இனியொரு விதி செய்வோம்!
அரசுத்துறை பொதுத்துறையாக மாற்றப்பட்டால் தனியார் துறைக்குப் போய்விடும். ஆகவே எதிர்த்தோம் என்ற வாதம் அடிபட்டுப் போய்விட்டது. இரயில்வே அரசுத்துறைதான். பொதுத்துறை ஆகாமலே தனியாருக்குப் போவதற்கான ஏற்பாடு அரசின் திட்டத்தில். வங்கிகள், இன்ஸ்யூரன்ஸ், இலாபம் ஈட்டும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எல்லாவற்றிலும் தனியார் நுழைய அனுமதி! இவை எல்லாம் எப்படி வருகிறது? அரசின் கொள்கை இது என சொல்லித்தான் இந்த மாற்றங்கள் நடைபெறுகின்றன. ஆதரிப்பது, எதிர்ப்பது என்பது தொழிற்சங்கத்தில் அரசியல் செய்ய மட்டுமே உதவும். பொதுத்துறையைப் பற்றிய கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு என்ன? பொதுத்துறையை பலப்படுத்த போராடுவதும், தனியார் நுழைவைத் தடுப்பதும்தானே. அரசுத்துறையாக இருந்து பொதுத்துறையாக தொலைத்தொடர்பு மட்டும் தான் மாற்றப்பட்டதா? வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதே. தனியார் வங்கிகள் போட்டி போட முடியாமல் ஓடி ஒளிந்து மறைந்து போனதை எப்படி மறைக்க முடியும்? பிஎஸ்என்எல் பொதுத்துறையாக மாற்றப்பட்ட போது ஆட்சியாளர்களின் நோக்கம் வேறாக இருந்திருக்கலாம். ஆனால் தொழிலாளி வர்க்கம் பொதுத்துறையை வேண்டாம் என சொல்ல முடியுமா? அக்டோபர் 2000 முதல் பொதுத்துறையாக மாறிய பிஎஸ்என்எல் பிழைக்காது என வெறும் ஆருடம் மட்டுமே சொல்லி எதிர்க்கிறோம் என்பதோடு வேலை முடிந்து விட்டது என வாளாயிருக்காமல் இது தவிர்க்க முடியாது எனத் தெரிந்து கொண்டு தொழிலாளியின் வேலைப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேலைப் பாதுகாப்பு, நிதி தற்சார்பு, ஓய்வூதிய பாதுகாப்பு என்ற கோரிக்கைகளுக்காகப் போராடி உடன்பாடு கண்டதால்தான் இன்று விருப்ப ஓய்வு என்ற மறைமுகமான கட்டாய ஓய்வு வந்து வெளியேற வேண்டிய சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அதிகாரிகள் ஓய்வூதியப் பாதுகாப்போடு வந்துள்ளனர். அன்று போராடாதது மட்டுமல்ல; போராட்டத்தை உடைக்கும் வகையில் பணிக்குச் செல்வோம் என மறைமுகமான எதிர்ப் போராட்டம் நடந்ததை யாரும் மறக்க முடியுமா? நிதானமாக யோசிப்போம். அரசியல் மாற்றம், ஆளும் கட்சி மாற்றம் எல்லாம் நடந்தும் தனியாருக்கு ஆதரவான நிலையை அரசு தொடர்ந்து எடுத்தும், இருபது ஆண்டுகள் நம் தொழிலாளர்களும், அதிகாரிகளும் போராடிக் காத்தனர் என்ற உண்மையை மறுக்க முடியுமா? நம் துறை நட்டத்தில் போக நாம் காரணமல்ல. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கார்ப்பரேட் கொள்ளையர்களின் சட்டைப் பைகளுக்குள்ளே ஆளும் கட்சிகள் அடைக்கலம் ஆனதுதானே காரணம். காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை எதிர்த்து குரல் கொடுத்த வேளையில் நிரந்தர ஊழியர்களுக்கான ஊதியம் நிறுத்தப் பட்டதே. அதை எதிர்த்து கடும் போராட்டத்தை நம்மால் ஏன் நடத்த முடியவில்லை? போராடக் கூடாது என தலைமைகளை உறுப்பினர்கள் தடுத்தார்களா? வேலை செய்ததற்கான ஊதியத்தை மறுக்க எவனுக்கும் உரிமை இல்லை. ஊதியம் அடிப்படை உரிமை அல்லவா? நூறு ரூபாய் நமக்கில்லை, எம்டிஎன்எல் லுக்கு மட்டும் என்ற போது இருபது நாட்கள் நம்மால் போராட முடிந்ததே. கிடைக்கவில்லை என்றாலும் நம் போராட்டம் ஏற்படுத்திய வீச்சை யாரும் மறுக்க முடியுமா? ஆனால் ஊதியம் தர பணம் இல்லை என்ற போது அதை சகித்துக் கொள்ளும் மனநிலை நமக்கு வந்தது. தொழிற்சங்கத் தலைமை மீது அதிகரித்த கோபத்தை நம் தலைவர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனால் ஒருங்கிணைந்த போராட்டம் வரவில்லையே.
போராட முடியவில்லை என்றாலும் வழக்கு மன்றத்தை நாடினோமா? அதுவும் இல்லை. விருப்ப ஓய்வு அறிவிப்பு வந்தவுடன் தலைமையின் கட்டளைகளை உடைத்தெறிந்து விட்டு வரிசையில் நின்ற தொழிலாளி விருப்பத்தை தெரிவித்த போது தலைமையின் மீது இருந்த கோபத்தையும், அவநம்பிக்கையையும் சேர்த்தே தெரிவித்தான். பாதிக்குப் பாதி ஊழியர்கள் வெளியே சென்று விட்ட பின்னும் ஊதியம் வழங்குவதில் தாமதம். கடிதங்கள் பறக்கின்றன. ஏனோதானோ பதில் நிர்வாகத்தால் தரப்படுகிறது. வந்து விடுகிறோம். வாழ்வா சாவா என்பதை பார்த்து விடுவதில் என்ன தயக்கம்? தோழர்களே! ஒருவரை ஒருவர் குறை கூறுவதை விட்டு எஞ்சிய தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும் வழிகளை யோசியுங்கள்.
பிரிவதற்கான நியாயங்கள் நம்மைப் பிரித்தன என்பது சரியானால், சேர்வதற்கான கட்டாயம் உருவாகும் போது இணைவதில் என்ன தயக்கம்? வேறொன்றும் ஆழமான தத்துவார்த்த வேறுபாடு இருப்பதற்கான வாய்ப்பில்லை. எனவே காலம் தாழ்த்தாது, செல்லரித்துப் போன பழஞ்சுவடிகளை எடுத்து வைத்துக்கொண்டு பாடம் சொல்வதை விடுத்து எஞ்சிய காலத்தில் உருப்படியான காரியங்களைச் செய்து நம்பியிருக்கும் சொற்ப தொழிலாளர்களைக் காப்பாற்ற வழி தேடுங்கள். ஒற்றுமையின்மையால் இழந்தது போதும். ஒன்று பட்டு அரசின் சதிகளை வெல்ல ஆவன செய்யுங்கள். யாரையும் குறைசொல்ல வேண்டும் என்பது அறவே நோக்கமல்ல. கடந்த கால நிகழ்வுகளைப் பதிவு செய்வது, பழைய கணக்கை தீர்ப்பதற்கல்ல; புதிய கணக்கைத் தொடங்குவதற்கே! தோழமையோடு மன்றாடுகிறேன். ஏதேனும் செய்யுங்கள் தலைவர்களே! தோழர்களே!
No comments:
Post a Comment