Wednesday, July 29, 2020

பாரதியும், பகத்சிங்கும்

பாரதி வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய உரிய அங்கீகாரம் இறந்த பிறகுதான் வந்தது. அதற்குப் பல காரணங்கள். குறிப்பாக அவரது ஏழ்மை. அவர் பிறந்த குலம் கிட்டத்தட்ட அவர்களது சமூகத்திடமிருந்து ஒதுக்கியே வைத்திருந்தது. அவரை ஆதரித்து உதவியவர்கள் பெரும்பாலும் அவர் ஜாதிக்கு அப்பாற்பட்ட சமூகத்தின் கீழடுக்கைச் சார்ந்தவர்களே. மகாத்மா காந்தியை சென்னைக் கடற்கரை கூட்டத்திற்கு அழைக்கச் சென்றவரின் யதார்த்தமான செய்கைகள், அங்கிருந்தோரை அதிர்ச்சியுறச் செய்தது. இராஜாஜி அவரை மகாத்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. கூட்டத்திற்கு வர இயலாததை மகாத்மா தெரிவித்ததும் பாரதி அங்கிருந்து மிடுக்கோடு வெளியே போனார். இராஜாஜியைப் பார்த்து, 'இவர் நாட்டின் பொக்கிஷம். பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்', என சொன்னார். சொன்ன சொற்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிகழ்வு உண்மையே. அவர் செய்தித்தாள் ஆசிரியராக, கவிஞராக மிளிர்ந்தார் எனினும் ஆங்கில அரசால் தொடர்ந்த கண்காணிப்புக்கும், சிறையிடப் படுதலுக்கும் ஆளாகி, புதுச்சேரியில் அடைக்கலம் தேட வேண்டியதாயிற்று. பாரதியின் வாழ்க்கை வரலாறை சொல்வது நோக்கமல்ல. இறுதியில் அவர் சென்னையில் இறந்த போது அவரை அடக்கம் செய்யச் சென்றவர்கள் எண்ணிக்கை, தமிழ் கூறும் நல்லுலகம் அம்மாபெரும் கவிக்குத் தந்த அங்கீகாரத்தை பறைசாற்றும். போலித்தனமும், சமூகத்தில் பட்டம், பதவி, பணம் மூலம் பெறும் செல்வாக்குமே சமூக அந்தஸ்தை தீர்மானிக்கும். அதை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் பெரிய மனுஷர்களாக வலம் வருவது எக்காலத்திற்கும் பொருந்தும் போலும்! பாரதி இச்சூதறியா ஏழைச் சாமானியன்.
ஆகவே வறுமையினின்றும் அவன் குடும்பம் இறுதி வரை மீளவில்லை.

மறைந்த பின், அவனுக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் நூறில் ஒரு பங்கு, அவன் உயிரோடிருந்த போது கிடைத்திருந்தால் இன்னும் ஓர் இருபது, முப்பது ஆண்டுகள் வாழ்ந்திருப்பான். இன்னாது அம்ம இவ்வுலகம்!

தமிழகமும், இந்தியாவும் கொண்டாடத் துவங்கியபின் வந்த இளைய தலைமுறை பாரதியைப் புரட்சிக் கவிஞனாகவும், முற்போக்குச் சிந்தனையாளர்களின் அடையாள நாயகனாகவும் தமிழ்நாட்டில் உயர்த்திக் காட்டி தங்களையும் உயர்த்திக் கொண்டனர். அவன் வாழ்ந்த போது தாங்கள் பிறக்கவில்லையே என கவிஞர் பட்டாளமும், அறிஞர் பெருமக்களும் குமுறாத நாளில்லை. குமுறும் அளவைப் பொறுத்து 'முற்போக்குச் சந்தையில்' அவர்களது விலை எகிறியது. கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகளில் எல்லாம் பாரதியின் அழியா கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு முழக்கி 'மார்க்கெட்டில்' தங்கள் 'ரேட்'டை உயர்த்திக் கொண்டனர். அவன் உயிரோடிருந்து வறுமைத் தீயில் கருகிய போது அவனை வாழ்விக்க வராத தமிழகத்தில், அவன் மறைந்த பின் பலருக்கு தன் கவிதைகளால் வாழ்வித்தான். அவன் இல்லாததால் யாருக்கும் பிரச்சினை இல்லை; இருந்திருந்தால் இப்போதைய சூழ்நிலையில், 'ஜாதிகள் இல்லையடி பாப்பா; குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்' எனப் பாடிய அக் கவிஞன் படும் பாட்டை கற்பனை செய்தாலே மனம் கலங்குகிறது. பிஜித் தீவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் பிழைப்பு தேடிச் சென்று கற்பைப் பறி கொடுத்த ஏழைப் பெண்கள் உற்ற துயர் பாரதியின் மனதைக் கலக்கியது. கரும்புத் தோட்டத்தில் பட்ட துயரை கண்ணீர் வழிய பாடியவன் பாரதி. நம் நாட்டின் எல்லை தாண்டி உலகில் நடந்த நிகழ்வுகள் பால் கருத்தைச் செலுத்தியவன். ஆகவேதான் மாகாளி கடைக்கண் வைத்ததால் எழுந்ததாக, ஜார் ஆட்சி வீழ்ந்ததை யுகப் புரட்சி என அவனால் அடையாளம் காண முடிந்தது.

பகத்சிங்! இளம் வயதில் வயதுக்கு மீறிய சிந்தனை. கேளாக் காது படைத்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தங்கள் குரலை கேட்கச் செய்திட பாராளுமன்றத்தில் ஆளைக் கொல்லாமல், அதிர்வேட்டு போட்டவன். அவனும் அவன் நண்பர்களும் தண்டிக்கப்பட்டனர். தூக்கு மேடைப் பரிசு. வாழத் துடிக்கும் இளம் வயதில் சாகத் துடித்த நாத்திகன். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய நாளுக்கு முதல் நாள் இரவில் சிறையில் மார்க்ஸோடு உரையாடிக் கொண்டிருந்தவன். ஆம்! சிவப்பு புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தான். மார்க்சிய சித்தாந்தம் அவன் சிந்தனையைக் கவ்விப் பிடித்திருந்தது.

காந்தி- இர்வின் ஒப்பந்தத்தில் ஓர் அம்சமாக, நிபந்தனையாக அவனது விடுதலை பேசப் பட்டிருந்தால் அவன் தூக்கில் தொங்க வேண்டியது தவிர்க்கப் பட்டிருக்கும். தீவிரவாதம், தீவிரவாதியோடு அழிய வேண்டும் என்பது எழுதாத விதி! அந்த வயதிலேயே கூரிய சிந்தனை இருந்ததால்தான்  'நான் ஏன் நாத்திகன்?' என்ற நூலை எழுத முடிந்தது. பகுத்தறிவாளனாக மிளிர்ந்த அவன் இராஜபாட்டையில் நடைபோடவில்லை. பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் ஊர்வலத்தில் தாக்கப்பட்டு படுகாயமுற்ற சில நாட்களில் மரணமுற்றார். அக்கொடுமையைத் தாங்காத அவனும் அவன் நண்பர்களும் ஆயுதமேந்த வேண்டி வந்தது. இன்றும் அவனது வீரமும், தியாகமும் ஒப்புயர்வற்று விளங்குகிறது. 

இவர்கள் இருவர் பற்றியும் குறிப்பாக இங்கு இப்போது சொல்ல வேண்டிய அவசியம் ஏன்? ஒளிமிகுந்த மேடைகளில் வலம் வந்து நித்தம் தாங்கள் யார் என்பதை பாமரர்களுக்கும், படித்த மேட்டுக்குடி மக்களுக்கும் அறிமுகம் செய்து கொள்பவர்கள் 'நாங்கள் பாரதி பரம்பரை, பகத்சிங் பரம்பரை' நெஞ்சு புடைக்க விம்மி முழங்குவதைப் பார்க்க முடிகிறது. 'பாரதி இழுத்த தேர் வடம்   இங்கு வீதியில் கிடக்கிறது, பற்றிப் பிடித்து  தேரினை இழுக்க ஊர் கூடி வாருங்கள்' என ஓங்கியழைக்கும் குரல்கள் இன்றும் ஓய்வதில்லை. பகத்சிங் பற்றிப் பேசும் போதும் கழுத்து நரம்புகள் புடைக்க முகம் சிவக்க பகத்சிங்கே எழுந்து வந்ததுபோல் ஆடும் சாமியாட்டத்திற்கும் குறைவிருக்காது. அப்படியே அவர்கள் பரம்பரை பெருமை பேசட்டும்! ஆனால் கொஞ்சமேனும் அவர்களைப் போல் சமூக அக்கறை, அநீதி கண்டு வெகுண்டெழும் பண்புகளோடு செயல்பட  வேண்டாமா?

பாரதியைப் போல ஒரு கவிஞன் வர வர ராவ், மனித உரிமைச் செயல் பாட்டாளர் சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்லே உள்ளிட்ட பதினொரு பேர் சுதந்திர இந்தியாவில் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் புல்லாய், புழுவாய், பூச்சிகளாய் சிலர் கண்களுக்குத் தெரியும் மனிதர்களுக்காய் தளராது குரல் கொடுப்பவர்கள். இன்று கறுப்புச் சட்டங்களால் சிறைக் கொட்டடிக்குள் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குற்றப் பத்திரிக்கை மட்டுமே வழங்கப்பட்டு விசாரணைக் கைதிகளாய் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தனிமைச் சிறையில் வாடும் கவிஞர் வர வர ராவ் 81 வயதில் முதுமையில் வரும் வியாதிகளோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டும் பிணையில் விட மறுத்தது மட்டுமன்றி மருத்துவ மனையில் சேர்ப்பது பற்றிய பொறுப்பு இன்றி மகாராஷ்ட்டிர அரசு இருந்தது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிணை தர பரிசீலித்த நேரத்தில், வழக்கின் விசாரணையை மத்திய அரசின் என்.ஐ.ஏ அமைப்பு நேரடியாக எடுத்துக் கொள்வதாக அறிவிக்கிறது. விளைவு? பிணையில் வருவதற்கான வாயில் முற்றாக அடைபட்டுவிட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என்பதும் அது பற்றிய பின்னணியும் ஒரு பக்கம் இருக்கட்டும். சிறைக் கைதிகளுக்கான உரிமைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா என்பதுதான் கேள்வி.

சிறுமிகளை, இளம் பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்தும், கொலை செய்தும் தொடர் குற்றங்களைச் செய்த சாமியார்கள், காவிப் போர்வையில் புகுந்து கொண்டு கோவில்களுக்குள் சிறுமிகளைக் கடத்தி, கற்பழித்த ஆளும் கட்சி அரசியல் வாதிகள் எளிதில் வெளிவர சட்டம் இலகுவாக இருக்கிறது. நீதிமன்றங்களில் உயர் நிலையில் இருக்கும் நீதியரசர்கள், ஓய்வு பெற்றபின் உயர் பதவிகளைப் பெற நீதியை வளைத்து உதவவும் தயாராக இருக்கிறார்கள் என்பது பற்றிய செய்திகள் கொஞ்சம் நஞ்சம் நீதிமன்றங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது. ஏழை எளியவர்கள் என்ன செய்வார்கள்?
அவர்களுக்காகக் குரல் எழுப்பும் மனித நேயம் மிக்கவர்கள், சுகமான வாழ்க்கை வாழ்வதை விட்டு அவர்களுக்கானப் போராட்டத்தில் வலிந்து கொடும் தண்டனைகளுக்கும், சிறைக் கொடுமைகளுக்கும் ஆளாவதை நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

பாரதியும், பகத்சிங்கும் இன்னும் நூற்றுக்கணக்கான மாமனிதர்களும் செய்த தியாகங்களைப் போற்றிப் புகழ்வதோடு அவர்கள் வாரிசுகள் நாங்கள் என்றும், வழி வந்தவர்கள் என்றும் மேடைதோறும் முழங்குவதன்றி வேறென்ன செய்கிறோம்? நம் காலத்தில் நம் முன் வாழ்கின்ற தியாகிகளை, கதியற்ற மக்களுக்காய் வாழ்க்கையை அர்ப்பணம் செய்பவர்களை கிஞ்சித்தும் நினைப்பதில்லை. காங்கிரஸ் தீவிரவாதக் குழுவில், திலகர் தலைமையை ஏற்று செயல்பட்டவர்கள் பாரதியும், வ உ சி யும் அவர்களைச் சார்ந்தவர்களும். அதனாலேயே அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமரசமற்ற போராட்டங்களை நடத்தியதாலும், அரசியல் ரீதியான ஆதரவில்லாததாலும் வெள்ளை அரசாங்கத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு ஆளாகினர். இன்று அவர்களைக் கொண்டாடி நம்மை அவர்களோடு அடையாளப் படுத்துவதோடு நின்று விடுகிறோம். அந்நாளையப் புறக்கணிப்பாளர்களைப் போலவே நாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, அவர்களிடமிருந்து விலகிப் பாதுகாப்பான நிலையில் நம்மை இருத்திக் கொண்டு போலிப் புரட்சி பூபாளம் இசைத்து பிழைப்பை நடத்துகிறோம். ஆனாலும் அக் கொடுமைகளுக்கு ஆளாகும் மனிதர்களுக்காய் குரல் கொடுக்கும் சக மனிதாபிமானிகள் இப்போதும் நம் கண் முன்னே உலவத்தான் செய்கிறார்கள். மனம் தளராது அமைதியாக ஆனால் மனத் திண்மையோடு பாசிச அரசை எதிர்த்து அவர்கள் நடத்தும் கருத்துப் போருக்கு சில சமயங்களில் நீதிமன்றங்கள் அசைந்து கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. மேலே குறிப்பிட்ட அம் மாமனிதர்களை, விடுவிக்க வரலாற்றாளர் ரொமிலா தாப்பர் முதல் தன்னார்வச் செயல்பாட்டாளர்கள், அறிஞர் பெருமக்கள், அருந்ததி ராய் வரை அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் விடுகின்ற வேண்டுகோள்களின் நியாயங்கள்,  தாமதமானாலும் மருத்துவ மனையில் சேர்ப்பதற்கும், பிணையில் வெளிவருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் இன்று உதவியிருக்கிறது. இந்தக் குழுவினரின் அங்கமாக, கட்சி அரசியலுக்கு அப்பால், மனித உரிமைப் பாதுகாவலர்களாக என்று மாறப் போகிறோம்? 

அந்நாளே, பாரதியும், பகத்சிங்கும், அவர்கள் போன்ற மாவீரர்களின் படை வரிசையில் அணிவகுக்கும் வீரர் நாம் எனச் சொல்ல நம்மைத் தகுதியாக்கும் நாள்.

எண்ணித் துணிவோம்! உண்மை வாரிசுகளாய் மிளிர்வோம்!










Monday, July 27, 2020

               கடல்
ஆர்த்தெழுந் தென்ன?
ஆர்ப்பரிப்பில் பயனென்ன?
கூர்த்தமதி பெற்றநின்
சீர்த்திறமுன் நான்சிறியோன்.

பொங்குநுரை கரையெறிந்து
அலையலையாய் வந்தென்ன?
தங்குபுகழ் புரைதீர்நின்
சிந்தனைமுன் நான்வறியோன்.

                ஞானி

என்னைநீ பார்க்கின்றாய்
ஏதேதோ உரைக்கின்றாய்
கரைமணலை நனைக்கும்உன்
கரம்பட்டே சிலிர்க்கின்றேன்

ஓய்வுதுளியின்றி ஓலமிடுங்கடலே!
அலைபாயும் என்மனதின்
அழுங்குரலைக் கேட்டாயோ?
நிலைமாறித் தடுமாறும்
தமிழர்தம் நிலையெண்ணி
ஏங்குமென் முகம்பார்த்து
எள்ளல்நகை புரிந்தாயோ?

ஓங்காரமிடும் உனைப்போல்
பொங்கியெழும் வண்தமிழர் 
ஆங்காரம் கண்டலறும்
கணவாய்க் கூட்டத்தின்
கதைமுடித்த சேதிவரும்.

கதைமுடித்த சேதிவரும்
அந்நாளில் நீயிருப்பாய்!
அன்றுநான் சொன்னதெண்ணி
நெடுங்கடலே நீ சிரிப்பாய்!


கடலும் ஞானியும்- கற்பனை உரையாடல்.







































Friday, July 24, 2020

கொரோனா காலச் சிந்தனைகள்

நீதித்துறை சீர்திருத்தம் - உடனடித் தேவை

1950, ஜனவரி 26 ஆம் நாள் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 28 முதல் நீதித்துறையின் கீழ் சுதந்திர இந்திய நீதிமன்றங்கள் செயல்படத் துவங்கின. இன்று 70 ஆண்டுகளை நிறைவு செய்து 71 ஆம் ஆண்டில் நடை பயிலும் வேளையில், நீதி மன்றங்களின் செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையைப் போக்கி விரைந்து செயல்பட வேண்டிய தேவைகளை அனைவரும் உணரவும், கவலையோடு விவாதிக்கவுமான நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாட்டில், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அதிகரிக்கும் சிவில், கிரிமினல் வழக்குகளின் மீதான தீர்ப்புகள் வருவதிலான அசாதாரண தாமதம், மக்கள் நீதி மன்றங்கள் மீது வைக்கும் நம்பிக்கை தகர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் தலையாய கடமையும், பொறுப்பும் நீதித்துறையின் இயங்கு தளங்களாக விளங்கும் நீதிமன்றங்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்பில் எண்முறை (digital) தொழில் நுட்பத்தின் வரவு, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளில் யாரும் கற்பனை செய்ய இயலாத அளவுக்குப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இம் மாற்றங்கள் ஒரே சீரான வேகத்தில் அனைத்துத் துறைகளிலும் வர முடியாது என்பது நடைமுறை உண்மை என்றாலும், மாற்றத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைக்க வேண்டிய அவசியத்தை தள்ளிப்போட முடியாது. இந்திய நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.

சுதந்திர இந்தியாவின் உச்சநீதிமன்ற முதல் நீதிபதி ஹரிலால் கனிகா,'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளில் சில, ஒன்றுக்கொன்று முரண்பாடு உள்ளவையாக இருக்கின்றன. சிக்கலாக அவை உருவெடுக்கும் போது, அதை சரிசெய்ய வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு இருக்கிறது' என உச்ச நீதி மன்ற துவக்கத்தில் குறிப்பிட்டார். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நீதிமன்றங்கள், அரசதிகார வரம்பு மீறல்களை முறியடித்தும், மக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்கு வரும் ஆபத்தை பல கட்டங்களில் தடுத்து நிறுத்தியும், நீதிமன்றத்தை நாடி தங்கள் பாதிப்பை சரி செய்து கொள்ளக் கூடிய அளவுக்குப் பொருளாதார வசதியற்ற மக்கள் தொகுதிக்கு ஆதரவாக முன்கை எடுத்து காப்பாற்றியும், பொதுநல வழக்குகளைத் தானே முன் வந்து ஏற்று நடத்தி, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அற்றுப் போகாத வண்ணம் பெரும் பங்காற்றி உள்ளன. வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர்களின் நீண்ட பட்டியலே உள்ளது. வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஓ.சின்னப்ப ரெட்டி தொடங்கி மார்க்கண்டேய கட்ஜு மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற செலமேஸ்வரர் வரை பலரை நாம் மறக்க இயலாது. ஆனாலும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையும், தீர்ப்பு வருவதற்கான காலத்தின் அதிகரிப்பும் நீதிமன்ற நடைமுறைகளில் குறிப்பாக குற்றப் பின்னணி (criminal) வழக்குகளில் மேற்கொள்ளும் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மீதான விவாதங்கள் விரிவான தளங்களில் எதிரொலிக்க வேண்டும்.

சமீபத்தில் நம் கவனத்தை ஈர்த்த சில வழக்குகள் பற்றிய செய்திகளும், சமூக அக்கறையுள்ள சில வழக்கறிஞர்கள் பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளும் நம்மை சிந்திக்க வைத்தன. விளைவே இக் கட்டுரை. 

தமிழ்நாட்டின் தென்மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக் கொலையில், சென்னை உயர் நீதி மன்ற மதுரை அமர்வு சற்றும் தாமதமின்றி எடுத்த சீரிய  நடவடிக்கை காரணமாக காவல்துறையினர் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பின் வெம்மையை உணர்ந்த மாநில அரசாங்கம், சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தது. இப்போது சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் வந்த ஒரு செய்தி நமக்கு கவலை தருவதாக உள்ளது. 1985 ஆம் ஆண்டு இராஜஸ்தானில் நடந்த கொலை மீதான வழக்கில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வந்துள்ளது. குற்றவாளிகளாய் நிரூபிக்கப்பட்ட ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் உட்பட பதினொரு காவல்துறையினருக்கு மதுரா செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. கொலையுண்டவர் ஏழுமுறை இராஜஸ்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை உறுப்பினர். ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பரத்பூர் சமஸ்தானத்தின் பட்டத்து இளவரசரான இராஜா மான்சிங். காவல் நிலையத்திற்கு சரணடையச் செல்லும் போது, இடையில் காவல்துறையினர் வழி மறித்து அவரையும் அவர் உதவியாளர் இருவரையும் மோதலில் (Encounter) சுட்டுக் கொன்றதே வழக்கு. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையினர். கொலையுண்டவர் மக்கள் பிரதிநிதி என்பதோடு மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர் சமூகத்தின் உச்ச மட்டத்தில் இருந்தவர் என்பதால் அல்ல; பொருளாதார ரீதியாக வழக்கை சந்திக்கும் வல்லமை பெற்ற குடும்பம். அப்படி இருந்ததால்தான் விடாப்பிடியாக,  வழக்கு இழுக்கடிக்கப் பட்டாலும், தீர்ப்பை பெற முடிந்தது. ஆனால் அதற்கு முப்பத்தைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்தது. இதுவும் இறுதியானதல்ல; இந்த செசன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உயர்நீதி மன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல மேலமை நீதி மன்றங்கள் உள்ளன. இறுதியாகத் தண்டனையை அடையும் போது, அதை அனுபவிக்க எவ்வளவு பேர் உயிரோடு இருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. இவ்வழக்கின் போக்கைப் பார்க்கையில் சாத்தான்குளம் வழக்கு என்ன ஆகுமோ என்ற கவலை அதிகரிக்கிறது. 

இது போன்று மிகத் தாமதமாக தலைமுறைகள் கடந்து தீர்ப்புகள் வந்த வழக்குகள் பல உள்ளன. 1975 ஆம் ஆண்டு ஜனவரியில் அன்றைய இரயில்வேத்துறை அமைச்சராக இருந்த லலித் நாராயண மிஸ்ரா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் செய்தவர்கள் 2014 இல் வந்த தீர்ப்பு மூலம் தண்டிக்கப்பட்டனர். தீர்ப்பு வெளி வர 39 ஆண்டுகள். 1987 இல் ஹஸிம்புராவில் 40 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 இல் தீர்ப்பு வெளியாயிற்று. தீர்ப்பு என்ன தெரியுமா? குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பின் அவ்வளவு பேரையும் கொலை செய்தவர்கள் யார்? நல்ல வேளை. மேல் முறையீட்டில் டெல்லி உயர்நீதி மன்றம் மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 16 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அளித்ததன் மூலம் நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொண்டது. ஆக இதுபோன்ற கொடுமையான குற்ற வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வர இவ்வளவு தாமதத்தை எவ்வாறு ஏற்க இயலும்? வழக்கு மன்றத்திற்குச் சென்று ஆண்டுக் கணக்கில் நியாயம் கிடைக்க அலைக்கழிக்கப்பட்டு அழிந்த குடும்பங்கள் பற்றிய கதைகள் நம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உலவி வருவதை நாம் அனைவரும் அறிவோம். குற்றம் செய்தவர்கள் கூட தப்பிக்கலாம், ஆனால் குற்றமற்றவர்கள் சிறிதும் தண்டிக்கப்படக் கூடாது என்னும் உயர்ந்த அறநெறியைக் காப்பதற்காக, நீதிமன்றங்களுக்கு வெளியே குற்றம் செய்யாதவர் குடும்பங்கள் சிதைந்து போவதைப் பற்றிய கவலையும் அதையொட்டி எழும் விவாதங்களும் இன்று கூர்மை அடைந்துள்ளன. இவை எல்லாம் நீதித்துறையின் சீரமைப்பைக் கோருகின்றன. 

உச்ச நீதிமன்றத்தின் முப்பெரும் பணிகளில் ஒன்று அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் நீதி வழங்குதல். இவ்வாறு வழங்கும் தீர்ப்புகளை தாமதமின்றி அமுல்படுத்துவது, அச்சட்டத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பிரதிநிதிகளாக இருக்கும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஆளுநர்களின் தலையாய கடமை. ஆனால் அதன் இன்றியமையாமையை உணராத போக்கு அதிகரித்திருப்பதும், தாமதம் பற்றிய பொறுப்பின்மையும் நீதியை நிலைநாட்டும் கருவிகள் மீதான ஐயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகள் இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் விடுதலை செய்யப்படவில்லை. நன்னடத்தை மற்றும் தலைவர்களின் பிறந்த நாள் அல்லது தேசிய, மாநில அரசுகளின் முக்கிய விழாக்களை ஒட்டி இதே போன்ற குற்றத்தைச் செய்து ஆயுள் தண்டனைப் பெற்றவர்கள், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டும், பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்கு இன்னும் விடியவில்லை. இது குறித்த போராட்டங்கள், வழக்குகள் எல்லாம் நடந்து முடிந்து இறுதியில் மாநில அரசு, சட்டசபையில் ஒரு மனதான தீர்மானம் நிறைவேற்றி, விடுதலையைப் பரிந்துரை செய்து, ஆளுநருக்கு முறையான கடிதமும் அனுப்பியது. இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம், 'எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைப்புச் சட்டத்தின் பிரதிநிதியாக உள்ள அதிகாரி கோப்பை வைத்துக்கொண்டு இருக்க முடியாது, அமைப்புச் சட்டத்தின் காவலர்கள், நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசத்தை வரையறுக்காத காரணம், அப்பிரதிநிதிகள் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையே', என சாடியுள்ளது. சட்டத்தின் காவலர்கள் அதை மீறுவதும், நடைமுறைப் படுத்துவதில் காட்டும் சுணக்கமும் ஏற்படுத்தும் விளைவுகளை எண்ணிப் பார்ப்பதில்லை.

நாடெங்கும் ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் சமூக விரோத  சக்திகளைத் தூண்டி, கலகங்களை நடத்தி, அதன் மூலமாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்லி சிலரைக் குறி வைத்து தண்டிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பீமா கொரேகான் என்னும் இடத்தில் நடந்த வன்முறைக் கலகங்கள், கொரோனாத் தொற்று துவங்கிய நேரத்தில் வடகிழக்கு டெல்லியில் 53 பேர் கொல்லப்பட்டும், பொதுச் சொத்துக்கள் கொள்ளை மற்றும் அழிவுக்கு ஆளாக்கப்பட்டும் நடந்த திட்டமிட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் நீதிமன்ற விசாரணை ஏதுமின்றி சிறையில் வாடும் இளைஞர்கள், மாணவர்கள், அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கை தெரியாது. தொலைக்காட்சி ஊடகங்களுக்கு இது TRP ஐ எகிறச் செய்யும் பிரச்சினை அல்ல. பீமா கொரேகான் கலவரத்தை ஒட்டி மகாராஷ்ட்டிர அரசின் 'சட்டப்புறம்பு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்' படி
 (UAPA) பதினோரு பேர் தனிமைச் சிறைகளில் பல்வேறு இடங்களில் அடைக்கப் பட்டுள்ளனர். அறிஞர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மக்கள் இயக்கச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் அடங்குவர். பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுவதை உறுதிப் படுத்தும் அதிகாரப் பூர்வ மருத்துவச் சான்றிதழ்களை நீதிமன்றம் முன் அளித்த பிறகும் பிணையில் விடுவதற்கும் கூட நீதிமன்றங்கள் தயாரில்லை. பிணைக்கான பூர்வாங்க நடைமுறைகளை முடிக்கவே பல மாதங்கள் ஆகின்றன. அதற்குப்பின்னும் நீதிமன்றம் மறுப்பது தொடர்கிறது. உடல்நிலை மோசமாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் 'உரிமை மீறல்கள்' தடுக்கப் படுவது எப்போது இங்கே சாத்தியம்? யாருக்கும் தெரியாது. 81 வயதான கவிஞர் வர வர ராவ், 64 வயதான சுதா பரத்வாஜ், டெல்லிப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கியப் பேராசிரியர் சாய்பாபா ஆகியோர் சமீபத்திய எடுத்துக்காட்டுகள்.
நீதித்துறைதான் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எடுப்பதில்லை. பெருங்கொடுமையான, நெஞ்சை உலுக்கும் செய்தி என்ன தெரியுமா? தேசிய குற்றப் பதிவு ஆய்வகம் (National Crime Record Bureau) தந்துள்ள விபரம் தான். இந்தியாவில் உள்ள 1400 சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் கைதிகள் ஏறத்தாழ 4.33 இலட்சம். குற்றம் நிரூபிக்கப் படாமல் விசாரணக் கைதிகளாக சுமார் 68% அதாவது ஏறத்தாழ 2,90,000 பேர் ஆண்டுக் கணக்கில் அடைபட்டுள்ளனர். விசாரணைக்கு நீதிமன்றங்களால் அழைக்கப் படாதவர்கள், பிணைத் தொகையைக் கட்டக்கூட வழியற்ற ஏழை மக்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுள் 63% கைதிகள் SC, ST மற்றும் OBC இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற செய்தி அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது. இவர்களின் குடும்பம், மனைவி, மக்களின் எதிர்காலம் என்ன ஆகியிருக்கும்? எத்தனைக் குடும்பங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் அல்லல் படும்? அவர்கள் ஆற்றாது அழுத கண்ணீர் எத்தகையப் பலம் வாய்ந்தது என்பதை காலம் சொல்லும். பானை பொங்கி வெடிக்குமுன் தீர்வு நோக்கி சிந்திப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.  

கொரோனா தொற்று பூதாகரமாக கிளம்புவதற்கு முன், மார்ச் 24, 2020 முதல் ஊரடங்கு போன்ற வீட்டுக்குள் முடங்கி இருக்கும் Lockdown உத்தரவை முதல் நாள் 4 மணி நேர அவகாசத்தில், பண மதிப்பிழப்பு அறிவிப்பு போல் அறிவித்து, 138 கோடி மக்கள் தொகுதியை முடக்கியது. அவரவர்கள் அங்கேயே முடங்கிக் கொள்வது என்பதால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றிய முன் எச்சரிக்கை மத்திய அரசுக்கு இல்லாததால் இன்று அதன் சீரழிவுகளை நம் மக்கள் பல முனைகளிலும் சந்தித்து வருகிறார்கள். நம் தலைமுறையில் இப்படி ஒரு முடக்கம் மாதக்கணக்கில் தொடரும் என யாரும் எண்ணியதில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டில் பல மாதங்கள் என தொடர்ந்து பல ஆண்டுகளாக அவ்வப்போது அம்மக்கள் அனுபவிக்கும் ஊரடங்கால் சமூக வாழ்க்கையே எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை இப்போது நாம் உணரமுடிகிறது. மார்ச் மாத முடக்கம் துவங்கும் முன்பே, சென்ற ஆண்டு ஆகஸ்டு 4 முதல், அரசியல் பிரிவு 370 ஐ ரத்து செய்து மாநில அந்தஸ்தை மாற்றி யூனியன் பிரதேசமாக அறிவித்த சட்டம் நடைமுறை படுத்தும் முன் இராணுவக் கட்டுப்பாட்டிலான ஊரடங்கு உத்தரவும் ஆளுக்கட்சி அல்லாத பிற கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்கும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தாக்குதலை முறியடித்தல் என்ற பெயரில் ஒட்டுமொத்த தொலைத் தொடர்புச் சேவை நிறுத்தப்பட்டது. வலைதளச் சேவை 'இண்டர்நெட்' அடியோடு முடக்கப்பட்டது. ஓராண்டு முடியப் போகிறது. மூன்று முறை உச்ச நீதி மன்றக் கதவை தட்டியபின், இப்போது 2G சேவை வரையறைகளோடு தரப்பட்டுள்ளது. ஆனால் அதிவேக 4G சேவை தரப்படவே இல்லை. இதன் அவசியம் பற்றி விளக்க வேண்டியதில்லை. கல்வி, மருத்துவம், வணிகம் போன்ற சமூகத்தின் உயிர் நாடியான அனைத்து துறைகளுக்கும் அன்றாடம் எவ்வளவு அவசியம் என்று தெரிந்தும் அதைத் தருவது பற்றி மத்திய அரசு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

இண்டர்நெட் சேவை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவற்றோடு நெருக்கமான தொடர்பு கொண்டது. ஆகவேதான் 'அனுராதா பாசின்' என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முதலாவதாக, சேவை முடக்குவதற்கான அரசு ஆணையை வெளியிடவும், இரண்டாவதாக, நாட்டின் பாதுகாப்புக்கும், இச்சேவை முடக்கத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை நிரூபிக்கும் எந்த சோதனை அடிப்படையிலான ஆதாரங்களும் இல்லாத போது நிறுத்தப் பட்டதற்கான காரணத்தை வெளியிடவும் நீதிமன்றம் முன் அவர் வைத்த வேண்டுகோள்கள். ஆணை ஏதும் இல்லாமல் சேவை முடக்கி மக்களின் உரிமைகளைப் பறித்தது ஏன் என வினவினார். உச்ச  நீதிமன்றம் ஐந்து மாதங்களை எடுத்துக் கொண்டு பிரச்சினை தீர்வுக்கான தெளிவான தீர்ப்பை தருவதற்குப் பதில், வழுக்கலான முடிவை அறிவித்தது. 'வார ஆய்வுக் குழு' ஒன்று போட்டு சேவை தருவது பற்றி பரிசீலிக்க ஆணையிட்டது. அரசின் பொறுப்பை சுட்டிக்காட்டி, முடக்கியதற்கான உத்தரவை வெளியிட அரசைப் பணிக்கவில்லை. முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதால் இரண்டாம் முறையாக, ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் அமைப்பின் சார்பில் எட்டு மாதங்களாக 4G சேவை முடக்கப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்றத்திடம் சுட்டிக் காட்டினர். இம்முறை உச்ச நீதிமன்றம் மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆராயச் சொல்லிவிட்டு தன் வேலையை முடித்துக் கொண்டது. யார் முடக்கினார்களோ, அவர்களையே ஆய்வு செய்யச் சொல்லிய வேடிக்கையைப் பற்றி என்ன சொல்வது? முன்னேற்றம் ஏதாவது வந்ததா? இன்று வரை 4G சேவை இல்லை. ஓராண்டு ஆகப் போகிறது. மீண்டும் அவர்களே உச்ச நீதிமன்றத்தை அணுகியதன் பின்  2G சேவை வரையறைகளோடு தரப்பட்டுள்ளது. ஆனால் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. இப்போது ஆய்வுக்குழு அறிக்கையை 'மூடுறையில்' (Sealed Envelope) போட்டு நீதிமன்றம் முன் சமர்ப்பிப்பதாக சொல்லி இருக்கிறது. முடக்கப்பட்ட ஆணையை வெளியில் சொல்வதில் என்ன தடை? எண்பது இலட்சம் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கான காரணத்தை சொல்ல விரும்பாத மத்திய அரசை நெறிப்படுத்துவதில் உச்ச நீதிமன்றம் தவறி இருக்கிறது. மக்களின் நீதித்துறை மீதான நம்பிக்கை சிதைந்து விட்டது என்பதை கவலையோடு பார்க்க வேண்டியிருக்கிறது. உச்ச நீதிமன்றமே இப்படி எனில் சொச்ச நீதிமன்றங்கள் என்ன செய்யும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவேதான் நீதித்துறை சீர்திருத்தங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது.

சிறைகளின் மொத்தக் கொள்ளளவு 100% எனில், கைதிகளின் எண்ணிக்கை 116% முதல் 119% ஆக இருக்கிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணைக் கைதிகள் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்க வேண்டிய கொடுமை ஒரு புறம். ஆனால் எந்தக் குற்றமும் செய்யாமல், கைதிகளுக்கு சிறையில் பிறந்த குழந்தைகள் என்ன செய்தார்கள்? செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்க நேர்ந்த இக்குழந்தைகளின் எதிர்காலம்? இவர்களுக்கான நல்வாழ்வை உறுதிப் படுத்த முடியாதது நம் ஒவ்வொருவருக்கும் அவமானமன்றோ? காரணங்களை ஆய்வு செய்தால், இறுதி விடை, நீதிமன்றங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பும், போதிய நீதியரசர்களும், வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சூழ்நிலைகளும் என்பது தெரியவரும். நீதிமன்றங்களில் தேவைக்கேற்ற விசாரணை அறைகள் இல்லை. ஏறத்தாழ 5,000 அறைகள் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மாவட்ட/ வட்ட நீதிமன்றங்களின் நீதியரசர் எண்ணிக்கை 17,891, உயர்நீதி மன்றங்களில் பணிபுரியும் நீதியரசர்கள் 676. உச்ச நீதி மன்றத்தில் 33. நிரந்தர பற்றாக்குறை விகிதம் 22% நவீன வசதிகள் இல்லாமலும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததாலும் விரிவாக்க வேலைகள் தடைப்படுகின்றன. காவல் துறை செயல்பாடுகளில் உள்ள குளறுபடிகள், அரசியல் வாதிகளின் காவல்துறை தலையீடு மற்றும் சமூகத்தில் பணபலம் உள்ளவர்களின் செல்வாக்கு எல்லாம் நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவையும் இன்ன பிற காரணங்களும் வழக்கை முடிப்பதில் தேவையற்ற தாமதத்தை உருவாக்குகின்றன. 

'விதி' என்னும் நீதிக்கொள்கை பற்றி ஆய்வு செய்யும் மையம், முதன் முறையாக காவல்துறை, நீதிமன்றங்கள், சட்ட உதவி மற்றும் சிறைகள் பற்றிய ஒன்றிணைந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு முன் சமர்ப்பித்துள்ளது. அவ்வறிக்கை மீதான பரவலான விவாதங்களை நாடெங்கும் மக்கள் நல ஆர்வலர்கள் நடத்துவதும், பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளை மத்திய, மாநில அரசுக்குத் தெரிவிப்பதன் மூலம் நீதித்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர இடையறாது முயல வேண்டும். இந்நாட்டு குடிமக்கள் அனைவரது நலம் குறித்து அக்கறைப்படும் நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமைகளுள் ஒன்றாகும்.

Justice delayed means Justice denied!

  






























Wednesday, July 22, 2020

புராணங்களில் உள்ள இன்றைய வாழ்வுக்கு ஒவ்வாதவைகளை படிப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும். அவைகளை எல்லாம் சொல்லாமலே கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பரப்ப முடியும். கல்வி அறிவு இல்லாத காலத்தில் படித்து சொல்ல வேண்டிய கட்டாயம் தந்தை பெரியாருக்கு இருந்தது. இப்போது நமது பிள்ளைகள் போதுமான அறிவு பெற்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் தெரிந்து கொள்வார்கள். வர்ணாசிரமம் இந்தக் காலத்தில் எப்படி மீண்டும் பழைய ஆண்டான் அடிமைச் சமூகத்திற்கு இட்டுச்செல்லும் முயற்சியே என்பதை மட்டும் நாம் சொல்லி அது எப்படி தகர்க்கப் பட்டது என்பதை தந்தை பெரியார், அம்பேத்கர், அயோத்தி தாசர், ஜோதிபா பூலே, ராஜா ராம் மோகன் ராய் ஆகியோரது நூல்களை படித்தால் அவர்களே இயக்கமாய் கிளர்ந்தெழுவார்கள். நாம் அந்த வழியை மட்டும் காட்டுவோம். விடாது கடவுள் மறுப்பை ஆதாரங்களோடு நிறுவுவோம்.

இப்படிச் செய்தாலே பலர் பிழைப்பின்றி போய் விடுவர். சனாதன வாதிகளின் கைக் கூலிகள் நம்மைச் சார்ந்தவர்கள் தானே. நம் கையை எடுத்து நம் கண்களைக் குத்தும் வேலையைத்தானே சனாதனிகள் செய்து வருகிறார்கள்.  வயிற்றுப் பிழைப்புக்காக நம்மில் சிலர் விலை போகிறார்கள். பிழைப்பிற்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் அவர்கள் செய்யும் காரியம் அவர்கள் உணரும் காலம் வராமல் போகாது. தந்தை பெரியாரை தாக்கியவர்கள், கல்லெடுத்து வீசியவர்கள், மலத்தை வீசியவர்கள், இன்றும் சாயம் அடிப்பவர்கள் யார்? நமது பணியை விடாது செய்வோம். ஒழுக்கக் கேடான பழிகளை நம் தலைவர்கள் மீது வீசுவது நல்ல பண்பென்றால் அதைத் தொடரட்டும்.

நம் பணி தொடர்வோம். சமூக நீதிக்கான போராட்டத்தில் எந்த சமரசமும் கிடையாது.

Friday, July 17, 2020

முகநூலா? முகமூடியா?

ஆம். செய்திகளை வேகமாக பரிமாறிக் கொள்ளவும், அதிகமான நண்பர்களை தெரிந்தும், தெரியாமலும் அறிமுகப் படுத்திக் கொள்ளவும் நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டிய முகநூல் பல தீய சக்திகளின் ஊடுருவல் தளமாக, முகமூடி மனிதர்களின் இயங்கு தளமாக மாறியிருப்பது வருத்தத்திற்குரியது. முகநூல் அறிமுகமாகி வளர்ந்த பிறகு, அதன் பயன்பாடுகளை முறியடிக்கும் விதமாக இதுவரை பல நூறு நிகழ்வுகள் மக்கள் மன்றத்தில் அரங்கேறிவிட்டன. அனைத்து தளங்களிலும் வலம் வரும் மக்கள் பிரதிநிதிகள் மேல் விமர்சனம் என்னும் போர்வையில் தரம் தாழ்ந்த வசைகளைப் பொழிவது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. இன்னொரு புது பாணி இப்போது எங்கும் எல்லா மொழிகளிலும் வலம் வரத் துவங்கி உள்ளது. தன் ஜென்ம எதிரியாக நினைப்பவர்களுக்கு- தத்துவத்திற்கு- மதத்திற்கு- கட்சிக்கு ஆதரவாக இருப்பது போன்ற முகமூடியை அணிந்து கொண்டு நேர் மாறான கருத்துக்களை நச்சு மொழிகளில் நாக்கூசாமல் பேசுவதும், எழுதுவதுமான பாணி அது. மூலவர் யார் என யாரும் பார்ப்பதில்லை. எதிர்வினை புரிபவர்களாக நடித்து பதில் எழுதுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வசைகளைக் கண்டு மனம் வருந்துபவர்கள், அந்தக் குறிப்பிட்ட குழுவின் நிர்வாகியை முகநூல் மூலமாகவே, வசைபாடுபவர்களை நீக்குங்கள் வேண்டுகிறார்கள். ஆனாலும் இழிமொழிகள் தொடர்கின்றன. எப்படி? அந்த வசைமொழி மன்னர்களே குழுவின் அட்மினாக இருக்கிறார்கள். சிறு பொறியாக வைக்கும் தீ, பெரு நெருப்பாய் பரவி, சமூகத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் உண்டாக்கி விடுகிறது. முக்கியமான பிரச்சினை மீதான கவனக் குவிப்பை சிதறடிக்கும் வகையில் விஷமத் தனமான வேலையைச் செய்து வேடிக்கை பார்க்கும் குரூர மனப்பான்மை இவர்களுக்கு உரியது. கந்த சஷ்டி கவசம் பற்றிய செய்தியும், அதற்கான எதிர் வினையும் கொரோனா காலத்தில் மக்கள் படும் துயரத்தை-  அதிலிருந்து மீளமுடியாத சூழ்நிலையை- அது வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் உண்டாக்கியிருக்கும் பேரழிவை எண்ணிப் பார்த்து செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி கவலைப்படாமல், இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் சமூகம் சார்ந்த அக்கறை இல்லை. சுகமாக வாழ்ந்து கொண்டு, பொழுது போக்க, திமிர்த்தனமாக- பொறுப்பற்ற முறையில் எதையும் எழுதலாம். விளைவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சிக்கல்கள் வந்தாலும் அவற்றிலிருந்து மீண்டு வர வசதியும், செல்வாக்கும்  உள்ளது என்ற சூழலில் வாழ்பவர்கள்தான் இப்படி செய்ய முடியும் என்பது என் கருத்து. 

கந்தசஷ்டி கவசம் பற்றியோ, வேறு எந்தக் கடவுள்கள் பற்றியோ நினைப்பதற்கு நேரமின்றி அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம். சொந்த அனுபவங்களே மனிதனுக்கு எளிதில் பாடங்களளைக் கற்றுத் தர வல்லவை. எல்லோர் மனங்களிலும் கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார் என்ற கேள்வியும், சிறு குழந்தைகள் முதல் வயோதிகர் வரை வேறுபாடின்றி தொற்று நோய்க்கு ஆளாகிக் கொண்டிருக்கும் வேளையில் கடவுள் பற்றிய சிந்தனை வருவதே அரிதுதான். மகாத்மா காந்தி அடிகள் சொன்னார்: பசியால் துடிப்பவனுக்கு சோறே கடவுள்.

இப்போது அதே மனநிலையில் தான் எல்லோரும் இருக்கிறோம். அடுத்த வேளை சோற்றுக்கு வழியின்றி வேலை வாய்ப்பு அற்றுப் போக பலநூறு கி.மீ.கள் கூட்டம் கூட்டமாக கொடும் வெயிலில் நடந்தே சொந்த மாநிலம் திரும்பிய ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு யார் கடவுள்? பள்ளி செல்ல வேண்டிய பிஞ்சுகளை, கொடும் வெயிலிலும் மழையிலும் நடக்க வைத்த கொடுமையிலிருந்து காக்க எந்தக் கடவுள் வந்தார்? 16 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இரயில் பாதை வழியே ஊருக்குச் சென்று விடலாம்,  எப்படியோ பிழைத்துக் கொள்ளலாம் என நம்பிக்கையை மட்டுமே கைக்கொண்டு போனார்களே! ஊர் போய்ச் சேர்ந்தார்களா? இரவில் படுத்துறங்க இடமின்றி இரயில் பாதையில் படுத்துக் கிடந்து உயிர் இழந்தார்களே! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? காப்பாற்ற ஒருவரும் வரவில்லையே? 500 முதல் 600 கி.மீ. வரை நடந்து இறுதியில் உயிரை விட்ட பிள்ளைகளைக் கொல்லுங்குணம் கடவுளுக்கு உண்டா? 

என்ன துன்பம் வந்தாலும், வறுமையிலே வாழ நேர்ந்தாலும் சுயமரியாதையுடன் எந்தத் தவறையும் செய்யாமல் முதுகொடிய உழைத்துப் பிழைக்கும் அன்றாடங்காய்ச்சிகள் வேலையின்றி குடும்பத்தோடு பட்டினி அல்லது தற்கொலை என்னும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளனவே! தடுப்பதற்கோ, காத்து அருள் புரியவோ வந்தவர் யார்? கொரோனா காலத்தில் உலகெங்கும் மக்கள் குறிப்பாக ஏழைகள் படும் இன்னல்களைத் தீர்க்க எந்த மதம் சார்ந்த கடவுளர்கள் வந்தார்கள்? இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? 

இந்தக் கேள்விகளைக் கேட்க இரத்தமும் சதையும் உள்ள மானுட உணர்வு மிக்க மனம் துடிப்பது நியாயம்தானே! கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு என்று பாடிய பட்டுக்கோட்டையார் வரிகள் நெஞ்சில் அலை மோதுகின்றன.

இந்த நேரத்தில் புராண ஆய்வு, நாத்திக, ஆத்திக சார்பு, எதிர்ப்பு பேச்சுக்கள் துயரப்படும் மனங்களின் குரலாகத் தெரியவில்லை. கோணல் மனம் கொண்டவர்கள் சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் திட்டமிட்டு, பொறுப்பற்ற ஆட்சியாளர்களால் படும் இன்னல்களிலிருந்து கடவுள் முதல் நம் எல்லாராலும் கைவிடப்பட்ட மக்களுக்கு இனியாவது ஏதும் உருப்படியாக செய்ய முயலாமல் இப்படி கவனத்தை, ஆடுகளை மோதவிட்டு வழியும் இரத்தத்தை சுவைக்கக் காத்திருக்கும் நரியின் வேலையைச் செய்கிறார்கள் என்றே மனதில் படுகிறது. 

நித்தம் நித்தம், காலகாலமாய்ப் போராடி பெற்ற உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. சமூகத்தில் கீழடுக்கின் வாழ்க்கை நெருக்குதலில் மூச்சு முட்டப் போராடி வெளி வரும் வேளையில் மீண்டும் மீள முடியாப் படுகுழியில் வீழும்படியான சட்ட விளக்கங்கள். அரசின் உயர் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய வழி இல்லா பெரும் மக்கள் தொகுதி, விதிவிலக்காக அரிதாய் விரல்விட்டு எண்ணக்கூடிய பாரதத் தாயின் தரித்திரப் புத்திரர்கள் ஓரிருவர் உள்ளே சென்றாலும் உயிரோடு படித்து திரும்ப முடியாத அவலம்.

அடுக்கிக் கொண்டே போகலாம். நம் அடுத்த தலைமுறையினரின் சுயம் சார்ந்த வாழ்வுக்காய் அணி திரட்டிப் போராட வழி தேடாது, பொருத்தமற்ற சூழலில் கவனம் சிதைக்க வைக்கும் மாய மான்களைத் துரத்தும் நேரம் அல்ல இது. அவர்கள் யார் என சமூகப் பொதுவெளியில் உணர்த்தும் நேரம்!

முகநூல் யாருக்காவது முகமூடியாய் இருந்து விட்டுப் போகட்டும். அவர்களைப் போலன்றி நம் உண்மை முகங் காட்டும் நூலாய்ப் பயன்படுத்தி சதிகாரர்களை முறியடிப்போம்!

விலாசம் மறைத்து வெளியே உலவும் வீணர்களை அரசாங்கம் அதிகாரப் பூர்வமாய்த் தோலுரிக்கட்டும்!




Thursday, July 16, 2020

கொரோனா காலச் சிந்தனகள்
 தனியார் மயம்- பகுதி 3-ஆ

செல் சேவை தாமதமாகத் தரப்பட்டாலும், BSNL தனியார் நிறுவனங்களின் போட்டிகளை எதிர்த்து களம் கண்டது. ஆனால் இலாபம் ஈட்ட முடியாத கிராமப்புறங்களிலும், எளிதில் அடையமுடியாத நிலப்பகுதிகளிலும் சேவைகளைத் தர வேண்டிய பொறுப்பு BSNL இன் தோள்களில் ஏற்றப்பட்டது. மென்மேலும் இழப்புகளை BSNL சந்திக்கவேண்டி வந்தது. BSNL மற்றும் ஒவ்வொரு தனியார் நிறுவனமும், USO (Universal Service Obligation) நிபந்தனையின் அடிப்படையில் குறிப்பிட்ட 5% முதல் 10% தொலைபேசிகளை கிராமப்புறத்தில் தர வேண்டும்; அவ்வாறு தரவில்லை எனில், அதற்கான அபராதத்தை கட்ட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும் BSNL மட்டுமே இழப்பை ஏற்று சேவையைத் தந்தது. மற்ற தனியார் நிறுவனங்கள் இலாபம் வராது என்பதால், அபராதத்தை மட்டும் கட்டிவிட்டு சேவை தரும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொண்டன. இறுதியில் நிதி நெருக்கடி அதிகமாகி, அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், ஊழியர்க்கு மாத ஊதியமே தரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. காலம் காலமாக ஏகபோகமாய் பட்டி தொட்டிகளில் தொலைத்தொடர்பு சேவையைத் தந்த தபால், தந்தித் துறை, தொலைத்தொடர்புத் துறையாக மாறி பின் BSNL பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டு பல்லாயிரம் கோடி இலாபம் ஈட்டிய நிறுவனம், இறுதியில் நலிவுற்ற நிறுவனமாக மாற்றப்பட்ட சுருக்கமான வரலாறு இதுதான். MTNL  நிறுவனத்திற்கும் இதே கதி ஏற்பட்டது. ஒரே வேறுபாடு, MTNL நிறுவனத்தில் பங்கு விற்பனையும் நடந்தது. BSNL நிறுவனம் அவ்வாறு செய்ய தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு பங்கு விற்பனை நடைபெறவில்லை. தற்போது மொத்த ஊழியர்களில் ஏறத்தாழ 84,000 (50%) பேர் விருப்ப ஓய்வில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அதற்குப்பின் நிதி நிலை சீராகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரம் புதிதாக செல் தொலைபேசியில் உலகெங்கும் வேகமாக அறிமுகமாகி வரும் 4G, 5G தொழில்நுட்பத்தை இங்குள்ள தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி சேவை மேம்பாட்டையும் அதன் மூலம் வாடிக்கையாளர் தளத்தையும் விரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
4G தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு மத்திய அரசு BSNL க்கு உதவும் என்று விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவிக்கும் போது சொன்ன அரசு, இப்போது காலை வாரி விட்டுவிட்டது. BSNL இந்தத் தொழில்நுட்பத்தைப் பெற அறிவிப்பு செய்த டெண்டர் இரத்து செய்யப்பட்டு விட்டது. இதன் பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியம். விருப்ப ஓய்வுத் திட்டம் அரசு எதிர்பார்த்ததைப் போலவே முழு வெற்றி பெற்றது. ஆனால் ஒன்பது மாதங்கள் ஆன பிறகும், BSNL ஐ மீண்டெழச் செய்வதற்கான Revival Plan நடைமுறைப் படுத்துவதற்கான எந்த உதவியையும் செய்ய மத்திய அரசு தயாரில்லை. 4G க்கான டெண்டர் வெளியிடப் பட்டதன் மேல் 'தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சேவைகள் முன்னேற்றக் கவுன்சில்' (Telecom Equipments and Services Promotion Council) கொடுத்த புகார் அடிப்படையில் மத்திய அரசாங்கம், BSNL நிர்வாகத்திற்கு, டெண்டரை இரத்து செய்ய உத்தரவிட்டது. டெண்டரில் 'Make in India' வரம்பை மீறி வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்தது தவறு என்பது அந்தப் புகார். 300 கோடி ரூபாய்களுக்குக் குறைவாக உள்ள டெண்டர்களில் வெளிநாடுகளை அனுமதிக்கக் கூடாது என்றுதான் நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். BSNL டெண்டர் மதிப்பு 9,300 கோடி ரூபாய்கள். வேண்டுமென்றே இந்தப் புகாரைத் தந்து தாமதம் செய்ய வேண்டும் என்று சில சக்திகள் தூண்டுவதற்கும் வாய்ப்புள்ளது. தற்போது 3G சேவை தரும் 49,500 BTS (Basic Transceiver Station) நிலையங்கள் 4G நிலையங்களாக மாற்ற 1500 கோடி ரூபாய்கள் தேவை. புதிதாக 4G நிலையங்கள் 15,000 அமைக்கவே  ரூ.9,300 கோடி மதிப்பிலான டெண்டர். இன்று இந்த வேலை நடைபெறாமல் தடுக்கப் பட்டுள்ளது. இதே நேரத்தில் அம்பானி தனது Jio நிறுவனம், 5G தொழில்நுட்பத்தை தருவதற்குத் தயாராகிவிட்டது என்றும், சோதனைச் சேவைக்குப் பிறகு வணிக ரீதியான சேவையை அடுத்த ஆண்டு முதல் தருவோம் என்றும் அறிவித்திருக்கிறார். இப்போட்டியை சமாளித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு BSNL தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் ஓராண்டுக்குள் BSNL மேலும் நலிவடைந்து தனியார் கைகளில் போவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளது. துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், BSNL பொதுத்துறையாகவே நீடிக்கும் என்ற உறுதிமொழியைப் பாராளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் அறிவித்தாலும், அரசின் அணுகுமுறை திருப்தி அளிப்பதாக இல்லை. BSNL இல் இருக்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் போராட்ட அறிவிப்பைச் செய்துள்ளன. இந்த விவரங்களை சொல்வதற்கு முக்கியக் காரணம், இரயில்வேத் துறையில் தனியார் முதலீட்டை அனுமதிப்பது குறித்த மத்திய அரசின் திடீர் அறிவிப்புதான். இலாபம் ஈட்டவில்லை என்று சொல்லி பல பொதுத்துறைகளை தனியாருக்குக் கொடுப்பது அல்லது மூடிவிடுவது ஒரு முறை. இலாபம் ஈட்டும் துறைகளில், வளர்ச்சித் திட்டத்திற்கான நிதி போதுமானதாக இல்லை என்று சொல்லி தனியார் மூலதனத்தை நுழைய விடுவது ஒரு முறை. இரயில்வே துறையைப் பொறுத்து இந்த நடைமுறையைத்தான் மத்திய அரசு பின்பற்றத் துவங்கி உள்ளது.

கடந்த 2020, பிப்ரவரி மாதம், இரயில்வே நிதிக் கழகம், (Railway Finance Corporation), IPO (Initial Public Offer) மூலம், புதிதாக 93.8 கோடி மதிப்பிலான சம பங்குகளை வெளியிட்டு விற்கவும், 46.9 கோடி மதிப்பிலான இந்திய அரசுக்குச் சொந்தமான சம பங்குகளை விற்கவும் சந்தை முறைப்படுத்தும் முகமை SEBI யின் ஒப்புதலைப் பெற்று விட்டது. பங்கு விற்பனை மூலம் தனியார் வருகையைத் துவக்கி வைத்துள்ளது பாஜக அரசு. இதே ஆண்டு ஏப்ரல் மாதம், இரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இரயில்வேத் துறையை தனியாருக்குக் கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லை என உறுதிபடச் சொன்னார். பாஜக, 2014 இல் ஆட்சிக்கு வந்தபோது, பிரதமர், இரயில்வேத் துறை என்றும் தனியார் மயமாக அனுமதிக்க மாட்டோம் என்றார். ஆனால் இப்போது இரண்டாம் ஆட்சிக் காலத்தில், அரசாங்கச் சாலையில் அரசுப் பேருந்துகளோடு, தனியார் பேருந்துகளும் ஓடலாம்; வான்வெளியில் அரசு விமானங்களோடு தனியார் விமானங்களும் பறக்கலாம் என்ற நிலையில், அரசின் இருப்புப் பாதைகளில் தனியார் இரயில்கள் செல்ல அனுமதிப்பது தவறாகுமா எனப் பேசத் துவங்கியதும் காட்சிகள் வேகமாக மாறத் துவங்கி உள்ளன. இரயில்வேத்துறை, தனியார் மயமாகாது என்று பாராளுமன்றத்தில், உறுப்பினர் கேள்விக்குப் பதிலாக சொன்ன அமைச்சர் பியூஷ் கோயல், இப்போது இரயில்வேத் துறையில் தனியார் மூலதனத்தை மட்டுமே அனுமதிக்கிறோம் என்கிறார். ஆக நாடு முழுவதும் நரம்பு மண்டலமாகப் பெருகிக் கிடக்கும்100 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பிரம்மாண்டமான இரயில்வேத் துறையில் தனியார் நுழையத் துவங்கிவிட்டனர் என்பதை யாரும் இனி மறுக்க முடியாது. 

பதின்மூன்று இலட்சம் ஊழியர் குடும்பங்களின் பாதுகாவலனாக, மிகப்பெரும் அரசு முதலாளியாக இருந்து வரும் இத்துறை, பொதுத்துறையாக மாறிய பின்னர், தனியாருக்குப் போவதற்குப் பதிலாக, அரசுத்துறையாக இருக்கும்போதே, தனியார் மயமாகும் புதிய வழி திறந்து விடப்பட்டுள்ளது. அரசுத்துறையாக இருந்த தொலைத்தொடர்புத் துறை BSNL என்ற பொதுத்துறையானபோது, தனியார் மயமாக்கும் வழி என்ற கருத்து இருந்தது. இப்போது அது ஒரு நிரந்தர ஏற்பாடு என்பது முறியடிக்கப்பட்டு விட்டது. ஆளுகின்றவர்கள், பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு 'இது கொள்கை முடிவு' எனச் சொல்லி எதையும் எப்படி வேண்டுமானாலும் அமுல் படுத்தலாம் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. 

தனியார் மூலதனம் மூலம் 30,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாக இரயில்வே கழகத் தலைவர் அறிவிக்கிறார். 1,23,236 கி.மீ. நீளமுள்ள இருப்புப் பாதைகள். 13,452 பயணிகள் இரயில்கள், 9,141 சரக்கு இரயில்கள். நாளொன்றுக்கு 30 இலட்சம் டன் சரக்குகளையும், 2 கோடியே 30 இலட்சம் பயணிகளையும் சுமந்து செல்கிற உலகின் மிகப் பெரிய அரசுத்துறை நிறுவனமான இரயில்வேத் துறையில் தனியார் மூலதனம் வருவதற்கான காரணங்கள் என்னென்ன?

2018-19 இல் ஏறத்தாழ 8.85 கோடி பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார்கள். அவர்கள் பயணம் செய்யும் அளவுக்கு இரயில்களில் இடங்களை ஒதுக்க முடியவில்லை என்கிறது அரசு. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட 5.35 கோடி இடங்களில் 70% குளிர் சாதன வசதியுள்ள இடங்களாகவும் (Seats), 30% சாதாரண தூங்கும் வசதி உள்ள இடங்களாகவும் ஒதுக்கப்பட்டதால், நடுத்தர மக்கள் அதிகம் பயணிக்கும் சாதாரண தூங்கும் வசதி உள்ள இடங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது என்பதைச் சொல்ல அரசு விரும்பவில்லை. இன்னும் இருபது ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை ஓராண்டுக்கு 1300 கோடி என இரயில்வேத் துறை கணிக்கிறது. இவ்வளவு பயணிகளைக் கையாளத் தேவையான வசதிகளைப் பெருக்குவதற்குப் போதுமான நிதிவசதி இல்லாத காரணத்தால் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதாகக் கூறுகிறது. 13,00,000 ஊழியர்களுக்கான ஊதியச் செலவும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியச் செலவும் நாளுக்கு நாள் அதிகரிப்பதும் காரணம் எனக் கூறப்படுகிறது. 

நவீன தொழில்நுட்ப அறிமுகத் தேவை, அதன் மூலம் பயண நேரத்தைக் குறைப்பது, காத்திருக்க வேண்டியிராமல், அனைவரும் பயணம் செய்வதற்கான ஏற்பாடு என இவை அனைத்தும் மற்ற காரணங்களாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு பொதுத்துறையிலும் தனியார் மூலதனம் வழியாக தனியார்மயப் படுத்தும் கொள்கையை அமுல்படுத்துமுன் அரசு முன்வைக்கும் காரணங்கள் இவ்வாறே உள்ளன. தொலைத்தொடர்புத் துறையில் தனியார் வந்தால் சேவை பெருகும் எனச் சொல்லித்தான் பல தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. விளைவு? தொலைபேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகிலேயே இரண்டாம் இடத்திற்கு உயர்ந்தது உண்மைதான். ஆனால் தனியார் அரசு வங்கிகளில் பெற்று திரும்பத் தராமல் இருக்கும் கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டும் தர வேண்டிய கடன் ரூ. 3.9 இலட்சம் கோடி. இந்திய அரசாங்கத்திற்கு, சமீபத்தில் ரிசர்வ் வங்கி தந்த கடனை (1.76 இலட்சம் கோடி)  விட ஏறத்தாழ இரண்டரை மடங்கு. பல தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் நடத்திய கழுத்தறுப்புக் கட்டணக் குறைப்பு யுத்தத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறொரு நிறுவனத்திற்கு விற்றும், சேவையிலிருந்து நிரந்தரமாக விலகிக் கொண்டும் மறைந்தே போயின. கடனைத் திரும்பக் கட்ட முடியாமல் தப்பிக்க எல்லா வகையான தந்திரங்களையும் மேற்கொள்ளும் காட்சியை இன்று நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் BSNL க்கு இருக்கும் கடன் வெறும் 10,000 கோடி ரூபாய் தான். வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன் வாங்க வங்கிகளை அணுகினால் BSNL க்கு கடன் தரக்கூடாது என்று வங்கிகளுக்கு தாக்கீது போகிறது. அரசின் ஒத்துழைப்பை பற்றி தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. மேலும் இது போன்ற உருவாக்கப்படும் நெருக்கடிகள் வரும் ஆண்டுகளில் இரயில்வேத் துறைக்கும் வரும் என்னும் எச்சரிக்கையை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. 

இப்போது இரயில்வேத் துறைக்கு மீண்டும் வருவோம். ஏப்ரல் 2023 முதல் தனியார் இரயில்கள் அரசின் இருப்புப் பாதைகளில் ஓடத் துவங்கும். 151 இரயில்கள்,109 தடங்களில் இணையாய் (pair) ஓடுவதற்கு அனுமதி அளிக்கப்படும். மொத்த எண்ணிக்கையில் இது 5% மட்டுமே என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இரயில்வே போர்டின் தலைவர் கூறியிருக்கிறார். கூடாரத்திற்குள் ஒட்டகம் தலையை மட்டும் தானே நீட்டி உள்ளது என்கிறார் போலும்! 2023 இல் 151 என்று துவங்கி படிப்படியாக இது சுமார் 500 வரை அதிகரிக்கும். ஓட்டுநரும், காவலரும் (Guard) இரயில்வேத் துறை சார்ந்தவர்கள் இருப்பார்கள். எதிர்காலத்தில் அது மாற்றப் படலாம். மற்ற ஊழியர்களை தனியார் நியமித்துக் கொள்வார்கள். அதி வேக இரயில்களாக (மணிக்கு சுமார் 160 கி.மீ. வேகம்) ஓடுவதற்கு ஏற்ப இருப்புப் பாதைகள் இரண்டாண்டுகளில் பலப்படுத்தப் படும். இப்போது வரையறைக்குள் இயங்கும் டெல்லி-லக்னௌ தேஜா இரயில் கட்டணம் ரூ.700-900 என்பதற்குப் பதில் ரூ.2,200 வரை பிரீமியம் முறையில் வசூலிக்கப் படுகிறது. உரிமம் அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் தனியார்கள் தங்கள் கட்டணத்தை தீர்மானிக்க எந்தத் தடையும் இல்லை. விமானக் கட்டணங்களில் இப்போது இம்முறைதான் நடைமுறையில் உள்ளது. காலம், நேரம் சார்ந்து வரும் கூட்டத்தின் அடிப்படையில் கட்டணத்தைக் கடுமையாகக் கூட்டவோ, குறைக்கவோ செய்வதைப் போல தனியார் இரயில் சேவையிலும் செய்து கொள்ளலாம். சமூகத்தில் பொருளாதார ரீதியாக உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கென ஓடும் ரெயிலாகக் கூட மாறலாம். அதிவேகத்தில் பயணம் செய்யும் அவசரத் தேவைகள் பெரும்பான்மை நடுத்தர, ஏழை மக்களுக்கு வராதல்லவா!
அது மட்டுமல்ல. 2023 ஏப்ரல் முதல் துவங்குவதற்கு, 'தகுதிக்கான வேண்டுகோள்' (Request for qualification) தனியார் நிறுவனங்களிடம் கோரப்படும். பின்னர் 'முன்மொழிவுக்கான வேண்டுகோள்' (Request for proposal) பெறப்பட்டு, நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டு உரிமம் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. 
இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பின் (இப்போதைய ஆட்சிக் காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பு), வருவதாக சொல்லும் இந்தச் சேவைக்கும், அரசுத்துறையில் இப்போது இயங்கும் சேவைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த அறிவிப்பு வந்த உடனேயே இரயில்வேயில் நிரப்பப் படாமல் இருக்கும் காலியிடங்களில் 50% இடங்களை திருப்பித்தந்து (surrender) விடவேண்டுமென்றும், புதிதாக உருவாக்கப்பட்ட காலியிடங்களில் ஒன்றைக்கூட நிரப்பக்கூடாது என்ற அவசர உத்தரவு ஏன் வர வேண்டும்? இளைஞர்களுக்கு மிக அதிக அளவில் வேலைகளுக்கான  வாய்ப்பு உள்ள இத்துறையில் ஆட்குறைப்பை இப்போதே துவங்க வேண்டிய அவசியம் என்ன? படிப்படியாக தனியார் நுழைவு அதிகரித்து அவர்களது ஊழியர்கள் எண்ணிக்கை உயர உயர, அரசுத்துறை யில் இயங்கும் இரயில்வேத் துறையில் ஊழியர் எண்ணிக்கைக் குறைக்கப்படுவதோடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பைப் பெறும் SC/ST மற்றும் OBC இளைஞர்களின் வாய்ப்பும் முற்றாகப் பறிக்கப்படும். தனியார் இரயில் சேவை தரும் நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றத் தேவையில்லை. 

அவர்கள்,  இருப்புப் பாதையைப் பயன்படுத்துவதற்காக இழுவைக் கூலி (Haulage) மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்தும் அளவுக்கான கட்டணத்தை இரயில்வேத் துறைக்கு செலுத்த வேண்டும். மேலும் மொத்த வருமானப் பகிர்வு மூலம் வரும் தொகையைச் செலுத்த வேண்டும்.

ஆக மொத்தத்தில் BSNL உள்ளாகியிருக்கும் நிலையை இரயில்வேத் துறை விரைவிலேயே எட்டிப் பிடிக்கும். இதற்கிடையில் இரயில்வேயின் பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உள்பட ஏழு உற்பத்திப் பிரிவுகளை மட்டும் இணைத்து பொதுத்துறையாக மாற்ற முடிவு எடுக்கப் பட்டுள்ளது. பெரம்பூர் தொழிற்சாலைக்கு, டிரெயின்-18 வகை இரயில் பெட்டிகளைத் தயாரிக்க அனுமதி கொடுக்கப் பட்டது. இப்பெட்டிகள் மணிக்கு 160 கி.மீ. வேகத்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவை. தனியாருக்கான இரயில் பெட்டி வகைகளும் கூட. அப்படி யிருக்க, அனுமதி பாதியில் விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளது. ஏன்? விரைவில் பங்கு விற்பனை செய்யத் துவங்க ஏதுவாகப் பொதுத்துறையாக்கிய பின்னர், பங்கு விற்பனை மூலம் தனியார் கட்டுப்பாட்டுக்கு முழுமையாகக் கொண்டு போவதற்கான வழிதான் இது. VSNL பொதுத்துறை ஆக்கப்பட்டு, பங்குகள் இப்படித்தான் டாடாவிற்கு விற்கப்பட்டு இறுதியில் டாடாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குப் போனதை முன்னரே பார்த்தோம். 

இந்தத் திட்டப்படி தனியார் மயமாக்கப்படும் வரிசையில் அடுத்து உடனடியாக பாதுகாப்புத்துறை. இங்கு 71 ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகள் பொதுத்துறையாக மாற்றப்படும் திட்டம் உள்ளது. இது பற்றிய கொள்கை அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து வங்கிகளும், ஆயுள் காப்பீடும் களபலிக்காக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. ஆயுள் காப்பீட்டில் பங்கு விற்பனை மூலம் 1.05 இலட்சம் கோடி நிதி திரட்டும் திட்டம் பிஜேபி அரசிடம் உள்ளது. வறுமையைப் போக்கிக் கொள்ள உழைக்க மனமின்றி, சோம்பேறி ஒருவன், முன்னோர்கள் சேர்த்து வைத்த பாரம்பரியக் குடும்பச் சொத்துக்களை விற்றுத் தீர்த்தக் கதையை கண்முன்னே நடைமுறைப் படுத்தும் வேலை துவங்கி விட்டது. 

ஒவ்வொன்றாக விற்ற பிறகு மேலும் விற்பதற்கு ஒன்றும் இல்லை என்னும் நிலை வரும் வரை இது தொடரும். 

அதன் பின்……? 

யாருடைய கதவோ உடைக்கப் படுகிறது என வாளாயிருக்காமல், நமது முறை விரைந்து வர இருக்கிறது என்பதை உணர்ந்து எழ வேண்டிய இந்தியத் தொழிலாளி வர்க்கம் இனியேனும் விழித்தெழுமா? 











Monday, July 13, 2020

கொரோனா காலச் சிந்தனைகள்
                    பகுதி-3-அ
     விற்பதற்கு வேறென்ன  
                 இருக்கிறது?

பொதுத்துறை நிறுவனங்கள் இலாபம் ஈட்டவில்லை, தனியார் நிறுவனங்கள் போல் செயல் திறன் மிக்கவையாக இல்லை. இதை சரி செய்யவும் இயலாது என்ற செய்தியை பொது வெளியில் ஆழமாகப் பதிய வைத்ததில் ஆளுங்கட்சிகளுக்கு (யார் ஆட்சிக்கு வந்தாலும்) குறிப்பிடத்தக்கப் பங்கு எப்போதும் இருந்து வந்துள்ளது. ஒரு காலத்தில், பொதுத்துறைகளின் தேவைகள் உரத்துப் பேசப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் மட்டுமே சில துறைகள் இருக்கவேண்டும் என்பது கோட்பாடாகவே வரையறுக்கப்பட்டது. ஆனால் காலம் செல்லச்செல்ல தாராளமய, உலகமய நெருக்கடிகள் இவைகளின் பால் இருந்த ஆட்சியாளர்களின் பார்வையை மாற்றச் செய்தன. பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவலும், உற்பத்தி முறைகளும், உற்பத்தி சக்திகளின் முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்தன. பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத் திறமையின்மை, மனித வள மேம்பாடு பற்றிய போதிய அனுபவமின்மை, முடிவெடுப்பதில் உள்ள சிவப்பு நாடா முறை, தொழிற்சங்கப் போட்டி அரசியல், அனைத்திற்கும் மேலாக இந்திய சமூகத்தில் நீக்கமற நிறைந்து புரையோடிப் போன ஊழல்கள் எல்லாம் சேர்ந்து பொதுத்துறையை சிதலை தினப்பட்ட ஆலமரமாக்கின. விளைவு? பொதுத்துறை மீதான மறுவாசிப்பைச் செய்ய, புதிதாய்ப் பிறந்த தனியார் துறைகள், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி சாதுர்யமாக இந்திய அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினர். இதன் விளைவாக, ஆளுங்கட்சி ஆவதற்கான ஆசையில், தேர்தலுக்கு முன்பாக, கோடிக்கணக்கான ரூபாய்களைத் தேர்தல் நிதியாகத் தந்த கார்ப்பரேட் முதலைகளுக்கு இரகசிய வாக்குறுதிகளை தந்த கட்சிகள், ஆட்சிக்கு வந்ததும், செய்ந்நன்றி மறவாமல், வாக்குறுதிகளை முற்போக்கு கொள்கை முடிவுகளாக அறிவித்தனர். அவர்களுக்குச் சாதகமான பல கொள்கை முடிவுகளில் பொதுத்துறையை தனியாருக்கு மாற்றிக் கொடுப்பதற்கான ஏற்பாட்டை விரைந்து செய்து கொடுப்பதும் ஒன்று. 

கொரோனாத் தொற்றின் போர்வையில், மக்கள் வெளிவர முடியாத ஊரடங்கைப் பயன்படுத்தி, ஒன்று திரண்டு போராடமுடியாத சூழலை சாதகமாக்கி பிஜேபி தலைமையிலான மத்திய அரசு காய்களை மிக வேகமாக நகர்த்துகிறது. இதன் விளைவுதான் பலமான அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதற்கான அடுக்கடுக்கு அறிவிப்புகள்.

விடுதலைக்குப் பிறகான இந்திய நாட்டின் துரித வளர்ச்சியில் சோவியத் ஒன்றியத்தின் வழியிலான ஐந்தாண்டுத் திட்டங்கள் கணிசமான பங்கை செலுத்தின. அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் பிரதானமாக தகவல் தொடர்பு, இரயில்வே, பாதுகாப்பு, சுரங்கங்கள், காப்பீடு போன்ற துறைகள் வந்தன. கனரகத் தொழில்கள் மற்றும் உற்பத்தித் துறைகளில் தனியார் அனுமதிக்கப்பட்டனர். பொதுத்துறையை வளர்க்கவும், பொருளாதார வளர்ச்சியில் வலிமையான பங்காற்றவும், அப்போதைய மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது. படிப்படியாக எண்ணெய், உருக்கு, அலுமினியம் போன்ற உலோக உற்பத்தித் துறைகள், ஆயுள் காப்பீடு ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களாக வளர்ச்சி பெற்றன.  மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 280 நிறுவனங்கள் பொதுத்துறையாக செயல் படுகின்றன. மத்திய அரசுத் துறை நிறுவனங்களாக தபால், தந்தி இயங்கியது. நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் தந்த பரிந்துரைகள் அடிப்படையில், தபால், தந்தித் துறை, 1985 ஜனவரி ஒன்று அன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு அஞ்சல் துறை, தொலைத்தொடர்புத் துறை என தனித்தனியே ஆனால் அரசுத்துறைகளாகவே தொடர்ந்தன.  இரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைகளும் அரசுத்துறைகளாகவே செயல்பட்டு வருகின்றன. 

உலக அளவில்  டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி தொலைத்தொடர்புத் துறையையும் பாதித்தது. அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியத் தொலைத்தொடர்புத் துறை உள்ளாகியது. தொலைத்தொடர்பில் செல் தொலைபேசியின் வருகை, எதிர் பாராத பிரம்மாண்டமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் காலத்தில் புதிய தொலைத்தொடர்பு கொள்கைகள் அடுக்கடுக்காக அறிவிக்கப்பட்டு மின்னல் வேகத்தில் நடைமுறைக்கு வந்தன. தொழில்நுட்ப மாற்றங்கள் ஆட்குறைப்புக்கு வழி செய்யும் என தொடர்ந்து நடத்தப்பட்ட வறட்டுத் தனமான 'தொழிற்சங்க அரசியல்' எடுபடாமல் போனது. கிராமமாய்ச் சுருங்கிய உலகில், இந்தியா தனித்து நிற்க முடியாது என்பதை அப்போது யாரும் உணரவில்லை. ஆனால் செல் தொலைபேசியைப் பயன்படுத்தி முதல் அழைப்பில் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்கள் 1995, ஜூலை 31 அன்று, அன்றைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம் அவர்களோடு கொல்கத்தாவிலிருந்து பேசினார். மோடி டெல்ஸ்ட்ரா செல் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி B.K.மோடி உடன் இருந்தார். பின்னர் இந்தக் கம்பெனி 'ஸ்பைஸ்' என பெயர் மாற்றப்பட்டு முதல் செல் சேவையை இந்தியாவில் வழங்கியது. 

தொலைத்தொடர்பு சேவையில் தனியார் நுழைவை அனுமதிக்க அரசு கூறிய காரணங்கள் விவாதத்திற்குரியவை என்றாலும் 90 களில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியும், அசுரவேக மாற்றத்தை ஏற்று முன்னேற வேண்டிய கட்டாயமும் தவிர்க்க முடியாதவையாக ஆகியது. தனியார் சேவை முதலில் கம்பிவழி தொலைபேசி இணைப்பைத் தருவதற்கு அனுமதிக்கப் பட்டாலும், வேகமாய்ப் பாய்ந்து வந்த செல் வழிச் சேவையைத் தரவே பல தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர். மீண்டும் புதிய தொலைத்தொடர்புக் கொள்கை வகுக்கப்பட்டு, தனியார் சேவைகள் துவங்கியது. ஸ்பைஸ், ஏர்டெல், ஏர்செல், டெலிநார், வோடோஃபோன், ஐடியா என புற்றீசல்களாய் வந்த அனைவரும் இந்தியத் தொலைத்தொடர்பு சேவையைப் பங்கிட்டுக் கொண்டனர். அரசின் ஏகபோகமாய் இருந்த தொலைத்தொடர்புச் சேவையில் தனியாரை அனுமதித்த மத்திய அரசு, அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த தொலைத்தொடர்புத் துறைக்கு மட்டும் செல் வழி தொலைபேசிச் சேவையேத் தருவதற்கான உரிமைத்தை மறுத்தது. தனியாரோடு போட்டியிடத் தயார் என்ற நிலையில், இவ்வாறு மறுத்ததுதான், அரசுத்துறையின் மீது விழுந்த முதல் அடி. அதன் பிறகு எடுத்த கொள்கை நிலைகள் இத்துறையின் வளர்ச்சியை சீரழிக்கத் துவங்கின. ஊழியரின் கடும் எதிர்ப்பு ஒரு புறம் இருந்தாலும் மக்களுக்கு தொலைபேசி கிடைப்பதில் இருந்த தாமதங்கள், புதிய செல் தொழில்நுட்ப வருகை, அவர்களைத் தனியார் சேவை நோக்கி இழுத்துச் சென்றன. நாம் கூப்பிடும் அழைப்புகளுக்கு மட்டுமன்றி, நமக்கு வரும் அழைப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய புது முறை யாருக்கும் அதிர்ச்சி ஊட்டவில்லை. இந்நிலையில், அரசாங்கம் தொலைத் தொடர்புத் துறையை பொதுத்துறையாக மாற்ற கொள்கை முடிவெடுத்தது. இது ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல. 1970 இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதே, நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission) தபால், தந்தித் துறை சீர்திருத்தம் பற்றிய ஆய்வின் மேல் தனது பரிந்துரைகளைத் தந்தது. தபால், தந்தித் துறையை இரண்டாகப் பிரிப்பது பற்றியும், தந்தித் துறையை மட்டும் பொதுத்துறையாக மாற்றுவது பற்றியும் தனது விரிவான அறிக்கையைத் தந்தது. அதன்படி அப்போதைய சூழ்நிலையில் எந்த மாற்றங்களும் தேவை இல்லை என முடிவாக அறிவித்தது. தேவை வரும் போது, பரிசீலிக்க மத்திய அரசும் முடிவு செய்தது. 1985 இல் துறை இரண்டானது. ஏப்ரல் 1986 இல் வெளிநாட்டு சேவை (OCS), VSNL என மாற்றம் பெற்று பொதுத் துறையானது. அதே ஆண்டு, டெல்லி, மும்பை உள்நாட்டு சேவைகள் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட MTNL  என்ற பொதுத்துறையாக மாற்றப் பட்டது. இறுதியில்   2000 அக்டோபர் ஒன்று முதல்,  எஞ்சியிருந்த உள்நாட்டு சேவை BSNL என்று மூன்றாவது பொதுத்துறையாக மாற்றப் பட்டது. நாளடைவில்  VSNL டாடா டெலிகம்யூனிஸ்கேஷன் சர்வீஸ் என டாடாவின் கைகளுக்குப் போனது. 

அக்டோபர் 2000 இல்  BSNL என மாற்றப்பட்டாலும் செல் வழிச் சேவையைத் தருவதற்கான உரிமம் 2003 க்குந் பிறகே வழங்கப்பட்டது. இலாபம் தரக்கூடிய பகுதிகள் அனைத்தும் தனியார் கைகளில். எஞ்சிய பகுதிகளில், மக்களுக்கான செல் சேவை கிடைக்காத பகுதிகளில் சேவையைத் துவங்க வேண்டிய அவல நிலை ஏகபோகமாக இருந்த BSNL க்கு வந்து சேர்ந்தது. இச்சவால்களைத் தாங்காது BSNL வீழ்ந்து விடும் என கார்ப்பரேட் முதலாளிகள் கனவு கண்டனர். கொள்கைக் குழப்பங்கள், முடிவு எடுப்பதில் தாமதம், எல்லையற்ற ஊழல், ஒட்டுமொத்த திறமையின்மை, தொழிற்சங்கங்களுக்கு இடையேயான ஒற்றுமையின்மை அனைத்தும் சேர்ந்து இலாபம் ஈட்டிவந்த BSNL துறையை நட்டத்திற்குள்ளாக்கின. ஆண்டுக்கு ஆண்டு வருவாய் இழப்பு அதிகமாகிக் கொண்டு வர ஆரம்பித்தது. இந்த இடத்தில் ஒன்றை மறந்து விடக்கூடாது. BSNL செல் சேவை தர அனுமதிக்கப்பட்ட
பிறகுதான் செல் கட்டணம் குறைக்கப்பட்டு எளிய மக்களுக்கும் எட்டும் சேவையாக செல் சேவை மாறியது.



Sunday, July 12, 2020

மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து இராஜஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு வேலைத் துவங்கி விட்டது. ஒரே மாதிரி ஃபார்முலா.  கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களைப் பிடிக்க முயற்சி செய்வது. அதிருப்தியாளர்களை அடையாளம் காண்பது. பேரத்தை இறுதி செய்வது. கொரோனா போன்ற எந்த பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினை இருந்தாலும் ஆயிரக்கணக்கான கோடி இருப்பில் உள்ள பணத்தை கொண்டு எதையும் சாதித்து விடமுடியும் என்னும் ஆணவத்தின் உச்ச கட்டம் இதுதான். பாஜகவின் பாசிச முகம் அதன் ஒவ்வொரு காரியத்திலும் தெரியத் துவங்கி இருக்கிறது.  ஜனநாயக நெறிமுறைகளில் அதற்கு நம்பிக்கை அறவே கிடையாது.  ஒரே இந்தியா, ஒரே....ஒரே என்பதெல்லாம் அதிகாரக் குவிப்பிற்கான பாசிச வழி முறைகள்.  மார்ச் மாதத்திலிருந்து மக்கள் படும் அவலங்களைத் தீர்க்க துப்பில்லாத அரசு இத்தகைய இழிந்த காரியங்களைச் செய்ய மட்டும் அஞ்சுவதே இல்லை. எதுவரை போகிறது பார்க்கலாம்.

Friday, July 3, 2020

கொரோனா காலச் சிந்தனைகள்
பகுதி-2-இ.

இந்திய, சீன எல்லை ஏறத்தாழ 4000 கி.மீ. தூரம் கொண்டது. காலம் காலமாக பல நூற்றாண்டுகளாக இந்த எல்லைப் பிரிவு இருந்திருந்தால், தகராறு அல்லது பிரச்சினை மற்றும் அதன் மீதான போர் அல்லது இப்போது போல் நடந்த மோதல்கள் நிகழ வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். எல்லை வகுத்தது இரு நாடுகளும் அல்ல; நேபாளம் முதல் திபெத் வரையிலான இடைப்பட்ட பகுதிகளான சிக்கிம், பூடான், லடாக் உள்ளடக்கிய எல்லைகளின் வரையறுப்புகளும் இப்படி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் செய்யப்பட்டவையே. சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒப்புதலோடு எதுவும் நடக்கவில்லை. இதுதான் இன்று வரை இப்பிரச்சினை நீடிப்பதற்கான அடிப்படைக் காரணம். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது இரு நாடுகளும் ஏற்றுக் கொண்ட எல்லை வரையறையால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control-LOC) உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லை மக்மோகன் கோட்டினால் வகுக்கப்பட்டது. மக்மோகன் கோட்டை, சீனா ஆரம்பம் முதல் ஏற்கவில்லை. இந்த எல்லைக் கோட்டுக்கு இரு புறமும் இரு நாடுகளும் தங்களுக்கு உரிய பகுதிகளாக பல இடங்களை அடையாளப் படுத்துகின்றன. இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட எல்லைப் பிரிவினை நடக்காததால், எல்லைக் கோடு வகுக்கப் படவில்லை. மக்மோகன் எல்லைக் கோடுமேற்குப் பிரிவில்,  எல்லை வரையறை தாண்டி இந்தியாவும், கிழக்குப் பிரிவில் சீனாவும் உரிமை கோருகின்றன. இதனால் தான் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு என்ற பதம் (Line of Actual Control)பயன்படுத்தப் பட்டாலும் நடைமுறையில் இரு நாடுகளும் பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தைப் போட்டு தீர்ந்த பின் எல்லைக் கோட்டை இறுதி செய்யலாம் என தங்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டனர். இரு நாடுகளின் பரஸ்பர வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவதும், அதன் மூலம் நட்புறவை பலப்படுத்துவதும் இப்போதைய தேவை என்பதை இரு நாடுகளும் உணர்ந்தனர். 

இப்போதும் காரகோரம் கணவாயின் வடமேற்குப் பகுதியில் இந்தியாவும், அருணாசலப் பிரதேசத்தில் தவாங் பகுதியை சீனாவும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதுபோல் பிரச்னைக்கு உரிய பதின்மூன்று இடங்கள் எல்லை நெடுகிலும் இருக்கின்றன. சுமர், டெம்சோக், பாங்காங் ட்சோ ஏரியின் வடக்குக் கரையில் மேற்கிலிருந்து கிழக்காக நீண்டு கிடக்கும் மலைமுகடுகள் (Ridges) அல்லது விரல்கள் (fingers) என அழைக்கப்படும் பகுதிகள் யாருக்கு என்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. 1 முதல் 8 வரை எண்ணிக்கை உள்ள இந்த முகடுகளில், 4 வது முகடு சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. 8 வது முகடு இந்தியாவுக்குச் சொந்தம். ஆனால் இரு நாடுகளும் சில மீட்டர்கள் இடைவெளியில் ரோந்துப் பணியை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்தது. 

ஆனால் இப்போது சீன இராணுவம், முகடு 4 இல் தாற்காலிகக் கூடாரங்களை அமைத்ததன் மூலம், இந்திய வீர்கள் அதைத் தாண்டி  எட்டாவது முகடுக்கு ரோந்து மேற்கொள்வதைத் தடுத்து விட்டது. இதுவே மோதல் போக்கை ஏற்படுத்தியது. இது மட்டுமின்றி, கல்வான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் மாதத்திற்கு முன்பு உள்ள நிலைகளை மாற்றி, கல்வான் நதியின் அகலத்தை குறைத்து நிலப்பரப்பாக்கி நிரந்தர கட்டிடங்களை சீன இராணுவம் சிறுகச் சிறுக அமைத்து இப்போது கல்வான் பள்ளத்தாக்கு முழுவதுமே தங்களுக்குச் சொந்தம் என கொண்டாடத் துவங்கி விட்டது. நம் இந்திய அரசு, நமக்குச் சொந்தமான பகுதியில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக சாலை அமைப்பதே சீனாவின் எரிச்சலுக்குக் காரணம் என்று சொல்கிறது. இது உண்மையா?

 இல்லை. இது உண்மை இல்லை. சீனாவைப் போலவே நாமும் LAC யிலிருந்து  குறிப்பிட்ட அனுமதிக்கப்பட் தூரத்தில் ரோந்து செல்லும் பகுதியில் நெடுஞ்சாலையை அமைக்கும் பணியை 1999 இல் இந்தியா துவங்கி விட்டது. நேருவின் காலத்தில் அமைக்கப்பட்ட IFAS (Indian Frontier Administrative Services) 1968 வரை இந்தப் பணிகளைச் செய்து வந்தது. அந்த ஆண்டு அது கலைக்கப்பட்ட பிறகு, இப்பொறுப்பு, BRO (Border Roads Organisation)  என்ற அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டு, அதனிடம் கொடுக்கப்பட்டது.  ஏறத்தாழ 30,000 கி.மீ. மொத்த தூரமுள்ள 850 சாலைகள் அமைப்பதற்கான தேவையை பாதுகாப்பு அமைச்சகம் அரசுக்குத் தெரிவித்தது. முதல் கட்டமாக, நேரடி எல்லையை ஒட்டிய 4,000 கி.மீ. தூரத்திற்கான 73 சாலைகளை அமைப்பதற்கான வேலையை BRO வின் ஆலோசனையின் படி 1999 இல் இந்திய அரசு துவங்கியது. சீனாவிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விமானம் இறங்கு தளத்தையே இந்தப் பகுதியில் நாம் கட்டி முடித்திருக்கிறோம். உண்மை இப்படியிருக்க, சமீபத்தில், 2018 க்குப் பிறகு புதிதாக 323 கி.மீ தூரத்திற்குப் பலப்படுத்தப்பட்ட  Darbuk-Shyok-Daulat Beg Oldi சாலைதான், சீனாவின் கோபத்திற்குக் காரணம் என்ற செய்தியைக் கசிய விடுவதும், அதன் மீது ஊடகங்கள் எதிரும் புதிருமாக விவாதங்கள் நடத்தி, செய்தியை ஊதிப் பெரிதாக்கி, இதுதான் மோதலுக்கான காரணம் என்ற கருத்தைப் பதிய வைப்பதும் பிரச்சினையை எளிமைப் படுத்த மட்டுமே உதவும். தீர்வுக்கு உதவாது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் துவங்கி, மத்திய அரசு பாராளுமன்றத்தில் வீராவேசமாக, பெரும்பான்மை ஒன்றை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு, வேறெந்த ஜனநாயக நெறிமுறைகளையும் பின்பற்றாது, ஒன்றன்பின் அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்ததும், அவைகளை நிறைவேற்றிய துணிச்சலில், உள்துறை அமைச்சரின் அறிவிப்புகளும் அண்டை நாடுகளுடனான சுமுகமான உறவினை உரசிப் பார்க்கத் துவங்கின. ஆனால், இந்த அரை வேக்காட்டுத்தனமான அறிவிப்புகளை,  ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிப் போன இந்திய ஊடகங்களுள் பல, இந்த அரசின் பராக்கிரம செயல்களாகப் பறைசாற்றி தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினர். பூகோள- அரசியல் ஏற்படுத்தப் போகும் பின்விளைவுகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகச் சொல்லி கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்த நெருக்கடி முற்றியதால், இந்த அறிவிப்புகள் 'கவனம் திருப்பும்' நடவடிக்கையின் ஓர் அம்சமாகவே இருந்தது. 

1.காஷ்மீருக்கான 370 பிரிவின் படி சிறப்புச் சலுகை இரத்து செய்யப்பட்டது.

2.லடாக், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப் பட்டது.

3. இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இவைகளின் மீது பாகிஸ்தான் தன் கண்டனத்தைத் தெரிவித்து, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகத் தன்னை காட்டிக்கொள்ள இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. தீவிரவாதிகளின் ஊடுருவல் கணிசமான எண்ணிக்கையில் இன்று அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானின் எதிர்வினை (Reaction) எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் சீனாவின் அறிவிப்பு, இரு நாடுகளின் உறவில் ஏற்படப் போகும் விரிசலை எதிரொலித்தது. லடாக், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை சீனா கண்டித்ததோடு, இந்த சட்டம் அமுலாவதை ஏற்க முடியாது என பகரங்கமாக அறிவித்து தன் அதிருப்தியை பதிவு செய்தது. லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சனை இருக்கும் போது, தீர்வை இறுதி செய்யாத சூழ்நிலையில் தன்னிச்சையாக இவ்வாறு அறிவித்ததை சீனா ஏற்கவில்லை. எது சரி, எது தவறு என்பதற்கு அப்பால் பல ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுடனான நட்பு சீர்கெடத் துவங்கியது என்பதை கவலையோடு நாம் பார்க்க வேண்டியுள்ளது. 

அடுத்து, உள்துறை அமைச்சர், லடாக்கை ஒட்டிய, 1962 போருக்குப் பின், சீன வசம் இருக்கும் 'அக்சாய் ச்சின்' பகுதியை மீட்டெடுப்போம் என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி விரைவில் நம்மோடு வந்து விடும் என்றும் அதிரடி அறிவிப்பை அறிவித்தார். அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு அமைச்சர், அந்தப் பகுதி மக்கள் நம்மை நாடி வந்து விடுவார்கள் என, உள்துறை அமைச்சரின் பாட்டுக்கு, தெளிவுரை எழுதினார். இந்திய ஊடகங்கள் இவற்றுக்குப் பெரிதாக விளம்பரம் கொடுக்காமல், TRP (Television Rating Point) எகிற உருப்படாத உள்ளூர் விவகாரங்களில் கவனம் செலுத்தின.

ஆனால், சீனாவுக்கு இந்த அறிவிப்புகள் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் உண்டாக்கின. 1993 இல் போடப்பட்ட 'இந்திய- சீன எல்லைப் பகுதிகளில் LAC நெடுகிலும் சமாதானத்தையும், அமைதியையும் காப்பது' என்ற ஒப்பந்தமும், 1996 இல் எட்டப்பட்ட 'இந்திய-சீன எல்லைப் பகுதிகளில், LAC நெடுகிலும் இராணுவ தளத்தில் நம்பிக்கையைக் கட்டுவதற்கான அளவுகோல்கள்' பற்றிய ஒப்பந்தமும் இன்று முறியக்கூடிய ஆபத்தான சூழலை, ஆர்ப்பாட்ட அறிவிப்புகள் ஏற்படுத்தி உள்ளன. 'இரு தரப்பினரும்,  LAC க்கு இரு பக்கமும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குள், துப்பாக்கி சூடு நடத்தவோ, ஆபத்தான இரசாயன பொருட்களைப் பயன்படுத்தவோ,துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களைக் கொண்டு வேட்டையாடவோ கூடாது' போன்ற அம்சங்கள் 1996 ஒப்பந்தத்தில் உள்ளன. சமீபத்திய மோதலின் போது கூட, இதை இரு தரப்பினரும் மீறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதைவிட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் 45 ஆண்டுகளுக்குப் பின் நடந்து இரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்?

அக்சாய் ச்சின்னை மீட்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் எப்படி, எந்த வழியில் என்பதற்கான பதில் இந்திய அரசிடம் இல்லை. இது ஒரு புறம் இருக்க, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது பற்றிய அறிவிப்பு சீனாவின் கவலையை அதிகரித்தது. அப்பகுதி, சீனாவுக்கு இன்றியமையாத ஒன்றாக ஆகியிருக்கிறது. சீன-பாகிஸ்தான் பொருளாதார நீள் வழி  (CPEC), இப்பகுதி வழியேதான் செல்கிறது. பெரும் அளவு நிதியை சீனா இங்கு முதலீடு செய்துள்ளது. ஏற்கெனவே, சீனாவின் 'பெல்ட் ரோடு' திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு, சீனாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கலாம். 

இதோடு மட்டுமன்றி, அகில உலக ரீதியிலான இந்தியாவின் அரசியல் அணுகுமுறைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், சீனாவின் சந்தேகத்தை அதிகப் படுத்துவதாக அமைந்தன. நேரு காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றி வந்த 'கூட்டு சேராக் கொள்கையிலிருந்து' கொஞ்சம் கொஞ்சமாக இப்போதைய அரசு விலகி, அமெரிக்காவின் 'செல்வாக்கு வளையத்திற்குள்' வரும் போக்கை கடைப்பிடிக்கத் துவங்கியிருப்பதை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சுட்டிக் காட்டுகிறார். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எழும் பிரச்சினைகளில், அமெரிக்க ஆதரவு நிலையையே இந்தியா எடுத்தது. இந்திய பசிபிக் பிராந்தியத்திய பிரச்சினைகளில் சீனாவுக்கு எதிராக, இந்தியா, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்தது. 
மேலும், நான்கு நாடுகளின் கூட்டமைப்பில் (Quad), அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு இந்தியா நான்காவது நாடாக சேர்ந்துள்ளது. எஞ்சிய மூன்று நாடுகளும் எல்லா பிரச்னைகளிலும், கோவிட்-19, உள்பட சீனாவுக்கு எதிர்நிலை எடுப்பவை. இந்தியா இதில் சேர வேண்டிய அவசியம் என்ன? அமெரிக்காவின் குழப்ப அரசியலுக்குத் தனி உரிமை கொண்டாடும் அதிபர் ட்ரம்ப், G-7 ஏழு பெரும் நாடுகள் அமைப்பில் சீனா நீங்கலாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளை இணைப்பதற்கான அறிவிப்பை செய்தார். இதுவும் சீனாவுக்கான ஓர் எதிர் முகாமை அமெரிக்கா அமைக்கும் வேலைதான். இதில் சேர்வதற்கான ஒப்புதலை இந்தியா முன்னரே தெரிவித்து விட்டது. புதுடெல்லியும், வாஷிங்டனும் மிக நெருக்கமாக ஆவதை சீனா எச்சரிக்கையோடு பார்ப்பதாக அதன் அதிகாரப்பூர்வ அரசியல் ஏடு 'குளோபல் டைம்ஸ்' எழுதியது. கொரோனாத் தொற்று நோய் குறித்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், சீனா மீது சாட்டிய குற்றச்சாட்டுகளை இந்தியாவும், உண்மை நிலைகளை ஆராயாமல், நிதானமின்றி ஆமோதித்தது. மீண்டும், 'குளோபல் டைம்ஸ்', தனது தலையங்கத்தில், சீனா, இந்தியா மீது காட்டும் நட்புறவுக் கொள்கையை, இந்தியாவும் கடைப்பிடிக்க வேண்டும்; வாஷிங்டனால், இந்தியா முட்டாளாக்கப்படக் கூடாது என பகிரங்கமாகக் குறிப்பிட்டது. இத்துடன் மட்டுமன்றி, இந்தியா, சீனாவில் இருந்து பெறும் 'அந்நிய நேரடி முதலீட்டின்' அளவை ஒருதலைப் பட்சமாகக் கணிசமாகக் குறைக்கத் துவங்கியது. இந்த மாற்றங்கள், சீனாவின் சந்தேகத்தை அதிகமாக்கியது.

சீனாவிலும் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் கோவிட்-19 க்குப் பிறகு அதிகமாயின. தென் சீனக் கடலில் சீன மேலாதிக்கம், அதற்கு புதிய எதிரிகளை உண்டாக்கி உள்ளது. தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சீனாவின் மேல் குற்றம் கூறுகின்றன. ஆஸ்திரேலியா, கனடா போன்று சீனாவை எப்போதும் எதிர்க்கும் நாடுகளும், ஐரோப்பாவில் அமெரிக்க ஆணையை மீற முடியாத சில நாடுகளும் உலக அரங்கில் சீனாவுக்கு எதிரான மேடையை அமைக்கத் துவங்கினர். சீன அதிபரின் சில கொள்கைகளுக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. மாவோவுக்குப் பின் அதிகாரக் குவிப்புகளோடு ஆளும் ஒருவராக, 'க்சி ஜின்பிங்' விளங்குகிறார். நோய்த் தொற்றின் பாதிப்பால் உலக வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கேற்பட்ட பொருளாதார சரிவும் கணிசமானது. இந்தப் பின்னணியில் நம் இரு நாட்டு எல்லைப் பிரச்சினை, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதைப் போல் ஆகியது. ஏதாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசியல் கட்டாயம் அவருக்கு! 1962 போருக்கும், பூகோள அரசியல் காரணமானது என்றாலும், மாவோ முன்னெடுத்த 'தாவிப் பாய்ச்சல்' (Great Leap) திட்டம், பெரும் தோல்வியை உண்டாக்கி, அவருக்கு கட்சி மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடியைத் தோற்றுவித்தது. உலக அரங்கில், சோவியத் நாடு உள்பட அனைவரும் மாவோவின் அரசியல் நிலையை ஏற்கவில்லை. இவ்வாறு தனிமைப்பட்டுப் போன சூழலில், அதிலிருந்து மீள, மாவோ, (நம் நாட்டு தலைவர்களைப் போல)  இந்தியாவின் மீதான போரை தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றினார். அதே போன்ற நெருக்கடி இப்போது அந்நாட்டு அதிபருக்கு வந்திருக்கிறது. ஹாங்காங் பிரச்சினை நெருக்கடியை முற்ற வைத்துள்ளது. எனவே மோதல் போக்கை கையிலெடுக்க வேண்டிய நிலைக்கு சீனா தள்ளப் பட்டுள்ளது. 

எனவேதான், ஏப்ரல் மூன்றாம் வாரம் முதல் கல்வான் பள்ளத்தாக்கில் ஆக்கிரமிப்பு நிலையை சீனா மேற்கொள்ளத் துவங்கியது. அதுவரையில், நாம் சாலை போடுவதை எதிர்க்காத சீன இராணுவம், தங்கள் எல்லைக்குள் சாலை போடுவதாகச் சொல்லி தடுத்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக தற்காலிக மற்றும் நிரந்தர கட்டிடங்களை முன்தயாரிப்பு(Prefabricated) பாகங்கள்
மூலம் வேகமாக அமைத்தது. தங்கள் பக்கம் உள்ள கல்வான் ஆற்றின் நீர்ப்பகுதியை தூர்த்து நிலமாக்கி, அங்கும் கட்டிடங்களைக் கட்டி முடித்த பின் இப்போது கல்வான் நதி, பள்ளத்தாக்கு முழுவதும் தங்களுக்கே சொந்தம் எனக் கோரி வருகிறது. அதையொட்டி நடந்த நிகழ்வுகள் இறுதியில் பெரும் மோதலாக மாறி இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதோடு மீண்டும் நல்லுறவு திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமான தருணங்களில் நமக்கு உதவி செய்யாத அமெரிக்காவை நம்பி, நம் அண்டை நாடுகளைப் பகைத்துக் கொள்வதும், ஆசியாக் கண்டத்தில் வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியாவும், சீனாவும் நல்லுறவோடு இருப்பது மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போவதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் இரு நாடுகளும் நிதானமாக, உறுதியான அரசியல் திசைவழியில், பொறுமையான பேச்சு வார்த்தை மூலம் இச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என முன்னாள் வெளியுறவுச் செயலரும், சீனாவில் இந்தியத் தூதராகப் பணி புரிந்த நிருபமா ராவ் கூறியிருப்பது பொருள் பொதிந்தது. போரிடுவது வெற்றிக்கான வழியல்ல. இப்போர் மூள வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் எதிர்பார்க்கின்றனர். உலகிற்கே வழி காட்டக் கூடிய அளவிற்கு வளர்ந்துள்ள இரு நாடுகளின் வலிமை ஒரு போர் மூலம் சிதைய வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவேதான் சொந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாது தவித்து வரும் வேளையிலும், கொம்பு சீவும் வேலையில் துரிதம் காட்டுகின்றனர். போரில் இந்தியாவுக்கு ஆதரவாக வருவதற்கு தயார் என வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர்.

1967 ஆம் ஆண்டு இந்திய சீனப்போரில், இந்தியாவுக்கு எதிராக அணுஆயுதத்தை சீனா பயன்படுத்தும் என்ற வதந்தி செய்தியாக உருப்பெற்று உலவ விடப்பட்டது. அப்போது இந்தியாவிடம் அணு ஆயுதத் தொழில் நுட்பம் இல்லை. எனவே, அமெரிக்க உதவியை இந்தியா கோரியது. தேவைப் பட்டால் அணு ஆயுதம் வழங்கக் கேட்ட போது, முதலில் உதவுவதாக வாக்களித்துப் பின் மறுத்து விட்டது. ஏழாவது கப்பற்படை ஏன் அனுப்பியது என முன்பே பார்த்தோம். 
தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உதவுவதாக வீரசபதம் போட்டாலும், பாகிஸ்தானுக்கு ஆயுதம் தர மாட்டோம் என அவ்வப்போது சொன்னாலும் இன்று வரை அந்நாட்டுக்கு ஆதரவான நிலை அமெரிக்கா எடுப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில், நம் பிரதமர் தனக்கு மிகவும் பிடித்த நண்பர் என வாய்ப்பு வந்த போதெல்லாம் உரக்கக் கூறி வந்த ட்ரம்ப், கொரோனா தடுப்பு மருந்தான 'ஹைட்ராக்ஸி குளோரோ க்யின்' பெருமளவில் தர வேண்டும் என இந்தியப் பிரதமரைக் கேட்டார். நம் நாட்டின் தேவைக்குப் பின் அனுப்புவதாக நெருங்கிய நண்பர் மோடி சொன்னவுடன், அனுப்பாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என மிரட்டியதன் மூலம் மோடியை 'நெருக்கிய' நண்பரானார் ட்ரம்ப் என்பதை நாம் அனைவரும் கண்டோம். பிறகு இந்தியா, மனிதாபிமான அடிப்படையில் அம்மருந்தை அனுப்பி வைத்ததையும் பார்த்தோம். சிறந்த நட்பு என்பது சம தளத்தில் சம மரியாதையுடன் வளர வேண்டும். 'கூடா நட்பு கோடி இன்னல்' என்பதை மறந்தால், அதற்கான விலையைத் தர நாம் தயாராக வேண்டும். 

நேற்று வரை நட்பு நாடு என்றும், இன்று எதிரி நாடு என்றும், போலித் தனமான தேசபக்த உணர்வைத் தூண்டி உள்நாட்டில் அரசியல் பிழைப்பு நடத்தும் வேலை, ஆக்கபூர்வமான எல்லைத் தீர்வுக்கு உதவாது. எல்லையில் நம் பகுதியில் சீனா ஊடுருவி ஏராளமான படை பலத்தோடு இராணுவம் அத்து மீறியதை மறுக்க வேண்டியதில்லை. அவ்வாறு மறுத்த அடுத்த நாள் மறுத்த பிரதமரைப் பாராட்டு சீனப் பத்திரிகை, 'நாங்கள் ஊடுருவவில்லை என இந்தியப் பிரதமரே சொல்லி விட்டார்', என எழுதிய உடன், தர்மசங்கடமான சூழலில், பிரதமர் அலுவலகம், அவரது பேச்சை மறுமொழி பெயர்ப்பு செய்ய வேண்டியதாயிற்று. செய்தி ஊடகங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த யுகத்தில் யாரும் எதையும் மறைக்கவோ, உண்மைக்குப் புறம்பாக மறுக்கவோ இயலாது என்பதை அனைவரும் உணரவேண்டும். இன்றும் எல்லை நெடுக நம் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் அவர்களுடைய கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றன. ஐந்தாம் கட்டமாகப் பேச்சு வார்த்தை தொடர்கிறது. தாமதமானாலும் இது நல்ல அணுகுமுறை.  

அதை விடுத்து, வெற்று ஆரவார உரைகள்,  'டிஜிட்டல்' தாக்குதல், வர்த்தக ரீதியான அவசர நடவடிக்கைகள், ஒவ்வொரு பிரச்சினையிலும் தீர்வுக்கான வழிகளைப் பாராது, குறுகிய தேசியவாத வெறியைக் கிளப்புதல், கவலையோடு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பிரச்சினையை அணுகும் அனைவரையும் தேச விரோத சக்திகள் என அடையாளப் படுத்த முனைவது எல்லாம் ஆரோக்கியமான அரசுக்கு அழகல்ல. 

இந்தியாவின், சமரசமற்ற, கூட்டுச் சேராக்கொள்கை வழி நின்று உலகிற்கு வழி காட்டும் நாடாக நம்மை உயர்த்திக் கொள்ளும் பாதையில் பயணிக்க முயல்வோம்.