக் டவுன்' விதிகளை மீறியதாக பொதுமக்கள் மீது போடப்படும் வழக்குகள், வாகன ஓட்டிகள் மீதும், வணிகர்கள் மீதும் விதிக்கப்படும் தண்டத் தொகையின் மதிப்பு ஆகியவை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போவதைப் பார்த்து மக்கள் சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கிறார்கள் என்பதைப் போன்ற தோற்றம் உண்டாகிறது. இது உண்மையா? எனில், இல்லை. தவறு செய்பவர்கள் சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் ஒட்டு மொத்தமாக சமூகமும் அவ்வாறு செய்கிறது என்ற முடிவுக்கு வருவது தவறு. துறை வாரி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும். ஆனால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுள் யாரோ ஒரு சிலரின் நடவடிக்கை, ஒட்டுமொத்த துறையின் மீதான நம்பிக்கை இன்மையையும், அதன் மூலம் அரசுக்கு அவப் பெயரையும் உண்டாக்கி விடுகிறது. குறிப்பாக காவல்துறை மற்றும் நீதித்துறை. இத்துறைகள் மீதான சாமான்ய மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது நாட்டுக்கு நலம் பயக்காது. அரசியலமைப்பு முறைக்கே ஆபத்தாக முடியும்.

சட்டத்தின் ஆட்சி என்ற உயர்ந்த பதம், அதைக் காக்க வேண்டியவர்களாலும், நடைமுறை படுத்துபவர்களாலும் தங்கள் மனம் போன போக்கில் தங்களது கையில் உள்ள அதிகாரம் என எண்ணி சிதைக்க முற்படும் போது அதனால் பாதிப்பை எதிர்கொள்ளும் சமுகத்திற்கும், தனிமனிதர்களுக்கும் யார் பாதுகாப்பைத் தர முடியும்? சமூகமே உரிமைகளுக்காய் குரல் கொடுக்கும் போது, அதன் வீச்சு வேறாக இருக்கிறது. தனிமனிதன், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளின் கீழ் செயல்படும்போது, சட்டத்தைக் காக்கும், கையாளும் கரங்கள் இரும்புக் கரங்களாய் மாறி அடக்கவும், அச்சுறுத்தவும் முயல்வது ஜனநாயக நாட்டில் அறவே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. 

கடையை குறித்த நேரத்தில் மூடவில்லை என்பதால், தந்தை, மகன் இருவரும் தாக்கப்பட்டு, காவல் நிலையத்தில் ஒருவர் பின் ஒருவராக இறந்து போன சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்ட நிகழ்ச்சி அது நடந்த அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் பெரும் கொந்தளிப்பை கடந்த வாரங்களில் ஏற்படுத்தியது. இங்கே நடந்த நிகழ்ச்சி அதைவிடக் கொடூரமானது. கொடுமைக்குக் காரணமானவர்கள் மாற்றப் படுகிறார்கள். மக்கள் எதிர்ப்பு வலுத்ததும், தற்காலிக பணி நீக்கம் செய்யப் படுகிறார்கள். சட்டத்தை உறங்காமல் இருக்கச் செய்ய நாம் விழிப்பாக இருப்பதன் அவசியம் புரிகிறது.  தாய், தந்தையை காவலரின் தாக்குதலில் இருந்து தடுக்க முனைந்த சிறுவனை மற்ற காவலர்கள் தாக்கிய கொடுமையைப் பார்த்தவர்களுக்கு 'காவல்துறை மக்கள் நண்பன்' என்னும் வாசகத்தை எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? போக்குவரத்துப் பிரிவு காவலர் கைகளில் தவழும் அபராதம் விதிக்கும் கருவி, வாகன ஓட்டிகளுக்கு கையெறி குண்டாகக் கண்ணுக்குத் தெரிகிறது. எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்பது போல, எப்போது அபராதம் விதித்து அந்த சீட்டு வரும் என்பது தெரியாமலே வாகனத்தை, ஓட்டவும், நிறுத்தவும் வேண்டும். அவர்கள் நினைத்தால் எந்த ஆவணத்தையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் 'மூட்' சரியில்லை என்றால் எந்த நடைமுறையையும் பின்பற்றாமலே அபராத சீட்டை நிறுத்தி உள்ள வாகனத்தில் வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதில் நாமும் அவரும் கையெழுத்திட வேண்டும் என்ற விதி அவர்களுக்குத் தெரியாத ஒன்று. ஏன், எதற்கு என கேட்பதற்குக்கூட வழியின்றி அபராதத்தை செலுத்த வேண்டும். இவர்கள் கையில் போவதற்குப் பதில் அரசுக்குப் பணம் போகிறது என்ற திருப்தியோடு குடிமக்கள் செல்ல வேண்டியதுதான். சட்டத்தின் நோக்கம் தடம்புரண்டு, சட்டம் இவர்கள் விரும்பும் போது விழிக்கும்; இல்லை எனில் உறங்கும் என்னும் சூழ்நிலை. இதற்கு என்ன தீர்வு?

சட்டத்தை செயல் படுத்துபவர்கள் இப்படி என்றால், சட்டத்தைக் கொண்டு சமூகத்தைக் காக்கும் பொறுப்பில் உள்ள நீதிமன்றங்கள் செயல் படும் விதம் வேதனையாக உள்ளது. உயர் ஜாதி ஸ்வாதி கொலையில்,  கொலையாளி என சொல்லப்பட்டவர் சமூகத்தில் அடித்தட்டில் பிறந்தவர். அவர் தண்டனைபெறும் முன்பே வாழும் தகுதியை இழக்கும் நிலை! ஆனால் கவுசல்யா- சங்கர் வழக்கில், சங்கர் கொலை செய்யப் படுகிறார். பின்னணியில் யார் என்பது அனைவருக்கும் தெரியும். கீழமை நீதி மன்றம் குற்றவாளிகளுக்கு அளித்த மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டும், முக்கிய நபருக்கு விடுதலையும் தந்து நீதி தன் செங்கோலை வளைத்துக் கொள்கிறது. 

அரசு மற்றும் அந்த இயந்திரத்தின் பாகங்களாகச் செயல்படும் இத்துறைகள் செய்யும் குளறுபடிகளை சுட்டிக் காட்டவும், சரிசெய்யப் படாத சூழ்நிலையில் அறவழியில் குடிமக்கள் போராடவும் முனைவது சட்ட நடைமுறைகளில், ஜனநாயக நெறிமுறைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அவ்வாறு செய்யும் போது அவர்களை தேசத் துரோகிகளாகப் பார்க்கும் கொடுமை மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு நாளுக்கு நாள் அதிகரித்தக் கொண்டே போகிறது. 
பல எடுத்துக் காட்டுகளை சொல்லலாம். வடமாநிலங்களில் கடைபிடிக்கப்படுகின்ற நடைமுறைகள் தமிழகத்திலும் வரத் துவங்கி உள்ளது கவலை தரத்தக்கது.

குடியுரிமை திருத்த  சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாதக்கணக்கில் நடைபெற்ற போராட்டங்களை, உயிர் இழப்புகளை நாம் அறிவோம். கொரோனா பாதிப்பை ஒட்டி எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அப்போராட்டங்களை மட்டுப்படுத்தி உள்ளன. நாடு முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். வழக்கு போடப்பட்டவர்கள் பிணையில் வெளியே வந்து நீதிமன்ற விசாரணைக்குக் காத்திருக்கிறார்கள். 
ஆனால் இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு திருமணமான மாணவி கைது செய்யப்படுகிறார். அவரைப் பிணையில் விடுவதற்கு நீதிமன்றம் மறுக்கிறது. மீண்டும் மீண்டும் அவர் முன்வைக்கும் வேண்டுகோள்கள் நிராகரிக்கப் படுகின்றன. நான்காவது முறை மறுக்கப்பட்டு சிறை வாசம் செய்ய வேண்டிய அவலம். அவ்வாறு மறுக்கப்படும் அளவுக்கு அவர் செய்த குற்றம்? போராட்டத்தில் ஈடுபட்டு துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் என்பதை விட வேறு எந்தக் கொடும் குற்றமும் அவர் செய்யவில்லை. இத்தனைக்கும் அந்த மாணவி கருவுற்ற பெண். அவருக்கு சட்டத்தின் ஆட்சி தரும் அனுபவம் எவ்வளவு கொடியது? 

இது போன்ற செயல்களில் ஓர் அரசியல் கட்சி தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், ஆட்சி மீதான அதிருப்தி எழும் போது அதை அடக்கி ஒடுக்கவும் செய்வது இந்திய நாட்டில் வழக்கமாகிவிட்டது. அக்கட்சியின் பண்புநலன் பற்றி மக்கள் தெரிந்துகொண்டு அதற்கான நீதி வழங்குவதும் இங்கு பழக்கமான ஒற்றுதான்.

ஆனால் ஒரு கருவுற்ற ஒரு இளம் மாணவிக்கு இந்த அனுபவத்தை நீதிமன்றங்களே தரத்துவங்கி இருப்பதுதான் சட்டத்தின் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. 




Tuesday, June 16, 2020

In the back ground of Corona invading the earth, many untoward things happen daily around the world spuriously and unexpectedly. Every country has its own experience. They taste the 'cause and effect', cooked by themselves. India under the rule of right reactionaries, is subjected to multifaceted attacks from all corners of her boundaries. Inside the land Corona attacks uncheckedly despite months-together lockdown and other preventive measures. The spread is universal and auto created virus threatens the globe. But other troubles are created by whom? We have to think over the reasons for such conditions unbiasedly. Nepal, Pakistan as usual, China are all now our headaches. While we have to pay attention to stop the further spread of covid-19, we are entangled into these confrontation. The mishandling of issues and lethargic attitude towards the settlement bring us to the Crossroads.

Let us analyse.

Saturday, June 13, 2020

கொரோனா சிந்தனைகள்- பகுதி 1

1.எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் துவங்கி உலக நாடுகளுள் ஏறத்தாழ199 நாடுகளைப் பீடித்து, காட்டுத்தீயெனப் பரவி வரும் கொரோனாவுக்கு நமது நாடும் விதிவிலக்கல்ல. உலகின் வலிமை மிக்க அமெரிக்கா, இந்நோயின் நட்டநடு மையமாகி இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய செய்திகள் அதிர்ச்சி தரத் தக்கதாகவும், நம்ப முடியாத வகையிலும் உள்ளன. இந்நோய்க்கான தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லாத இந்நிலையில் இந்நோயைக் கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மருத்துவம் மற்றும் கிருமிகள் குறித்த ஆய்வுகள் அடிப்படையில் அந்தந்த நாட்டு ஆய்வறிஞர்கள் தரும் ஆலோசனைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 

உலக சுகாதார நிறுவனம், தந்த வழிகாட்டுதல், சோதனை, சிகிச்சை, தொற்றைக் கண்டுபிடித்தல் (Test, Treat, Trace) என்பதாகும். இதை எல்லா நாடுகளும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. ஆனால் பரவும் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்த நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சோதனை வேகத்தை அதிகப்படுத்தி, (Test, Test, Test) பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப் படுத்தி சிகிச்சையைத் தீவிரப் படுத்தியதால், நோயின் பரவும் வேகத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி விட்டனர். முன் அனுபவமின்றி முதல் தாக்குதல்களுக்கு ஆளான இரண்டாம் பெரிய பொருளாதார வல்லரசான சீனா, அதிக மக்கள் தொகையும், மக்கள் நெருக்கமும் கொண்டதால் 'தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்தல்' என்னும் வழியை மேற்கொண்டது. முதல் தாக்குதல் ஹூபே மாகாணத்தின் (Province) தலைநகரான வுகான் பெருநகரில்! ஒருமாத ஊரடங்கு! மாகாணம் முழுவதற்கும் நீட்டிக்கப்பட்டது. மக்களுக்கு பழக்கமில்லாத ஒன்று. வெளிநாட்டு மக்கள், வெளிமாநில மக்கள், வெளியூர் மக்கள் என அனைவருக்கும் எங்கும் ஒரு மாதத்திற்கு நகரமுடியாத சூழ்நிலை! ஆனாலும் கடும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாக வேண்டிய புறச்சூழ்நிலை! சவால்களை சந்தித்தனர். அசுர வேகத்தில் பத்து நாட்களுக்குள் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டிமுடித்த அதிசயத்தை அகிலமே பாராட்டியது. சீன அரசின் நடவடிக்கைகளை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இறுதியில் நோயை வென்று மக்கள் உயிர்ச் சேதாரம் அதிகரிக்காது, மேற்கொண்டு பரவல் இல்லாமல் தடுத்து வெற்றி பெற்றுள்ளது.

சீனாவைப் போன்றே இயற்கை சூழ்நிலை, நில அமைப்பு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றில் பொருந்தி வருகிற நமது நாடும் சீனாவின் நடைமுறையை மேற்கொண்டதில் வியப்பில்லை. 

மற்ற நாடுகளிலிருந்து குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த வண்ணம் இருந்த நோய் பற்றிய பல்வேறு செய்திகள்,  இங்கு நமது நாட்டில் பல மாநில அரசுகளை மத்திய அரசுக்கு முன்னரே நடவடிக்கைகளைத் துவங்க உதவின. வெளிநாடுகளிலிருந்து அதிக பயணிகள் வரும் மாநிலங்களான மகாராஷ்டிரம்,கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, தமிழ்நாடு, புதுவை, கர்நாடகம்,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், மக்கள் விழிப்புணர்வு, அரசியல் செயலூக்கம் நிறைந்த தென்னிந்திய மாநிலங்களும், மேற்கு வங்கமும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க முனைந்தது பாராட்டுக்குரியது. கூட்டம் போடுவது கூடாது, தனித்திருப்பதே பாதுகாப்பு என பிரதமர் அகல நெஞ்சின் ஆழத்திலிருந்து வேண்டுகோள்கள் விடுத்த போது, மத்தியப் பிரதேசத்தில் மட்டும் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின் அரியணை ஏறும் வைபோகங்கள் எந்தத் தடையுமின்றி அரங்கேறின.

கடும் நிதி நெருக்கடிக்கிடையே, பல மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வந்திருக்கிறது. மத்திய அரசு, சீனாவைப் பின்பற்றி, ஒரு மாதத்திற்குப் பதிலாக 21 நாட்கள், ஆனால் ஒரு மாநிலத்திற்குப் பதிலாக, நாடு முழுவதுக்குமான ஊரடங்கை அறிவித்தது. எழுபது விழுக்காடு மக்கள் வாழுகின்ற 
ஏழரை லட்சம் கிராமங்களைக் கொண்ட, இந்திய மக்கள் ஏற்றுக் கொண்டனர். விதி மீறல்கள், சட்டத்தைப் பின் பற்றாமை ஒரு பக்கம் இருந்தாலும், பெரும்பான்மையாக மக்கள் கடும் வாழ்க்கை நெருக்கடிகளுக்கிடையே ஊரடங்கை நடைமுறைபடுத்துவதில் ஒத்துழைக்கின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஊரடங்கை அறிவித்த மத்திய அரசும், அறைக்குள்ளே அமர்ந்து ஆணைகளிட்டது. 

தேவையான நேரத்தில் தேவையான நிதி உதவி மத்திய அரசிடமிருந்து இல்லை எனில், நிதிப் பற்றாக்குறையால் திண்டாடும் மாநில அரசுகள் என்ன செய்ய இயலும்?  ஆனாலும் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மக்கள் எதிர்வினைகளைப் புரிந்திருந்ததால், செயல்படுத்தி வருகின்றனர். ஆணைகளை இடவும், அவ்வப்போது அறிவுரைகள் வழங்கவும் வாய் திறந்த பிரதமர், நிதி ஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் துவக்கத்தில் வாய் திறக்காதது மக்களை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நிலைமை சிக்கலாகிக் கொண்டிருப்பதை மத்திய அரசு அதிகாரிகளும், மாநில அரசுகளும் உணர்த்திய பின், மாண்புமிகு பிரதமர், நாடு முழுவதுக்குமாக 15,000 கோடி ரூபாயை ஒதுக்குவதாக வாய் மலர்ந்தார். பெருங்கடலில் கரைத்த பெருங்காயம்! 

சிறிய மாநிலமான கேரளா, அம்மாநிலத்திற்கென மட்டும் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கிய போதுதான் இந்தியா முழுவதுக்கும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை எவ்வளவு அற்பசொற்பமானது என்பதை மக்கள் உணர்ந்தனர். குடியரசுத்தலைவர் மாளிகை விரிவுக்கும், அழகு படுத்தவும் மூன்றாண்டு நிதியாக 20,000 கோடி ஒதுக்கிய மோடி அரசுக்கு நாடே எதிர்கொண்டிருக்கும் பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற 15,000 கோடி ரூபாய் தான் ஒதுக்க முடிந்தது மக்கள் மனதில் கோபக்கனலைக் கிளப்பி விட்டது. முன்னாள் நிதி அமைச்சர் திரு. ப.சிதம்பரம் அவர்கள் மத்திய அரசு செய்ய வேண்டிய கடமைகளாக பத்து யோசனைகளைத் தெரிவித்தார். 

எங்களிடமே பொருளாதார சரிவைப் போக்கவல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள் என பாராளுமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் வழக்கம் போல நீட்டி முழக்கிய நிதி அமைச்சர் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கவென்று அடுத்த நாளே நலத் திட்டங்களை, பிரதமருக்குப் பதிலாக அறிவிக்க நேர்ந்தது. ஏறத்தாழ 5,00,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என முன்னாள் நிதியமைச்சர் சொன்ன பிறகு, 1,70,000 கோடி ரூபாய்களுக்கான நலத் திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்பு இறுதியானதா எனக் கேட்டதற்கு நிலைமையை ஒட்டி பரிசீலிப்பதாகவும் சொன்னார். 

இந்த அறிவிப்புகளில் மாநில அரசுகளுக்கென புதிய நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லை. ஏனெனில் இந்த அறிவிப்பு வந்ததற்குப் பிறகுதான் தமிழக முதலமைச்சர் முதலில் 4,000 கோடி ரூபாய் வேண்டும் என்றும் அடுத்த நாளே 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் மூலம் கேட்டுள்ளார். இதிலிருந்தே மாநில அரசுகளின் நிதி நெருக்கடியைப் புரிந்துகொள்ள முடியும். முன்னாள் நிதி அமைச்சர், மத்திய அரசு வாரி சுருட்டி வைத்திருக்கும் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் GST வருமானத்திலிருந்து எளிதாக போதுமான நிதியை ஒதுக்கலாம் என வெளியே சொன்ன பிறகும், நிதியை எங்கிருந்து பெறுவீர்கள் என இந்நாள் நிதியமைச்சரை திரும்பத்திரும்ப நிருபர்கள் கேட்டபோது பதில் சொல்லாமல் நழுவியது ஏன் என்பது புதிராகவே உள்ளது.

சரி, இப்போது அறிவிப்புகளைப் பற்றி பார்ப்போம். நிதி அமைச்சர் அளித்த நிதி ஒதுக்கீடு 1,70,000 கோடி ரூபாய்கள். இந்தியாவைப் பொறுத்து இந்த எண் ஒரு மாயாஜால எண். ஆம். 2G ஊழல் எனப் பேசப்பட்டபோது அதன் மதிப்பு இந்தத் தொகைதான். அனில் அம்பானி தன் R.Com. தொலைத்தொடர்பு கம்பெனிக்காக வாங்கிக் கட்டாத கடன் 1,75,000 கோடி. ஏர்டெல், வோடோஃபோன் கம்பெனிகள் அரசுக்குக் கட்டாமல் ஏமாற்றி வரும் தொகையின் மதிப்பு 1,76,000 கோடி. சில மாதங்களுக்கு முன் டாடா, அம்பானி வகையறாக்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்ற கடன் தள்ளுபடிக்கான தொகையும் ஏறத்தாழ 1,75,000 கோடி. இறுதியில் நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் அவசரகால வைப்பு நிதியிலிருந்து தானடித்த மூப்பாக எடுத்துக் கொண்ட தொகையின் மதிப்பும் 1,76,000 கோடிதான். இது என்ன மாயமோ!

இப்போது நிதி அமைச்சர் அறிவித்துள்ள 1,70,000 கோடி ரூபாய்களும் மக்களுக்கு நேரடியாகக் கையில் கிடைக்குமா என்றால், அதற்கான பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆம். பளு ஏற்றிய வண்டியை இழுக்கும் குதிரைக்கு முன் தொங்கவிட்ட காரட்டைப் போல, வாய்க்கெட்டாத நிலை!

  1. விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆண்டுக்கு 6,000 ரூபாயில் முதல் தவணை ரூ. 2,000 வங்கியில் போடப்படும் என்ற அறிவிப்பு. இது தேர்தல் வாக்குறுதியாக பாஜக வால் சொல்லப்பட்டு, பின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று தவணைகளாகத் தரப்படும் என சொல்லி இது வரை தராமல் தள்ளிப் போட்ட பணம். கொரோனாவை ஒட்டி தரும் நிதி அல்ல இது. முன்னரே ஒதுக்கிய நிதியை இப்போது இதில் காட்டப்படுவதை என்னவென்று அழைப்பது?

  1. தொழிலாளர்கள் கட்டவேண்டிய அடிப்படை ஊதியத்தில் 12% EPF சந்தாவை மூன்று மாதங்களுக்கு மத்திய அரசே கட்டிக் கொள்ளுமாம். முதலாளிகள் செலுத்த வேண்டிய 12% பங்கையும் அரசே செலுத்த அறிவிப்பு. இதற்கென எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பது சொல்லப்படவில்லை. அது மட்டுமல்ல; யார் யாருக்கு இது பொருந்தும் என்பதில் தான் தன் கெட்டிக் காரத் தனத்தை அரசு மறைக்கிறது. 100 பேருக்கும் கீழ் வேலை பார்க்கும் நிறுவனங்களில், 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மட்டும் என்ற வரையறை பல லட்சக்கணக்கான அமைப்பு சார்ந்த தொழிலாளர்களை விலக்கிவிடுகிறது. BSNL, இரயில்வே போன்ற பொதுத்துறைகளில் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் சமூகப் பாதுகாப்பில்லாத அமைப்பு சாரா ஒப்பந்த ஊழியர்கள் இந்த சலுகையைப் பெற முடியாது. ரூ.15,000  என்ற வரம்பு, அமைப்பு சார்ந்து ஆனால் 15,000 ரூபாய்க்கும் சற்றே அதிகமான ஊதியம் பெறும் அஞ்சல் துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களையும் இந்த பலன் சென்றடையவில்லை. நிதி நெருக்கடியால் நாடெங்கும் மூடப்பட்டிருக்கும் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளில் பல ஊழியர்களுக்கு ஊதியமே இல்லை என்ற சூழ்நிலையில் எவ்வளவு பேருக்கு இந்தப் பலன் கிடைக்கும்?

  1. பி.எஃப், இ.பி.எஃப் பில் இருக்கும் தொகையில் 75% தொகையைக் கடனாகப் பெற்றுக் கொள்ளலாமாம். ஊழியர்கள் சேர்த்து வைத்தப் பணத்தை கடனாகக் கொடுப்பது சலுகையல்ல. அது உரிமை. விழுக்காட்டை அதிகப்படுத்தியது சாதனையா, அதுவும் இந்த நெருக்கடியான நிலையில்? அழுவதா, சிரிப்பதா எனத் தெரியாது கலங்குவது இந்த அரசு உணருமா?

  1. கிராம மக்களின் கண்ணீர் துடைப்பதாக முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி அரசு அவர்களுக்காக அறிவித்த சலுகையைப் பார்ப்போம். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தில் 100 நாட்கள் வேலை செய்பவர்களுக்கு நாள் ஊதியம் ரூ.180 லிருந்து ரூ.202 ஆக உயர்த்தி இருக்கிறார்கள். ஆண்டு முழுவதும் 100 நாட்கள் வேலை கிடைத்து வேலை செய்தால் கிடைக்கும் அதிக ரூபாய் 2000. ஊரடங்கைப் போட்டு முடக்கியபின் அவர்கள் இப்போது வேலைக்குப் போக முடியுமா? ஊரடங்கு முடிந்து போனாலும் வேலை தரப்படுமா? அப்படியே வேலை கிடைத்து அந்த சொற்பப் பலனைப் பெற இன்று வீட்டுக்குள் ஈரத்துணியை அடிவயிற்றில் சுற்றிக்கொண்டு உயிரோடு இருக்கவேண்டும். அப்படித்தானே. மக்கள் வறுமையோடு இந்த விளையாட்டை விளையாட அலாதியான நெஞ்சழுத்தம் வேண்டும். பாசிஸ்டுகளுக்கு இது போன்ற துணிவுண்டு என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.

  1. விதவைப் பெண்கள், ஆதரவற்றோர், உடல் ஊனம் உற்றவர்களுக்கு மாதம் ரூ. 500 உதவித்தொகை. அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி, கொரோனாவின் உடனடித் தாக்குதல்! இந்த சூழ்நிலையில் மாதம் ரூ.500 எந்த அளவுக்குக் கைகொடுக்கும்?

  1. வங்கி மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்களுக்கு வாங்கிய கடனுக்காக மூன்று மாதங்களுக்கு மாதாமாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகையைக் கட்ட வேண்டியதில்லை என ஒரு அறிவிப்பு. தனியார் நிதி நிறுவனங்களைக் கட்டுப் படுத்தாது இந்த அறிவிப்பு என பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள். இது பற்றி தெளிவுபடுத்த நிதி அமைச்சர் தயாரா? இந்நாட்டிற்குள் இயங்கும் தனியார் நிதி நிறுவனங்களை இது போன்ற சூழ்நிலை யில் கட்டுப் படுத்துவது யார்? அது மட்டுமல்ல; நான்காம் மாதம் கட்டும் போது எல்லாவற்றையும் சேர்த்துக் கட்ட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இந்தச் சுமையைத் தாங்க எல்லாராலும் முடியுமா? 

  1. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வரம்பை அதிகரித்து ஓர் அறிவிப்பு. கடன் தொகையை அதிகப் படுத்துவதன் மூலம் கடன் சுமை அதிகமாக்கப் படுவதால் கடனைக் கட்ட முடியாமல் அக்குழுக்கள் செயலிழக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். நிவாரணம் ஏதுமில்லாத அறிவிப்பு.

இவைகளுக்கப்பால் மாநிலம் விட்டு மாநிலம் குடும்பத்தோடு வந்து இருக்க இடமின்றி, நோயினின்றும் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் கால்நடையாகவே பல நூறு கிலோமீட்டர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் கைக் குழந்தைகளோடு நடந்து சொந்த மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கு இந்தத் திட்டத்தில் சொல்ல, செய்ய ஏதும் இருக்கிறதா நிதி அமைச்சர் அவர்களே! கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 7,00,000 கோடி ரூபாய்களுக்கு சலுகை அளிக்க முடிந்த மோடி அரசால், 33 தொழிலதிபர்களுக்கு 76,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்ய முடிந்த இவர்களால், கல்விக்கடனை மட்டும் தள்ளுபடி செய்ய முடியாது. விவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது. இடர் பல ஏற்று விளைவித்த பொருள்களுக்கு நியாய விலை கிடையாது.  எதிர்பாராது சிக்கித் தவிக்கும் இந்தச் சூழ்நிலையிலும்,GST மூலம் 
மாநில அரசுகளுக்குத் தர வேண்டிய, நிறுத்தி வைத்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் முடக்கி வைத்துள்ள மோடி அரசு,ஏதும் செய்ய வழியின்றி ஏழை மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் நாடகத்தை  மட்டும்  நடத்துகிறது. 

வெற்றுக் கண்ணீர் வேலைக்கு ஆகாது! மன்னிப்பு நாடகம் மக்கள் பசிக்கு மருந்தாகாது!

மருத்துவ வசதிகள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கிராமங்களுக்கும், நகர்ப் புறங்களுக்கும் சென்று சேர வேண்டும்.
நோய்த் தொற்று இருப்பதை உறுதிசெய்ய சோதனை மையங்களை அதிக அளவில் எளிய வழியில் மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். காப்பு மருந்துகள் இல்லாத நிலையில், தடுப்பு மருந்துகள் எல்லா இடங்களிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனையில் 25% போதுமான படுக்கைகளை ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது முறையாக செய்யப்பட்டிருக்கிறதா,செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தலமட்டங்களில் வருவாய்த்துறை, ஊரக மற்றும் நகராட்சி அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். ஊரடங்கால் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் ஏழைக் குடும்பங்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் நடைமுறைத் திட்டங்களை உடனே அறிவிக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் தேவை ஏராளமான நிதி. நேரம் பார்த்து நிதானமாக செலவு செய்ய இது சாதாரண சூழ்நிலை அல்ல. பிறப்பிக்கப்படாத அவசர நிலை! 

மக்கள் அரசின் ஆணையை சிரமேற்கொண்டு அத்துணை துயரங்களையும் சகித்துக்கொண்டு நடக்கிறார்கள். விதிவிலக்குகள் எங்குமிருக்கும். 
விதிவிலக்குகளை விதியாகக் கருதி, மக்கள் ஒத்துழைக்கவில்லை; வல்லரசுகளே ஒன்றும் செய்ய இயலவில்லை; வீட்டுக்குள்ளே இருப்பதை மட்டுமே செய்தால் போதும்; பிரார்த்தனை செய்வோம் என்றெல்லாம் சொல்லி மக்கள் மேல் பழி போடுவதற்குப் பதில் தேவையான நிதியை தேவையான நேரத்தில் ஒதுக்கி இந்த பேரபாயத்திலிருந்து நாட்டைக் காக்க ஆவன செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

செயத் தக்க செய்யாமை யானும் கெடும்!


































Friday, June 12, 2020

கொரோனா சிந்தனைகள்

அன்பார்ந்த தோழர்களே, நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்களோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். முதல் கட்டமாக உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா மனித வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட இச் சூழ்நிலை புதிய சிந்தனைகளை உருவாக்கி உள்ளது. உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைந்து, இத் தொடர் கட்டுரையைத் தொடங்குகிறேன் நாளை முதல். வினை, எதிர் வினை ஆற்றுங்கள்.