Wednesday, December 16, 2020

 டிசம்பர் 17 ஓய்வூதியர் தினம். 1982 ஆம் ஆண்டு இந்த தேதியில்தான் திரு. D.S.நாக்ரா மற்றும் சத்யேந்திர சிங் ஆகியோர் 1972 இல் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வந்தது. நீதிபதிகள் Y.V.சந்திரசூட் மற்றும் O.சின்னப்ப ரெட்டி முதலானோர் இடம்பெற்ற அமர்வில்தான் இந்தத் தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஓய்வூதியம் பெறுவதால் பழைய, புதிய ஓய்வூதியர் என்ற வேறுபாடு கூடாது என்ற நிலை ஏற்கப்பட்டது. ஓய்வூதிய மாற்றம் (Pension Revision) என்பதும் பின்னர் ஏற்கப்பட்டது. நமது துறை அரசுக் கொள்கை முடிவு என்ற அடிப்படையில் BSNL என்ற பொதுத்துறையாக 1-10-2000 முதல் மாற்றப்பட்டது. ஆனால் ஓய்வூதியம் பற்றிய எந்த முடிவையும் தொலைத்தொடர்புத் துறை எடுக்க வில்லை. ஏனெனில் பெரும்பாலான பொதுத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இதே நிலை இங்கும் நீடிக்கும் என்பதை உணர்ந்த தோழர். குப்தா, அரசின் கொள்கை முடிவை எதிர்ப்பது என்பதோடு நில்லாமல்,  நாம் பெற்றுக் கொண்டிருக்கும் உரிமைகளைக் காப்பதில் கவனம் குவித்தார். 


ஆகவே ஓய்வூதியம் குறித்து அரசு ஆர்வம் காட்டாததைக் கண்டித்து போராட்ட அறிவிப்பைச் செய்தார். அறிவிப்பை செய்து விட்டு பின் வாபஸ் பெறுவது என்பதற்குப் பதில் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 6,7,8 மூன்று தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது. NFTE, FNTO இணைந்து நடத்திய போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. அதை ஒட்டி போடப்பட்ட ஒப்பந்தத்தில்தான் நமக்கு ஓய்வூதியம் உறுதி செய்யப் பட்டது. NFTE சம்மேளனச் செயலராக இருந்த தோழர். குப்தாவும், அவருடன் ஒத்துழைத்த தோழர். வள்ளிநாயகமும் போற்றப்பட வேண்டியவர்கள். அதிகாரிகள் சங்கங்கள் இருந்தும் ஏதும் செய்யாமல் இருந்த நிலையில் நாம் போராடிப் பெற்றோம் என்ற பெருமை நமக்குரியது. ஓய்வூதிய சட்டம் 1972 இல் பிரிவு 37 A சேர்க்கப் பட்டு, ஊதிய மாற்றம் வரும்போது ஓய்வூதிய மாற்றமும் வர வேண்டும் என்பது ஏற்கப் பட்டது.  அந்த அடிப்படையில் இரண்டு ஊதிய மாற்றங்கள் பொதுத்துறையில் நிகழ்ந்த போதும் நாம் கணிசமாக ஓய்வூதியத்தில் மாற்றம் பெற்றோம்.


ஆனால் தற்போது ஊதிய மாற்றம் இங்கு வராததால், ஓய்வூதிய மாற்றம் நமக்கு கிடைக்கவில்லை. நாக்ரா மற்றும் சத்தியேந்திர சிங் ஆகியோரின் வழக்கில் பெற்ற தீர்ப்பு நமக்கு இப்போது கைகொடுக்கவில்லை. ஓய்வூதியத்தில் ஏற்றத்தாழ்வு என்பது வேறு; ஓய்வூதிய மாற்றம் என்பது வேறு. மத்திய, மாநில அரசுகளிலும் ஊதிய மாற்றம் நிகழ்ந்த பிறகே ஓய்வூதிய மாற்றம் நிகழ்ந்தது. நமக்கும் ஊதிய மாற்றம் மூன்றாவது முறையாக வந்திருக்குமெனில், ஓய்வூதிய மாற்றம் வந்திருக்கும். ஆனால் பொதுத்துறைகளில் ஊதிய மாற்றம் என்பது இலாபத்தின் அடிப்படையில் என புதிய வழிகாட்டுதல் வந்ததால் நமக்கு ஊதிய மாற்றம் வரவில்லை. BSNL அடுத்தடுத்து மூன்று ஆண்டுகள் இலாபம் ஈட்டவில்லை என்ற காரணம். 


இந்த இலாபத்தின் அடிப்படையில் ஊதிய மாற்றம் என்ற விதி நமக்குப் பொருந்தாது என்பதன் மேல் நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். BSNL மற்ற பொதுத்துறைகளைப் போலில்லாமல், மக்கள் சேவை என்ற அடிப்படையில் மத்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம். இலாபம் ஈட்ட முடியாத பகுதிகளில் கூட மக்கள் சேவைக்காக, நாம் பணிபுரிய வேண்டி உள்ளது. தனியார் இந்த நிபந்தனையிலிருந்து தப்பித்துக் கொண்டனர். எனவே நாம் நட்டத்தை எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. 


இந்த சூழலில், நம் துறை ஊழியர் சங்கங்களோடு இணைந்து ஊதிய மாற்றத்திற்கான நிபந்தனையை தளர்த்திட வேண்டி தீவிரமான தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.  இதை விடுத்து தவறான, அடைய முடியாத தீர்ப்புக்காக, கால விரயம், பண விரயம் செய்வதற்குத் துணிந்து நீதி மன்றத்தை நாடுவது என்ற முடிவு எந்தப் பலனையும் தரப் போவதில்லை. 


எனவே இந்த நாளில் நமது தலைமை சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு, ஆழ்ந்து பரிசீலனை செய்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என அனைவரும் வற்புறுத்துவோம். 


இதுவே நமது ஓய்வூதியர்களுக்கு நமது காலத்தில் நாம் செய்யும் அடிப்படைக் கடமையாகும்.


இவண்


தோழமையுடன்,


நா.வீரபாண்டியன்,


முதன்மை ஆலோசகர்,

AIBSNLPWA, தஞ்சை மாவட்டம்.

17.12.2020.