Saturday, June 13, 2020

கொரோனா சிந்தனைகள்- பகுதி 1

1.எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் துவங்கி உலக நாடுகளுள் ஏறத்தாழ199 நாடுகளைப் பீடித்து, காட்டுத்தீயெனப் பரவி வரும் கொரோனாவுக்கு நமது நாடும் விதிவிலக்கல்ல. உலகின் வலிமை மிக்க அமெரிக்கா, இந்நோயின் நட்டநடு மையமாகி இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய செய்திகள் அதிர்ச்சி தரத் தக்கதாகவும், நம்ப முடியாத வகையிலும் உள்ளன. இந்நோய்க்கான தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லாத இந்நிலையில் இந்நோயைக் கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மருத்துவம் மற்றும் கிருமிகள் குறித்த ஆய்வுகள் அடிப்படையில் அந்தந்த நாட்டு ஆய்வறிஞர்கள் தரும் ஆலோசனைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 

உலக சுகாதார நிறுவனம், தந்த வழிகாட்டுதல், சோதனை, சிகிச்சை, தொற்றைக் கண்டுபிடித்தல் (Test, Treat, Trace) என்பதாகும். இதை எல்லா நாடுகளும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. ஆனால் பரவும் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்த நாடுகளான தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சோதனை வேகத்தை அதிகப்படுத்தி, (Test, Test, Test) பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப் படுத்தி சிகிச்சையைத் தீவிரப் படுத்தியதால், நோயின் பரவும் வேகத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி விட்டனர். முன் அனுபவமின்றி முதல் தாக்குதல்களுக்கு ஆளான இரண்டாம் பெரிய பொருளாதார வல்லரசான சீனா, அதிக மக்கள் தொகையும், மக்கள் நெருக்கமும் கொண்டதால் 'தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்தல்' என்னும் வழியை மேற்கொண்டது. முதல் தாக்குதல் ஹூபே மாகாணத்தின் (Province) தலைநகரான வுகான் பெருநகரில்! ஒருமாத ஊரடங்கு! மாகாணம் முழுவதற்கும் நீட்டிக்கப்பட்டது. மக்களுக்கு பழக்கமில்லாத ஒன்று. வெளிநாட்டு மக்கள், வெளிமாநில மக்கள், வெளியூர் மக்கள் என அனைவருக்கும் எங்கும் ஒரு மாதத்திற்கு நகரமுடியாத சூழ்நிலை! ஆனாலும் கடும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாக வேண்டிய புறச்சூழ்நிலை! சவால்களை சந்தித்தனர். அசுர வேகத்தில் பத்து நாட்களுக்குள் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டிமுடித்த அதிசயத்தை அகிலமே பாராட்டியது. சீன அரசின் நடவடிக்கைகளை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இறுதியில் நோயை வென்று மக்கள் உயிர்ச் சேதாரம் அதிகரிக்காது, மேற்கொண்டு பரவல் இல்லாமல் தடுத்து வெற்றி பெற்றுள்ளது.

சீனாவைப் போன்றே இயற்கை சூழ்நிலை, நில அமைப்பு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றில் பொருந்தி வருகிற நமது நாடும் சீனாவின் நடைமுறையை மேற்கொண்டதில் வியப்பில்லை. 

மற்ற நாடுகளிலிருந்து குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த வண்ணம் இருந்த நோய் பற்றிய பல்வேறு செய்திகள்,  இங்கு நமது நாட்டில் பல மாநில அரசுகளை மத்திய அரசுக்கு முன்னரே நடவடிக்கைகளைத் துவங்க உதவின. வெளிநாடுகளிலிருந்து அதிக பயணிகள் வரும் மாநிலங்களான மகாராஷ்டிரம்,கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, தமிழ்நாடு, புதுவை, கர்நாடகம்,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், மக்கள் விழிப்புணர்வு, அரசியல் செயலூக்கம் நிறைந்த தென்னிந்திய மாநிலங்களும், மேற்கு வங்கமும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க முனைந்தது பாராட்டுக்குரியது. கூட்டம் போடுவது கூடாது, தனித்திருப்பதே பாதுகாப்பு என பிரதமர் அகல நெஞ்சின் ஆழத்திலிருந்து வேண்டுகோள்கள் விடுத்த போது, மத்தியப் பிரதேசத்தில் மட்டும் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின் அரியணை ஏறும் வைபோகங்கள் எந்தத் தடையுமின்றி அரங்கேறின.

கடும் நிதி நெருக்கடிக்கிடையே, பல மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வந்திருக்கிறது. மத்திய அரசு, சீனாவைப் பின்பற்றி, ஒரு மாதத்திற்குப் பதிலாக 21 நாட்கள், ஆனால் ஒரு மாநிலத்திற்குப் பதிலாக, நாடு முழுவதுக்குமான ஊரடங்கை அறிவித்தது. எழுபது விழுக்காடு மக்கள் வாழுகின்ற 
ஏழரை லட்சம் கிராமங்களைக் கொண்ட, இந்திய மக்கள் ஏற்றுக் கொண்டனர். விதி மீறல்கள், சட்டத்தைப் பின் பற்றாமை ஒரு பக்கம் இருந்தாலும், பெரும்பான்மையாக மக்கள் கடும் வாழ்க்கை நெருக்கடிகளுக்கிடையே ஊரடங்கை நடைமுறைபடுத்துவதில் ஒத்துழைக்கின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஊரடங்கை அறிவித்த மத்திய அரசும், அறைக்குள்ளே அமர்ந்து ஆணைகளிட்டது. 

தேவையான நேரத்தில் தேவையான நிதி உதவி மத்திய அரசிடமிருந்து இல்லை எனில், நிதிப் பற்றாக்குறையால் திண்டாடும் மாநில அரசுகள் என்ன செய்ய இயலும்?  ஆனாலும் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மக்கள் எதிர்வினைகளைப் புரிந்திருந்ததால், செயல்படுத்தி வருகின்றனர். ஆணைகளை இடவும், அவ்வப்போது அறிவுரைகள் வழங்கவும் வாய் திறந்த பிரதமர், நிதி ஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் துவக்கத்தில் வாய் திறக்காதது மக்களை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நிலைமை சிக்கலாகிக் கொண்டிருப்பதை மத்திய அரசு அதிகாரிகளும், மாநில அரசுகளும் உணர்த்திய பின், மாண்புமிகு பிரதமர், நாடு முழுவதுக்குமாக 15,000 கோடி ரூபாயை ஒதுக்குவதாக வாய் மலர்ந்தார். பெருங்கடலில் கரைத்த பெருங்காயம்! 

சிறிய மாநிலமான கேரளா, அம்மாநிலத்திற்கென மட்டும் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கிய போதுதான் இந்தியா முழுவதுக்கும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை எவ்வளவு அற்பசொற்பமானது என்பதை மக்கள் உணர்ந்தனர். குடியரசுத்தலைவர் மாளிகை விரிவுக்கும், அழகு படுத்தவும் மூன்றாண்டு நிதியாக 20,000 கோடி ஒதுக்கிய மோடி அரசுக்கு நாடே எதிர்கொண்டிருக்கும் பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற 15,000 கோடி ரூபாய் தான் ஒதுக்க முடிந்தது மக்கள் மனதில் கோபக்கனலைக் கிளப்பி விட்டது. முன்னாள் நிதி அமைச்சர் திரு. ப.சிதம்பரம் அவர்கள் மத்திய அரசு செய்ய வேண்டிய கடமைகளாக பத்து யோசனைகளைத் தெரிவித்தார். 

எங்களிடமே பொருளாதார சரிவைப் போக்கவல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள் என பாராளுமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் வழக்கம் போல நீட்டி முழக்கிய நிதி அமைச்சர் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கவென்று அடுத்த நாளே நலத் திட்டங்களை, பிரதமருக்குப் பதிலாக அறிவிக்க நேர்ந்தது. ஏறத்தாழ 5,00,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என முன்னாள் நிதியமைச்சர் சொன்ன பிறகு, 1,70,000 கோடி ரூபாய்களுக்கான நலத் திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்பு இறுதியானதா எனக் கேட்டதற்கு நிலைமையை ஒட்டி பரிசீலிப்பதாகவும் சொன்னார். 

இந்த அறிவிப்புகளில் மாநில அரசுகளுக்கென புதிய நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லை. ஏனெனில் இந்த அறிவிப்பு வந்ததற்குப் பிறகுதான் தமிழக முதலமைச்சர் முதலில் 4,000 கோடி ரூபாய் வேண்டும் என்றும் அடுத்த நாளே 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் மூலம் கேட்டுள்ளார். இதிலிருந்தே மாநில அரசுகளின் நிதி நெருக்கடியைப் புரிந்துகொள்ள முடியும். முன்னாள் நிதி அமைச்சர், மத்திய அரசு வாரி சுருட்டி வைத்திருக்கும் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் GST வருமானத்திலிருந்து எளிதாக போதுமான நிதியை ஒதுக்கலாம் என வெளியே சொன்ன பிறகும், நிதியை எங்கிருந்து பெறுவீர்கள் என இந்நாள் நிதியமைச்சரை திரும்பத்திரும்ப நிருபர்கள் கேட்டபோது பதில் சொல்லாமல் நழுவியது ஏன் என்பது புதிராகவே உள்ளது.

சரி, இப்போது அறிவிப்புகளைப் பற்றி பார்ப்போம். நிதி அமைச்சர் அளித்த நிதி ஒதுக்கீடு 1,70,000 கோடி ரூபாய்கள். இந்தியாவைப் பொறுத்து இந்த எண் ஒரு மாயாஜால எண். ஆம். 2G ஊழல் எனப் பேசப்பட்டபோது அதன் மதிப்பு இந்தத் தொகைதான். அனில் அம்பானி தன் R.Com. தொலைத்தொடர்பு கம்பெனிக்காக வாங்கிக் கட்டாத கடன் 1,75,000 கோடி. ஏர்டெல், வோடோஃபோன் கம்பெனிகள் அரசுக்குக் கட்டாமல் ஏமாற்றி வரும் தொகையின் மதிப்பு 1,76,000 கோடி. சில மாதங்களுக்கு முன் டாடா, அம்பானி வகையறாக்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்ற கடன் தள்ளுபடிக்கான தொகையும் ஏறத்தாழ 1,75,000 கோடி. இறுதியில் நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் அவசரகால வைப்பு நிதியிலிருந்து தானடித்த மூப்பாக எடுத்துக் கொண்ட தொகையின் மதிப்பும் 1,76,000 கோடிதான். இது என்ன மாயமோ!

இப்போது நிதி அமைச்சர் அறிவித்துள்ள 1,70,000 கோடி ரூபாய்களும் மக்களுக்கு நேரடியாகக் கையில் கிடைக்குமா என்றால், அதற்கான பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆம். பளு ஏற்றிய வண்டியை இழுக்கும் குதிரைக்கு முன் தொங்கவிட்ட காரட்டைப் போல, வாய்க்கெட்டாத நிலை!

  1. விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆண்டுக்கு 6,000 ரூபாயில் முதல் தவணை ரூ. 2,000 வங்கியில் போடப்படும் என்ற அறிவிப்பு. இது தேர்தல் வாக்குறுதியாக பாஜக வால் சொல்லப்பட்டு, பின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று தவணைகளாகத் தரப்படும் என சொல்லி இது வரை தராமல் தள்ளிப் போட்ட பணம். கொரோனாவை ஒட்டி தரும் நிதி அல்ல இது. முன்னரே ஒதுக்கிய நிதியை இப்போது இதில் காட்டப்படுவதை என்னவென்று அழைப்பது?

  1. தொழிலாளர்கள் கட்டவேண்டிய அடிப்படை ஊதியத்தில் 12% EPF சந்தாவை மூன்று மாதங்களுக்கு மத்திய அரசே கட்டிக் கொள்ளுமாம். முதலாளிகள் செலுத்த வேண்டிய 12% பங்கையும் அரசே செலுத்த அறிவிப்பு. இதற்கென எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பது சொல்லப்படவில்லை. அது மட்டுமல்ல; யார் யாருக்கு இது பொருந்தும் என்பதில் தான் தன் கெட்டிக் காரத் தனத்தை அரசு மறைக்கிறது. 100 பேருக்கும் கீழ் வேலை பார்க்கும் நிறுவனங்களில், 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மட்டும் என்ற வரையறை பல லட்சக்கணக்கான அமைப்பு சார்ந்த தொழிலாளர்களை விலக்கிவிடுகிறது. BSNL, இரயில்வே போன்ற பொதுத்துறைகளில் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் சமூகப் பாதுகாப்பில்லாத அமைப்பு சாரா ஒப்பந்த ஊழியர்கள் இந்த சலுகையைப் பெற முடியாது. ரூ.15,000  என்ற வரம்பு, அமைப்பு சார்ந்து ஆனால் 15,000 ரூபாய்க்கும் சற்றே அதிகமான ஊதியம் பெறும் அஞ்சல் துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களையும் இந்த பலன் சென்றடையவில்லை. நிதி நெருக்கடியால் நாடெங்கும் மூடப்பட்டிருக்கும் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளில் பல ஊழியர்களுக்கு ஊதியமே இல்லை என்ற சூழ்நிலையில் எவ்வளவு பேருக்கு இந்தப் பலன் கிடைக்கும்?

  1. பி.எஃப், இ.பி.எஃப் பில் இருக்கும் தொகையில் 75% தொகையைக் கடனாகப் பெற்றுக் கொள்ளலாமாம். ஊழியர்கள் சேர்த்து வைத்தப் பணத்தை கடனாகக் கொடுப்பது சலுகையல்ல. அது உரிமை. விழுக்காட்டை அதிகப்படுத்தியது சாதனையா, அதுவும் இந்த நெருக்கடியான நிலையில்? அழுவதா, சிரிப்பதா எனத் தெரியாது கலங்குவது இந்த அரசு உணருமா?

  1. கிராம மக்களின் கண்ணீர் துடைப்பதாக முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி அரசு அவர்களுக்காக அறிவித்த சலுகையைப் பார்ப்போம். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தில் 100 நாட்கள் வேலை செய்பவர்களுக்கு நாள் ஊதியம் ரூ.180 லிருந்து ரூ.202 ஆக உயர்த்தி இருக்கிறார்கள். ஆண்டு முழுவதும் 100 நாட்கள் வேலை கிடைத்து வேலை செய்தால் கிடைக்கும் அதிக ரூபாய் 2000. ஊரடங்கைப் போட்டு முடக்கியபின் அவர்கள் இப்போது வேலைக்குப் போக முடியுமா? ஊரடங்கு முடிந்து போனாலும் வேலை தரப்படுமா? அப்படியே வேலை கிடைத்து அந்த சொற்பப் பலனைப் பெற இன்று வீட்டுக்குள் ஈரத்துணியை அடிவயிற்றில் சுற்றிக்கொண்டு உயிரோடு இருக்கவேண்டும். அப்படித்தானே. மக்கள் வறுமையோடு இந்த விளையாட்டை விளையாட அலாதியான நெஞ்சழுத்தம் வேண்டும். பாசிஸ்டுகளுக்கு இது போன்ற துணிவுண்டு என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.

  1. விதவைப் பெண்கள், ஆதரவற்றோர், உடல் ஊனம் உற்றவர்களுக்கு மாதம் ரூ. 500 உதவித்தொகை. அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி, கொரோனாவின் உடனடித் தாக்குதல்! இந்த சூழ்நிலையில் மாதம் ரூ.500 எந்த அளவுக்குக் கைகொடுக்கும்?

  1. வங்கி மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்களுக்கு வாங்கிய கடனுக்காக மூன்று மாதங்களுக்கு மாதாமாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகையைக் கட்ட வேண்டியதில்லை என ஒரு அறிவிப்பு. தனியார் நிதி நிறுவனங்களைக் கட்டுப் படுத்தாது இந்த அறிவிப்பு என பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள். இது பற்றி தெளிவுபடுத்த நிதி அமைச்சர் தயாரா? இந்நாட்டிற்குள் இயங்கும் தனியார் நிதி நிறுவனங்களை இது போன்ற சூழ்நிலை யில் கட்டுப் படுத்துவது யார்? அது மட்டுமல்ல; நான்காம் மாதம் கட்டும் போது எல்லாவற்றையும் சேர்த்துக் கட்ட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இந்தச் சுமையைத் தாங்க எல்லாராலும் முடியுமா? 

  1. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வரம்பை அதிகரித்து ஓர் அறிவிப்பு. கடன் தொகையை அதிகப் படுத்துவதன் மூலம் கடன் சுமை அதிகமாக்கப் படுவதால் கடனைக் கட்ட முடியாமல் அக்குழுக்கள் செயலிழக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். நிவாரணம் ஏதுமில்லாத அறிவிப்பு.

இவைகளுக்கப்பால் மாநிலம் விட்டு மாநிலம் குடும்பத்தோடு வந்து இருக்க இடமின்றி, நோயினின்றும் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் கால்நடையாகவே பல நூறு கிலோமீட்டர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் கைக் குழந்தைகளோடு நடந்து சொந்த மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கு இந்தத் திட்டத்தில் சொல்ல, செய்ய ஏதும் இருக்கிறதா நிதி அமைச்சர் அவர்களே! கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 7,00,000 கோடி ரூபாய்களுக்கு சலுகை அளிக்க முடிந்த மோடி அரசால், 33 தொழிலதிபர்களுக்கு 76,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்ய முடிந்த இவர்களால், கல்விக்கடனை மட்டும் தள்ளுபடி செய்ய முடியாது. விவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது. இடர் பல ஏற்று விளைவித்த பொருள்களுக்கு நியாய விலை கிடையாது.  எதிர்பாராது சிக்கித் தவிக்கும் இந்தச் சூழ்நிலையிலும்,GST மூலம் 
மாநில அரசுகளுக்குத் தர வேண்டிய, நிறுத்தி வைத்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் முடக்கி வைத்துள்ள மோடி அரசு,ஏதும் செய்ய வழியின்றி ஏழை மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் நாடகத்தை  மட்டும்  நடத்துகிறது. 

வெற்றுக் கண்ணீர் வேலைக்கு ஆகாது! மன்னிப்பு நாடகம் மக்கள் பசிக்கு மருந்தாகாது!

மருத்துவ வசதிகள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கிராமங்களுக்கும், நகர்ப் புறங்களுக்கும் சென்று சேர வேண்டும்.
நோய்த் தொற்று இருப்பதை உறுதிசெய்ய சோதனை மையங்களை அதிக அளவில் எளிய வழியில் மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். காப்பு மருந்துகள் இல்லாத நிலையில், தடுப்பு மருந்துகள் எல்லா இடங்களிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனையில் 25% போதுமான படுக்கைகளை ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது முறையாக செய்யப்பட்டிருக்கிறதா,செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தலமட்டங்களில் வருவாய்த்துறை, ஊரக மற்றும் நகராட்சி அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். ஊரடங்கால் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் ஏழைக் குடும்பங்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் நடைமுறைத் திட்டங்களை உடனே அறிவிக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் தேவை ஏராளமான நிதி. நேரம் பார்த்து நிதானமாக செலவு செய்ய இது சாதாரண சூழ்நிலை அல்ல. பிறப்பிக்கப்படாத அவசர நிலை! 

மக்கள் அரசின் ஆணையை சிரமேற்கொண்டு அத்துணை துயரங்களையும் சகித்துக்கொண்டு நடக்கிறார்கள். விதிவிலக்குகள் எங்குமிருக்கும். 
விதிவிலக்குகளை விதியாகக் கருதி, மக்கள் ஒத்துழைக்கவில்லை; வல்லரசுகளே ஒன்றும் செய்ய இயலவில்லை; வீட்டுக்குள்ளே இருப்பதை மட்டுமே செய்தால் போதும்; பிரார்த்தனை செய்வோம் என்றெல்லாம் சொல்லி மக்கள் மேல் பழி போடுவதற்குப் பதில் தேவையான நிதியை தேவையான நேரத்தில் ஒதுக்கி இந்த பேரபாயத்திலிருந்து நாட்டைக் காக்க ஆவன செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

செயத் தக்க செய்யாமை யானும் கெடும்!


































No comments:

Post a Comment