Sunday, August 9, 2020

 காங்கிரஸ் செய்வது சரியா?


இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளும், மத்திய அரசின் அவசர அவசரமான சட்ட நிறைவேற்றல்களும் இது வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஜனநாயக நடைமுறைகள் மற்றும் உரிமைகளை அப்பட்டமாகப் பறிக்கும் போக்கையே வெளிப்படுத்துகின்றன. கொரோனாவால் நாடே ஒருபக்கம் அலைக்கழிக்கப்பட்டு 70% அடித்தட்டு மக்களின் வாழ்வு தலைகீழாகப் புரட்டி போடப்பட்டிருக்கிறது. பிரதமரின் வழக்கமான பொய்யுரைகளுக்கு அப்பால் உண்மை நிலை ஒவ்வொரு தளத்திலும் வெளிவரும் போது, அறிவிப்புகளின் ஆரவாரத் தன்மையும், தலைமையின் அரை வேக்காட்டு, ஆனால் பாசிச முகமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் துவங்கி உள்ளது. 


இடதுசாரிகள் தலைமை தாங்கும் கேரள அரசு எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்ற மாநிலங்களும் எதிர் கொள்கின்றன. ஆனால் கேரள அரசின் கையாளும் தன்மையை உலகமே வியந்து போற்றுகிறது. துவக்கத்தில் கொரோனாவால் கடுமையான பாதிப்பும், நோயாளிகள் எண்ணிக்கையும் மிக வேகமாக பரவிய நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து அதிகமாக கேரளாவுக்கு வந்திறங்கிய அம்மாநில மக்களால்தான் (பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள்) தொற்று பரவி விட்டது என்ற செய்தியை திட்டமிட்டு பரப்புரை செய்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். ஆனால் பரவிய வேகத்தைக் கட்டுப்படுத்தி ஒரு கட்டத்தில் முழுவதுமாக பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்ற நிலையும் வந்தது. மீண்டும் சிறிய அளவிலான விமானப் போக்குவரத்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் சிக்கித் தவித்தபோது அவர்களை அழைத்து வருவதற்காக தொடங்கப்பட்டது. இதனாலும், உள்நாட்டில் வெளியூர்களில் இருந்த வேலைப் பாதுகாப்பற்ற மக்கள் சொந்த மண்ணுக்கு திரும்பத் தொடங்கியதாலும் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்தது. இது மற்ற மாநிலங்களிலும் பியதிபலித்தது. இந்தக் கட்டத்திலும் கேரள அரசு திறமையாக நிலைமையைச் சமாளித்தது. மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் பற்றிய விவாதங்கள் மற்ற மாநிலங்களின் ஊடகங்களில்  அனல் பறக்க நடைபெற்று வரும்போது கேரளா தலைநிமிர்ந்து நிற்கிறது. 


2017 ஆம் ஆண்டின் ஒக்கி புயல், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், 'நிபா' நோய்த்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவைகளைத் தொடர்ந்து இன்று வரை கடும் சோதனைகள்!  இப்போதும் கடும் பருவமழையினால் மூணாறு பகுதிகளில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு, நேற்று கோழிக்கோட்டில் நடந்த கோர விமான விபத்து என சோதனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் கேரள இடதுசாரி அரசு இச்சவால்களை சமாளிக்கும் விதம் இந்திய மக்களின் கட்சி அரசியலுக்கு அப்பால் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. 


மத்திய அரசு மாநில அரசுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி பங்கினை முழுமையாகத் தர மறுத்து ஏதோ கருணையால் கொடுப்பது போல அவ்வப்போது சிறிதளவு கொடுப்பதை இந்திய அனைத்து மாநில மக்களும் ஒருசேர கண்டிக்கின்றனர். கேரள அரசின் கடன்வாங்கும் அளவையும் மத்திய அரசு குறைத்து விட்டது. தமிழ்நாட்டைப் போல பெரும் வருமானம் வரக்கூடிய பெரிய மாநிலம் அல்ல கேரளா. இந்த நிதிப் பற்றாக்குறையிலும் பொது வினியோக நடைமுறையில் புதிய அணுகுமுறையை அறிமுகப் படுத்தியது கேரளா. வீட்டிற்கே இன்றியமையா உணவுப் பொருள்களைக் கொண்டு சென்று கொடுக்கும் முறையால் பட்டினிக் கொடுமையிலிருந்து ஏழைமக்கள் பாதுகாக்கப் பட்டனர். நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கச் சொல்லி விட்டு அன்றாடங் காய்ச்சிகளின் யதார்த்த தேவைகளைப் பற்றி கவலைப்படாமல் பொய்களை ஆரவார அறிவிப்புகளாக வெளியிடும் அரசியல் வாதிகளைப் போலன்றி நேரடியாக அவர்களின் துயர் அறிந்து அதைப் போக்கும் நடவடிக்கையால் பட்டினிச்சாவு இல்லை என்று கேரள அரசால் சொல்ல முடிந்தது. கொரோனாவைக் கையாண்ட விதத்தை  'நியூயார்க் டைம்ஸ்' அமெரிக்க ஏடு பாராட்டி எழுதியிருந்தது. கேரள மாநில அரசின் சுகாதாரத் துறை பெண் அமைச்சர், அய்க்கிய நாடு சபையில் காணொளி மூலம் உரையாற்ற அழைக்கப் பட்டார். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்னரே மாநில முதலமைச்சர் அரசின் நிதி இருப்புக்கு 


இவை எல்லாம் இடதுசாரி அரசியலுக்கு எதிர் நிலை எடுக்கும் வலதுசாரி பிற்போக்கு பாரதிய ஜனதாவுக்குப் பிடிக்கும் என்றோ, மனம் திறந்து பாராட்டும் என்றோ நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் காங்கிரஸ் இயக்கமும் எதிர்க் கட்சி அரசியல் என சொல்லிக் கொண்டு நியாயமற்ற முறையில் பாஜக போலவே போராட்டம் நடத்துவது சரியா என்பதை பார்க்க வேண்டும். 


இதற்கு முன்பு, சபரிமலை விவகாரத்தில் முதலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜகவினர், வழக்கில் சாதமான தீர்ப்பு வந்த பிறகு, கேரள அரசு தீர்ப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கத் துவங்கிய போது, இந்து மதத்திற்கு எதிராக கேரள அரசு நடப்பதாகச் சொல்லி பெரும் கலவரத்தை பல்வேறு அமைப்புகள் மூலம் உருவாக்க முனைந்தது. மத நடைமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் அரசு கேரள அரசு என்ற தோற்றத்தையும், இந்துக்களுக்கு எதிரானவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்ற ஆதாரமற்ற நச்சுப் பரப்புரையை மேற்கொண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை பாஜக அமைப்புகள் அறிவித்து நடத்தத் துவங்கின. 


இந்தியாவில், வெற்றிகரமான குஜராத் மாடல் எனப் பேசப்பட்டும், கார்ப்பரேட் கொள்ளையர்களால் பெரும் விளம்பரமும் செய்யப்பட்ட மோடி-அமித் ஷா கூட்டணி மாடல் உண்மையான முன்னேற்றத்தை அந்த மாநிலத்திற்குக் கொண்டு வரவில்லை என்பது வெட்ட வெளிச்சமானதும், நவீன தாராளமயத்திற்கெதிரான மாற்றுத் திட்டங்களோடு எல்லா முனைகளிலும் குறிப்பாக வேளாண் துறையில் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் நல்ல முன்னேற்றத்தை தரத்துவங்கின. மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாகப் பயனாளிகளுக்குச் சென்று சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவை எல்லாம் சேர்ந்து கேரள மாடலாக அனைவரும் அங்கீகரிக்கும் மாற்று அரசியலாக வளர்ந்தது. நாடெங்கும் விவாதப் பொருளாக ஆவதைக் கண்டு சங் பரிவாரங்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் மத்தியில் ஆளும் கட்சிக்கும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் கொடுத்ததில் வியப்பேதுமில்லை. எனவே பொய்ப் பிரச்சாரங்கள், அவதூறுச் செய்திகள் பரப்புவதற்கென்றே செயல்படும் தரகர்கள் தங்கள் வேலைகளை இடதுசாரி அரசுக்கு எதிராகச் செய்யத் துவங்கி இன்றளவும் செயல் படுகிறார்கள்.


சமீபத்தில் அவர்களுடைய உரத்த அவதூறுப் பிரச்சாரம், கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் தீவிரமாகி உள்ளது. இடதுசாரி அரசு இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், முதல்வர் பினாரயி விஜயன் ஊழலில் பங்கு பெற்றுள்ளார் என்றும் குற்றம் சுமத்தி உள்ளனர். பாஜக அரசு எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகிறது. கேரள முதல்வர், மத்திய புலனாய்வுத் துறை இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய பிறகும், தான் எவ்வித விசாரணைக்கும் தயார் என சொன்ன பிறகும் அரசியல் வன்மத்துடன் பாஜக, மக்கள் மத்தியில் இடதுசாரி அரசுக்கு இருக்கும் செல்வாக்கையும், மரியாதையையும் சீர்குலைக்கும் வண்ணம் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. மத்திய அரசாங்கம் 'தேசிய விசாரணை முகமை' (NIA)யே விசாரணைக்கு அனுப்பி உள்ளது. முடிவுகள் வரும்போது குற்றவாளிகள் யார் என்பதை இந்நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள்.


சபரிமலை பிரச்சினை, மார்ச் மாத வட டெல்லிக் கலவரம், 53 அப்பாவி மக்கள் கொலை, அதில் பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள், தொழுகை நடந்து வரும் ஏராளமான பள்ளி வாசல்கள் எரிப்பு, ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகத் தாக்குதல், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் மாணவ, மாணவிகள் மேல் தொடுக்கப்பட்ட குண்டர்படைத் தாக்குதல்கள், மதவெறியைத் தூண்டி நடத்தப்படும் கொலைகள் (lynching), மனித உரிமைப் போராளிகள் மீதான வழக்கு என்ற பெயரில் தனிமைச் சிறைக்குள் அடைப்பு, ஜனநாயக நெறிமுறைகளை அப்பட்டமாக மீறுதல் என சங்கிலித் தொடரான தாக்குதல்கள், கொரோனா காலத்தில் அலங்கோல நடைமுறைகளால் மக்கள் படும் அவதி என்பது தனிக்கதை. கொரோனா கால ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு விரோதமான சட்டங்களை வேக வேகமாக அமுல் படுத்த ஒப்புதல் அளிப்பது, பொதுத்துறைகளை ஒழித்து கார்ப்பரேட் கைக் கூலியாகச் செயல்படுவது என அடாவடித்தனமான காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது இப்போதைய ஆளுங் கட்சிக்கான மாற்றாக விளங்கும் ஒரு பொறுப்புள்ள மிகப் பெரிய இயக்கமான காங்கிரஸ் தன் மதச் சார்பற்ற கொள்கையிலிருந்து வழுவி, வாக்கரசியலை மனத்திற்கொண்டு நிலையை மாற்றிக் கொள்வது மதவாத அரசியலை வீழ்த்தும் மாற்றத்தைக் கொண்டு வராது. 


சபரிமலை பிரச்சினையில் பாஜகவின் நிலைபாடு சந்தர்ப்பவாதமானது என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள். பெண்ணுரிமை பற்றிய அதன் நிலை போலித்தனமானது. ஆனால் காங்கிரஸும் போராட்டத்தை அறிவித்தது எந்த வகையில் நியாயம்? தங்கக் கடத்தல் பிரச்சினையிலும் விசாரணை நடைபெற்று வரும் வேளையில் இடதுசாரி அரசுக்கு எதிரான போராட்டம் சரிதானா? இப்போது அயோத்தி கோயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நடந்த அரசியல் அமைப்புச் சட்ட நெறி முறைகள் மீறப்பட்டது தெரிந்தும், ஜவஹர்லால் நேரு உயர்த்திப் பிடித்த மதச்சார்பற்ற கொள்கை நீர்த்துப்போகும்படி மதச்சார்பு நிலை எடுக்கும் வகையில் அறிக்கைகள் வருவது யாரைப் பாதிக்கும்? ஒட்டுமொத்த மதச்சார்பற்ற சக்திகளை ஒன்று படுத்தும் தலையாயக் கடமையிலிருந்து தவறுவது இயக்கத்தைப் பலப்படுத்துமா? 


மாநில அளவில் எடுக்கும் அரசியல் நிலைபாடுகள் பிரச்சினையின் தன்மையைப் பொறுத்து தேசிய அளவிலான அரசியலில் எதிர்மறைத் தாக்கத்தை உருவாக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதையும் மீறி இராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்வதற்கு நடைபெறும் தரகுமாறி அரசியல் அயோக்கியத்தனத்தை முறியடிக்கும் வகையில் இடதுசாரிகள் காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அறிவிக்கிறார்கள். எதிர்வரும் நாட்களில் ஏனைய மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்த இடது சாரிகளுடனான தேசிய அளவிலான கூட்டணிதான் மதவெறி பாசிச அரசியலுக்கான மாற்றாக அமைய முடியும் என்பதை உணர்ந்து அந்தக் கூட்டணிக்கான தளம் கட்டியமைக்கப் படுவதற்கான ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபடுவதையே காங்கிரஸிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 


அதை நோக்கிய பயணத்தைத் தாமதமின்றி தொடங்குவதுதான் இன்றைய அவசரத் தேவை. 


காங்கிரஸ் பேரியக்கம் கவனத்தில் கொள்ளுமா?



 






No comments:

Post a Comment