உயிர் பாதுகாப்பும், உரிமைப்
பாதுகாப்பும்.
கொரோனா தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதம் முதல் உலகம் முழுதும் மக்கள் படும்துயர் சொல்லமுடியாத அளவிற்குப் பெருகி விட்டன. உயிர் இழப்புகளும், உடைமை இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பொருளாதார பலம் மிக்க அமெரிக்கா, காட்டுத் தீயாய் பரவி நாசம் செய்யும் கொடுமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணருகிறது. அந்நாட்டு அதிபர் மீண்டும் அதிபராகும் கனவில் தினமும் முன்னுக்குப் பின் முரணாக அதிரடி அறிக்கைகளை வெளியிட்டு தன் இயலாமையை மென்மேலும் நிரூபித்து வருகிறார். மாதக்கணக்கில் தனித்திருப்பதால் பொதுமக்களும், நோயைக் கட்டுப்படுத்தும் பணிகளை இடையறாது செய்ய வேண்டிய காரணத்தால் அப்பணிகளில் ஈடுபடும் பலதுறை அதிகாரிகளும், ஊழியர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாவதால் பல்வேறு மனரீதியான, உடல்ரீதியான நோய்களுக்கு ஆளாகின்றனர். ஆனாலும் சமூகக் கட்டுக்கோப்பையும், அமைதியையும் சட்டம் ஒழுங்கு மூலம் பாதுகாக்க வேண்டிய காவல்துறையும், நீதித் துறையும் தங்களுக்கான கூடுதல் பொறுப்பை மறந்து விட்டார்களோ என பாமர மக்களே எண்ணும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
'லாக் டவுன்' விதிகளை மீறியதாக பொதுமக்கள் மீது போடப்படும் வழக்குகள், வாகன ஓட்டிகள் மீதும், வணிகர்கள் மீதும் விதிக்கப்படும் தண்டத் தொகையின் மதிப்பு ஆகியவை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போவதைப் பார்த்து மக்கள் சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கிறார்கள் என்பதைப் போன்ற தோற்றம் உண்டாகிறது. இது உண்மையா? எனில், இல்லை. தவறு செய்பவர்கள் சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் ஒட்டு மொத்தமாக சமூகமும் அவ்வாறு செய்கிறது என்ற முடிவுக்கு வருவது தவறு. துறை வாரி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும். ஆனால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுள் யாரோ ஒரு சிலரின் நடவடிக்கை, ஒட்டுமொத்த துறையின் மீதான நம்பிக்கை இன்மையையும், அதன் மூலம் அரசுக்கு அவப் பெயரையும் உண்டாக்கி விடுகிறது. குறிப்பாக காவல்துறை மற்றும் நீதித்துறை. இத்துறைகள் மீதான சாமான்ய மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது நாட்டுக்கு நலம் பயக்காது. அரசியலமைப்பு முறைக்கே ஆபத்தாக முடியும்.
சட்டத்தின் ஆட்சி என்ற உயர்ந்த பதம், அதைக் காக்க வேண்டியவர்களாலும், நடைமுறை படுத்துபவர்களாலும் தங்கள் மனம் போன போக்கில் தங்களது கையில் உள்ள அதிகாரம் என எண்ணி சிதைக்க முற்படும் போது அதனால் பாதிப்பை எதிர்கொள்ளும் சமுகத்திற்கும், தனிமனிதர்களுக்கும் யார் பாதுகாப்பைத் தர முடியும்? சமூகமே உரிமைகளுக்காய் குரல் கொடுக்கும் போது, அதன் வீச்சு வேறாக இருக்கிறது. தனிமனிதன், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளின் கீழ் செயல்படும்போது, சட்டத்தைக் காக்கும், கையாளும் கரங்கள் இரும்புக் கரங்களாய் மாறி அடக்கவும், அச்சுறுத்தவும் முயல்வது ஜனநாயக நாட்டில் அறவே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
கடையை குறித்த நேரத்தில் மூடவில்லை என்பதால், தந்தை, மகன் இருவரும் தாக்கப்பட்டு, காவல் நிலையத்தில் ஒருவர் பின் ஒருவராக இறந்து போன சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்ட நிகழ்ச்சி அது நடந்த அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் பெரும் கொந்தளிப்பை கடந்த வாரங்களில் ஏற்படுத்தியது. இங்கே நடந்த நிகழ்ச்சி அதைவிடக் கொடூரமானது. கொடுமைக்குக் காரணமானவர்கள் மாற்றப் படுகிறார்கள். மக்கள் எதிர்ப்பு வலுத்ததும், தற்காலிக பணி நீக்கம் செய்யப் படுகிறார்கள். சட்டத்தை உறங்காமல் இருக்கச் செய்ய நாம் விழிப்பாக இருப்பதன் அவசியம் புரிகிறது. தாய், தந்தையை காவலரின் தாக்குதலில் இருந்து தடுக்க முனைந்த சிறுவனை மற்ற காவலர்கள் தாக்கிய கொடுமையைப் பார்த்தவர்களுக்கு 'காவல்துறை மக்கள் நண்பன்' என்னும் வாசகத்தை எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? போக்குவரத்துப் பிரிவு காவலர் கைகளில் தவழும் அபராதம் விதிக்கும் கருவி, வாகன ஓட்டிகளுக்கு கையெறி குண்டாகக் கண்ணுக்குத் தெரிகிறது. எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்பது போல, எப்போது அபராதம் விதித்து அந்த சீட்டு வரும் என்பது தெரியாமலே வாகனத்தை, ஓட்டவும், நிறுத்தவும் வேண்டும். அவர்கள் நினைத்தால் எந்த ஆவணத்தையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் 'மூட்' சரியில்லை என்றால் எந்த நடைமுறையையும் பின்பற்றாமலே அபராத சீட்டை நிறுத்தி உள்ள வாகனத்தில் வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதில் நாமும் அவரும் கையெழுத்திட வேண்டும் என்ற விதி அவர்களுக்குத் தெரியாத ஒன்று. ஏன், எதற்கு என கேட்பதற்குக்கூட வழியின்றி அபராதத்தை செலுத்த வேண்டும். இவர்கள் கையில் போவதற்குப் பதில் அரசுக்குப் பணம் போகிறது என்ற திருப்தியோடு குடிமக்கள் செல்ல வேண்டியதுதான். சட்டத்தின் நோக்கம் தடம்புரண்டு, சட்டம் இவர்கள் விரும்பும் போது விழிக்கும்; இல்லை எனில் உறங்கும் என்னும் சூழ்நிலை. இதற்கு என்ன தீர்வு?
சட்டத்தை செயல் படுத்துபவர்கள் இப்படி என்றால், சட்டத்தைக் கொண்டு சமூகத்தைக் காக்கும் பொறுப்பில் உள்ள நீதிமன்றங்கள் செயல் படும் விதம் வேதனையாக உள்ளது. உயர் ஜாதி ஸ்வாதி கொலையில், கொலையாளி என சொல்லப்பட்டவர் சமூகத்தில் அடித்தட்டில் பிறந்தவர். அவர் தண்டனைபெறும் முன்பே வாழும் தகுதியை இழக்கும் நிலை! ஆனால் கவுசல்யா- சங்கர் வழக்கில், சங்கர் கொலை செய்யப் படுகிறார். பின்னணியில் யார் என்பது அனைவருக்கும் தெரியும். கீழமை நீதி மன்றம் குற்றவாளிகளுக்கு அளித்த மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டும், முக்கிய நபருக்கு விடுதலையும் தந்து நீதி தன் செங்கோலை வளைத்துக் கொள்கிறது.
அரசு மற்றும் அந்த இயந்திரத்தின் பாகங்களாகச் செயல்படும் இத்துறைகள் செய்யும் குளறுபடிகளை சுட்டிக் காட்டவும், சரிசெய்யப் படாத சூழ்நிலையில் அறவழியில் குடிமக்கள் போராடவும் முனைவது சட்ட நடைமுறைகளில், ஜனநாயக நெறிமுறைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அவ்வாறு செய்யும் போது அவர்களை தேசத் துரோகிகளாகப் பார்க்கும் கொடுமை மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு நாளுக்கு நாள் அதிகரித்தக் கொண்டே போகிறது.
பல எடுத்துக் காட்டுகளை சொல்லலாம். வடமாநிலங்களில் கடைபிடிக்கப்படுகின்ற நடைமுறைகள் தமிழகத்திலும் வரத் துவங்கி உள்ளது கவலை தரத்தக்கது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாதக்கணக்கில் நடைபெற்ற போராட்டங்களை, உயிர் இழப்புகளை நாம் அறிவோம். கொரோனா பாதிப்பை ஒட்டி எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அப்போராட்டங்களை மட்டுப்படுத்தி உள்ளன. நாடு முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். வழக்கு போடப்பட்டவர்கள் பிணையில் வெளியே வந்து நீதிமன்ற விசாரணைக்குக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு திருமணமான மாணவி கைது செய்யப்படுகிறார். அவரைப் பிணையில் விடுவதற்கு நீதிமன்றம் மறுக்கிறது. மீண்டும் மீண்டும் அவர் முன்வைக்கும் வேண்டுகோள்கள் நிராகரிக்கப் படுகின்றன. நான்காவது முறை மறுக்கப்பட்டு சிறை வாசம் செய்ய வேண்டிய அவலம். அவ்வாறு மறுக்கப்படும் அளவுக்கு அவர் செய்த குற்றம்? போராட்டத்தில் ஈடுபட்டு துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் என்பதை விட வேறு எந்தக் கொடும் குற்றமும் அவர் செய்யவில்லை. இத்தனைக்கும் அந்த மாணவி கருவுற்ற பெண். அவருக்கு சட்டத்தின் ஆட்சி தரும் அனுபவம் எவ்வளவு கொடியது?
இது போன்ற செயல்களில் ஓர் அரசியல் கட்சி தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், ஆட்சி மீதான அதிருப்தி எழும் போது அதை அடக்கி ஒடுக்கவும் செய்வது இந்திய நாட்டில் வழக்கமாகிவிட்டது. அக்கட்சியின் பண்புநலன் பற்றி மக்கள் தெரிந்துகொண்டு அதற்கான நீதி வழங்குவதும் இங்கு பழக்கமான ஒற்றுதான்.
ஆனால் ஒரு கருவுற்ற ஒரு இளம் மாணவிக்கு இந்த அனுபவத்தை நீதிமன்றங்களே தரத்துவங்கி இருப்பதுதான் சட்டத்தின் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்கி உள்ளது.
No comments:
Post a Comment