கொரோனா காலச் சிந்தனைகள்-பகுதி 2-அ.
இந்திய-சீன எல்லைச்
சண்டை.
இந்திய சீன எல்லைச் சண்டை என்றவுடன் 1962 இல் நடந்த இந்திய சீனப்போர்தான் நினைவுக்கு வரும். இன்றைய தலைமுறைக்கு அது வரலாறாக மாறிப் போன ஒன்று. பலருக்கு அது பற்றிய விபரங்கள் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அப்போரின் பின் விளைவுகள், இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஜவஹர்லால் நேருவின் மறைவுக்கும் அது காரணமாக அமைந்தது என்னும் கருத்து இன்றும் உலவி வருவதை மறுப்பதற்கில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளும் இந்திய அரசின் வர்க்கத் தன்மை குறித்தும், புரட்சியை நடத்த எவ்வழியைத் தேர்வு செய்வது என்பது குறித்தும் ஏற்பட்ட தத்துவார்த்த வேறுபாடுகளால் தலைமை, இரு அணிகளாகக் கட்சிக்குள் பிரிந்து செயல் பட்ட நேரம். இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வென்று உலகைக் காத்த பெரும்பங்கை சோவியத் யூனியன் செய்தாலும், அதற்கு கொடுத்த விலை நேச நாடுகளைவிட பன்மடங்கு அதிகம். நாட்டின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு, மக்கள் வாழ்க்கை பெருஞ்சோகமான சூழ்நிலையில் மீண்டும் தன்னை உலக அரங்கில் வலிமை வாய்ந்த நாடாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் அதற்கு இருந்தது. எனவே சோசலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புவது என்னும் முனைப்பிற்கே முன்னுரிமை தர வேண்டியிருந்தது. மீண்டும் ஒரு போர் என்பதை நினைத்துப் பார்க்கவே தயாரில்லை. சமாதான சகவாழ்வு மூலம் ஏகாதிபத்திய முகாமோடு முரண்களைத் தவிர்த்து அமைதி வழியில் நாட்டை புனரமைக்க எடுத்த நிலைபாடு, சீனாவுக்கு ஏற்புடைத்ததாக இல்லை. மாவோ தலைமையில் 1949 இல் புரட்சி வெற்றி அடைந்த பிறகு, நாட்டை முன்னேற்ற வேண்டிய அவசியம் அதற்கும் இருந்தது. ஆனால் ஏகாதிபத்திய நாடுகளோடு சமாதானம் என்ற சோவியத் யூனியன் நிலையை சீனா ஏற்கவில்லை. வர்க்க சமரசம் செய்து கொண்டு உலகின் மற்ற பகுதிகளில் நடைபெற வேண்டிய புரட்சியை பலவீனப் படுத்துவதாகக் குற்றம் சுமத்தியது. இந்த அணுகுமுறையில் வந்த வேறுபாடு உலக கம்யூனிச இயக்கங்களிலும் பிரதிபலித்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இந்த கருத்து வேறுபாடு தலைமையில் இரு அணிகளை உருவாக்கியது. இறுதியில் இந்திய சீனப் போருக்குப் பின் 1964 இல் கட்சி இரண்டாகப் பிளந்ததில் முடிந்தது.
நமது இராணுவம் குறித்த தவறான கணிப்புகளாலும், சீனாவின் மீதான நம்பிக்கையாலும், முன் கூட்டிய தயாரிப்புகளை காலத்தே நமது அரசாங்கம் செய்யாததாலும் போரில் பெரும் பின்னடைவை இந்தியா சந்திக்க வேண்டிவந்தது. தொலை தூரம் இந்திய எல்லைக்குள் முன்னேறிய சீனாவின் மக்கள் விடுதலைப் படை (People's Liberation Army) சிறிது நாட்களில் தானே பின்வாங்கியது. ஆயினும், 'அக்சாய் சின்' (Aksai Chin) பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏறத்தாழ 38,000 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்தோம். இந்தியாவுக்கு வருகை தந்த சீனப் பிரதமர் சூ-யென்-லாய், பண்டித ஜவஹர்லால் நேருவோடு இணைந்து பவனிவந்த காட்சி, இரு நாடுகளின் நட்புக்கு சான்றாக அமைந்தது. 'இந்தி- சீனி பாய், பாய்' என்ற முழக்கம் இரு நாடுகளிலும் எதிரொலித்து ஓய்வதற்குள் சீனப்படையெடுப்பு நம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நேரு மனமொடிந்து போனார். பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் பதவி விலக நேரிட்டது.
அக்சாய் சின் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் கருத்து வேறுபாடுகள் இன்றும் நிலவுகின்றன. அந்த இழப்பு உண்மையில் இழப்புதானா என்பதை வேறு கட்டுரையில் பார்க்கலாம். பிரிட்டிஷ் இந்தியா என்பதற்கு முன் மொகலாயர் வசமிருந்த பெரும்பகுதி இணைக்கப்பட்டு மொகலாய இந்தியா உருவானது. கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்து நேரடியாக பிரிட்டிஷ் மகாராணியின் ஆட்சிக்கு மாறியபின், நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் வசம் இருந்த நிலப்பகுதிகள், பிரிட்டிஷ் அரசின் வலிமையாலும், தந்திரங்களாலும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கப்பட்டு பிரிட்டிஷ் இந்தியா உருவானது என்பதை யாரும் மறுக்க முடியாது. அகண்ட பாரதம் என்ற குரலை இன்று உரக்க எழுப்புவர்களின் தலைவர்களும் இதை நன்கு அறிவார்கள். பிரிட்டிஷார் வருகையால் ஏற்பட்ட சில நன்மைகளுள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் எல்லை விரிவு படுத்தும் நோக்கத்தால், இன்றைய இந்தியாவுக்குக் கூடுதலான நிலப்பகுதிகள் கிடைத்ததும் ஒன்று. இன்றைய மணிப்பூர், அஸ்ஸாம் ஆகிய இரண்டு பகுதிகளும் அன்றைய பர்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இன்றைய அருணாசலப் பிரதேசத்தின் தவாங், திபெத் தனிநாட்டுக்குச் சொந்தமாக இருந்தது என்பது இன்று நமக்கு கசப்பான உண்மை. இந்தப் பின்னணியில் தான் இந்திய சீன எல்லைப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும். 'கண்மூடித் தனமான தேசபக்தி' என்னும் கண்ணாடி வழி பார்ப்பவர்கள் தன் சொந்த அரசியல் பிழைப்பிற்காக இப்பிரச்சினையை அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார்கள். நிரந்தரத் தீர்வை விரும்பும் ஒவ்வொருவரும் காய்தலும் உவத்தலும் அகற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
1954 ஆம் ஆண்டு இந்திய-சீன பஞ்ச சீல ஒப்பந்தம் கையெழுத்தானது. சமாதான சகவாழ்வு, எல்லைப் பிரச்சினையில் அமைதி வழிப் பேச்சு வார்த்தை, உள்நாட்டுப் பிரச்சினையில் மற்றொருவர் தலையிடாமை, சம மரியாதை, படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் தவிர்ப்பது ஆகியவை கொள்கைகள். ஆயினும் பர்மாவின் (மியான்மர்) பிரதமர், சூ-யென்-லாயை நம்பக் கூடாது என நேருவை எச்சரித்ததை சற்று கவனத்துடன் நேரு பார்க்கத் துவங்கினார். சீனாவின் நடவடிக்கைகளில் தெரிந்த சில மாற்றங்கள் அதை உறுதிப்படுத்தின. ஏற்கனவே, மாவோ சொன்ன உருவகத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 1949 புரட்சிக்குப் பின், சீனா வேகமாகத் தன்னை புனரமைக்கத் துவங்கியது. அப்போது மாவோ, 'திபெத் நமது பகுதி. இன்று தனி நாடாக உள்ளது. சீனாவுக்கு வலது உள்ளங்கை போன்றது திபெத். அதனுடைய விரல்கள் நேபாளம், சிக்கிம், பூட்டான், லடாக் மற்றும் வடகிழக்கு எல்லைப்புற மாகாணம். எனவே விரல்களை உள்ளங்கையோடு இணைக்க வேண்டும் என்று அறைகூவல் விட்டார். 1962 இந்திய சீனப் போரில், நமது தோல்விக்கு நேருவே காரணம் என பழி தூற்றும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு பழைய வரலாறு தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும், நேருவின் மீதான இந்திய மக்களின் மாறா அன்பை சிதைப்பதையே தலையாய நோக்கமாக, அரசியல் கடமையாக ஓய்வின்றி செய்பவர்கள் அதை இருட்டடிப்பு செய்யும் வேலையை மட்டுமே செய்வார்கள். மாவோ சொன்ன ஐந்து விரல்களும் நம் நாட்டு எல்லையை ஒட்டி உள்ளவை. இந்திய அரசு நேருவின் தலைமையில் எடுத்த கொள்கை முடிவுகள், அவை மீதான இடையறாது உறுதியாகத் தொடர்ந்த பணிகள், மாவோவின்- சீனாவின் கனவு சிதைவதில் முடிந்தது. 1959 இல், திபெத்தை, சீன மக்கள் விடுதலைச் சேனை கைப்பற்றியதும், ஆட்சியாளர் தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சம் அடைந்ததும், இந்திய சீன உறவு சீர்குலையத் துவங்கியது. எனவே மூன்று முக்கியமான முடிவுகளை நேரு தலைமையிலான அரசு எடுத்தது. சீனா, காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைக் கோரியது. நாகா மற்றும் மிஜோ அதிருப்தியாளர்களுக்கு புகலிடம் தந்து இராணுவப் பயிற்சி தந்து நமக்கெதிராகக் கலகம் விளைவிக்கத் தூண்டியது. விரைந்து செயலாற்றத் துவங்கினார் நேரு.
முதலாவதாக, எல்லைப்புறத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிர்வாகம் செய்யவும் IFAS (Indian Frontier Administrative Services) என்னும் இந்திய எல்லைப்புற நிர்வாகப் பணிகள் துவங்கிட ஒரு பரிசோதனைத் திட்டம் தயாரிக்கப் பட்டது. வெளியுறவுத் துறை செயலாளர் இந்த பணிக்கான தேர்வு வாரியத்தின் தலைவர். IAS, IPS மற்றும் IFS பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்கட்டமைப்பு வேலைகளைக் கவனிக்க, அப்பகுதிகளில் நியமிக்கப்பட்டனர். இந்த அமைப்பின் பணி மகத்தானது.
இரண்டாவதாக, ஜம்மு காஷ்மீரின் பகுதியாக நம் நாட்டோடு இணைந்த லடாக் மற்றும் வடகிழக்கு எல்லைப்புற மாகாணம் (NEFA), நேபாளம், சிக்கிம், பூடான் ஆகிய அண்டை நாடுகளுடன் உடன்படிக்கைகள் கையெழுத்தானது. சிக்கிம் நாட்டிற்கு பாதுகாவலராக
(Protectorate) இந்தியா விளங்கும் என்பதற்கான உடன்படிக்கைக்குப் பிறகு 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான அரசு, சிக்கிம் மக்களின் கருத்தொற்றுமையோடு, மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, இந்தியாவின் இருபத்தியிரண்டாவது மாநிலமாக இணைத்தது. NEFA அருணாசலப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இன்னொரு மாநிலமாக நம்மோடு இணைக்கப்பட்டது. இந்த சாதனைகளைச் செய்தது யார்? எந்த அரசு? 'அக்சாய் சின்னை' நேரு இழந்தார் என பரப்புரை செய்பவர்கள், இதை மக்கள் முன் சொல்லத் துணிவார்களா? போடப்பட்ட ஒப்பந்தங்கள் காலாவதியாகும் போது, தேவைக்கேற்ற புதுப்புது மாற்றங்களைச் செய்து அவைகளைப் புதுப்பிக்கும் வேலையையும் முந்தைய அரசுதான் செய்தது. நேபாளம், எல்லை சம்பந்தமாக பேச்சு வார்த்தைக்கு பலமுறை வேண்டுகோள்கள் விடுத்தும், அதை தட்டிக் கழித்ததோடு புதிய தேசப்படத்தை தன்னிச்சையாக பாஜக அரசு வெளியிட்டதால், காலம் காலமாக மத, பண்பாட்டு ரீதியில் தொடர்ச்சியான வலிமை வாய்ந்த நட்புறவு முற்றாக சிதைந்தது. விளைவு? அந்நாட்டு பாராளுமன்றம் இதுவரை இந்தியப் பகுதிகளாக இருந்த லிபிலேக், காலாபாணி மற்றும் லிபிதூரியா ஆகிய எல்லைப்புற பகுதிகள் தங்களுடையது என அறிவித்து, அவைகளை உள்ளடக்கிய தேசப்படத்தை அதிகாரப் பூர்வமாக்கும் வண்ணம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தமும் செய்து தீர்மானத்தை நிறைவேற்றி விட்டது.
அழுத்தமாக இந்த அரசும், பிரதமரும் வழக்கம் போல மவுனம் சாதிப்பதிலிருந்து வெளியுறவில் நமக்கேற்பட்ட தோல்வி வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
மூன்றாவதாக, திபெத்திலிருந்து அடைக்கலம் அடைந்த தலாய் லாமாவையும், அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களையும் நேரு அரசு 1959 முதல் காப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் வந்தாலும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக அது தொடர்வதற்கு இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். இந்திய அரசு அவ்வமைப்பை அங்கீகரித்ததால், சீனா, அருணாசலப் பிரதேசம் இந்தியாவைச் சேர்ந்தது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த அரசியல் தந்திரத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்குப் பதில் இப்போதைய அரசு என்ன செய்யப் போகிறது என்னும் கேள்வி அனைவரின் மனங்களிலும் எழுவது நியாயம்தானே!
ஜனநாயக நெறிமுறைகளைச் சற்றும் பாராது, பெரும்பான்மை பலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எதையும் செய்துவிட முடியும் என்னும் போக்கை யார் மேற்கொண்டாலும் அதன் விளைவை நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது பொது விதி. இது முதல் கட்டம். அதற்கான விலையை சம்பந்தப்பட்ட அரசு தந்து மக்கள் முன் அம்பலப்பட்டு போவது என்பது அடுத்த கட்டம்.
பதவிக்கு வந்து ஆறாண்டுகளில் ஒன்பது முறை, நினைத்தவுடன் சொந்த ஊருக்குப் போவதுபோல, சீனாவுக்கு திக்விஜயம் செய்த ஒரே பிரதமர் மோடி அவர்கள்தான். (Protocol) வரையறுக்கப் பட்ட மரபு சீர் முறைமைகளை எல்லாம் பாராது, பயணம் செய்தும், சீன அதிபருக்கு தமிழ் பாரம்பரிய உடை அணிவித்து மாமல்லபுரம் அழைத்து வந்து ஊடக ஒளி வெள்ளத்தில் மிதந்தும் சாதித்தது என்ன? 1975 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மோதலில் ஏற்பட்ட இரு தரப்பு உயிரிழப்புகளுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான முறைகள் ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடைபெற்றாலும், இரத்தம் சிந்துதல் இல்லை என்னும் 45 ஆண்டு கால சாதனை ஒரே நாள் இரவில் நொறுக்கப்பட்டு நம் தரப்பில் 20 வீரர்களும், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் சீனத் தரப்பில் அதிகாரப்பூர்வ மற்ற உயிர்ச் சேதமும் ஏற்பட்டது. இதுவரை கத்திமேல் நடப்பது போல காத்துவந்த நட்புறவு சிதையும் சூழ்நிலைக்கான காரணம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. இது பொதுவிதி.
ஆகஸ்ட் மாதம், 2019 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரம்பரிய நிலையை மாற்றி பிரிவு 370 சிறப்புத் தகுதியை ரத்து செய்தது முதல் பிரச்சினை துவங்கியது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை, சீனா பகிரங்கமாக ஆட்சேபித்தது. 'சீனாவின் எல்லை இறையாண்மையை சிறுமைப் படுத்தும் முயற்சி, இதை ஏற்க முடியாது', என அறிவித்தது. இதை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை எதையும் கேட்க வேண்டியதில்லை என்னும் ஆணவப் போக்கு அதிகரிக்கத் துவங்கியது. இதன் உச்சகட்டமாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரையும் (POK), அக்சாய் சின் பகுதியையும் சேர்த்து ஏறத்தாழ 43,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான பகுதிகளை மீட்கப் போவதாக முழங்கினார். இதை வழக்கமான வெற்று முழக்கம்தான் என இந்திய மக்கள் எடுத்துக் கொண்டதைப் போல் அல்லாமல் சீனா மிகவும் கூர்மையாகப் பார்க்கத் துவங்கியது. ஏனெனில், அக்சாய் சின் பகுதியை விட, பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் சீனா முன்னெப்போதும் இல்லாத அளவில் இப்பகுதி வழியே செல்லும் சீன-பாகிஸ்தான் பொருளாதார நீள் பாதை திட்டத்தில் (China-Pakistan Economic Corridor) பெரும் அளவில் நிதி முதலீடு செய்துள்ளது. எனவே சீனா இதற்கேற்ப முந்திக்கொண்டு காய்களை நகர்த்தத் துவங்கி விட்டது. சீன வெறுப்பு பிரச்சாரங்கள் இந்தியாவில் பல்வேறு இன, மத வெறிக் கும்பல்களால் கிளப்பி விடப்பட்டதை தடுக்கும் எண்ணம் ஆணவத் தலைவர்களுக்கு அறவே இல்லை. இப்போக்கிற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை.
அமெரிக்க சீன
No comments:
Post a Comment