கொரோனா காலச் சிந்தனைகள்
பகுதி-2-இ.
இந்திய, சீன எல்லை ஏறத்தாழ 4000 கி.மீ. தூரம் கொண்டது. காலம் காலமாக பல நூற்றாண்டுகளாக இந்த எல்லைப் பிரிவு இருந்திருந்தால், தகராறு அல்லது பிரச்சினை மற்றும் அதன் மீதான போர் அல்லது இப்போது போல் நடந்த மோதல்கள் நிகழ வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். எல்லை வகுத்தது இரு நாடுகளும் அல்ல; நேபாளம் முதல் திபெத் வரையிலான இடைப்பட்ட பகுதிகளான சிக்கிம், பூடான், லடாக் உள்ளடக்கிய எல்லைகளின் வரையறுப்புகளும் இப்படி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் செய்யப்பட்டவையே. சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒப்புதலோடு எதுவும் நடக்கவில்லை. இதுதான் இன்று வரை இப்பிரச்சினை நீடிப்பதற்கான அடிப்படைக் காரணம். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது இரு நாடுகளும் ஏற்றுக் கொண்ட எல்லை வரையறையால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control-LOC) உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லை மக்மோகன் கோட்டினால் வகுக்கப்பட்டது. மக்மோகன் கோட்டை, சீனா ஆரம்பம் முதல் ஏற்கவில்லை. இந்த எல்லைக் கோட்டுக்கு இரு புறமும் இரு நாடுகளும் தங்களுக்கு உரிய பகுதிகளாக பல இடங்களை அடையாளப் படுத்துகின்றன. இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட எல்லைப் பிரிவினை நடக்காததால், எல்லைக் கோடு வகுக்கப் படவில்லை. மக்மோகன் எல்லைக் கோடுமேற்குப் பிரிவில், எல்லை வரையறை தாண்டி இந்தியாவும், கிழக்குப் பிரிவில் சீனாவும் உரிமை கோருகின்றன. இதனால் தான் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு என்ற பதம் (Line of Actual Control)பயன்படுத்தப் பட்டாலும் நடைமுறையில் இரு நாடுகளும் பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தைப் போட்டு தீர்ந்த பின் எல்லைக் கோட்டை இறுதி செய்யலாம் என தங்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டனர். இரு நாடுகளின் பரஸ்பர வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவதும், அதன் மூலம் நட்புறவை பலப்படுத்துவதும் இப்போதைய தேவை என்பதை இரு நாடுகளும் உணர்ந்தனர்.
இப்போதும் காரகோரம் கணவாயின் வடமேற்குப் பகுதியில் இந்தியாவும், அருணாசலப் பிரதேசத்தில் தவாங் பகுதியை சீனாவும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதுபோல் பிரச்னைக்கு உரிய பதின்மூன்று இடங்கள் எல்லை நெடுகிலும் இருக்கின்றன. சுமர், டெம்சோக், பாங்காங் ட்சோ ஏரியின் வடக்குக் கரையில் மேற்கிலிருந்து கிழக்காக நீண்டு கிடக்கும் மலைமுகடுகள் (Ridges) அல்லது விரல்கள் (fingers) என அழைக்கப்படும் பகுதிகள் யாருக்கு என்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. 1 முதல் 8 வரை எண்ணிக்கை உள்ள இந்த முகடுகளில், 4 வது முகடு சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. 8 வது முகடு இந்தியாவுக்குச் சொந்தம். ஆனால் இரு நாடுகளும் சில மீட்டர்கள் இடைவெளியில் ரோந்துப் பணியை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்தது.
ஆனால் இப்போது சீன இராணுவம், முகடு 4 இல் தாற்காலிகக் கூடாரங்களை அமைத்ததன் மூலம், இந்திய வீர்கள் அதைத் தாண்டி எட்டாவது முகடுக்கு ரோந்து மேற்கொள்வதைத் தடுத்து விட்டது. இதுவே மோதல் போக்கை ஏற்படுத்தியது. இது மட்டுமின்றி, கல்வான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் மாதத்திற்கு முன்பு உள்ள நிலைகளை மாற்றி, கல்வான் நதியின் அகலத்தை குறைத்து நிலப்பரப்பாக்கி நிரந்தர கட்டிடங்களை சீன இராணுவம் சிறுகச் சிறுக அமைத்து இப்போது கல்வான் பள்ளத்தாக்கு முழுவதுமே தங்களுக்குச் சொந்தம் என கொண்டாடத் துவங்கி விட்டது. நம் இந்திய அரசு, நமக்குச் சொந்தமான பகுதியில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக சாலை அமைப்பதே சீனாவின் எரிச்சலுக்குக் காரணம் என்று சொல்கிறது. இது உண்மையா?
இல்லை. இது உண்மை இல்லை. சீனாவைப் போலவே நாமும் LAC யிலிருந்து குறிப்பிட்ட அனுமதிக்கப்பட் தூரத்தில் ரோந்து செல்லும் பகுதியில் நெடுஞ்சாலையை அமைக்கும் பணியை 1999 இல் இந்தியா துவங்கி விட்டது. நேருவின் காலத்தில் அமைக்கப்பட்ட IFAS (Indian Frontier Administrative Services) 1968 வரை இந்தப் பணிகளைச் செய்து வந்தது. அந்த ஆண்டு அது கலைக்கப்பட்ட பிறகு, இப்பொறுப்பு, BRO (Border Roads Organisation) என்ற அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டு, அதனிடம் கொடுக்கப்பட்டது. ஏறத்தாழ 30,000 கி.மீ. மொத்த தூரமுள்ள 850 சாலைகள் அமைப்பதற்கான தேவையை பாதுகாப்பு அமைச்சகம் அரசுக்குத் தெரிவித்தது. முதல் கட்டமாக, நேரடி எல்லையை ஒட்டிய 4,000 கி.மீ. தூரத்திற்கான 73 சாலைகளை அமைப்பதற்கான வேலையை BRO வின் ஆலோசனையின் படி 1999 இல் இந்திய அரசு துவங்கியது. சீனாவிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விமானம் இறங்கு தளத்தையே இந்தப் பகுதியில் நாம் கட்டி முடித்திருக்கிறோம். உண்மை இப்படியிருக்க, சமீபத்தில், 2018 க்குப் பிறகு புதிதாக 323 கி.மீ தூரத்திற்குப் பலப்படுத்தப்பட்ட Darbuk-Shyok-Daulat Beg Oldi சாலைதான், சீனாவின் கோபத்திற்குக் காரணம் என்ற செய்தியைக் கசிய விடுவதும், அதன் மீது ஊடகங்கள் எதிரும் புதிருமாக விவாதங்கள் நடத்தி, செய்தியை ஊதிப் பெரிதாக்கி, இதுதான் மோதலுக்கான காரணம் என்ற கருத்தைப் பதிய வைப்பதும் பிரச்சினையை எளிமைப் படுத்த மட்டுமே உதவும். தீர்வுக்கு உதவாது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் துவங்கி, மத்திய அரசு பாராளுமன்றத்தில் வீராவேசமாக, பெரும்பான்மை ஒன்றை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு, வேறெந்த ஜனநாயக நெறிமுறைகளையும் பின்பற்றாது, ஒன்றன்பின் அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்ததும், அவைகளை நிறைவேற்றிய துணிச்சலில், உள்துறை அமைச்சரின் அறிவிப்புகளும் அண்டை நாடுகளுடனான சுமுகமான உறவினை உரசிப் பார்க்கத் துவங்கின. ஆனால், இந்த அரை வேக்காட்டுத்தனமான அறிவிப்புகளை, ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிப் போன இந்திய ஊடகங்களுள் பல, இந்த அரசின் பராக்கிரம செயல்களாகப் பறைசாற்றி தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினர். பூகோள- அரசியல் ஏற்படுத்தப் போகும் பின்விளைவுகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகச் சொல்லி கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்த நெருக்கடி முற்றியதால், இந்த அறிவிப்புகள் 'கவனம் திருப்பும்' நடவடிக்கையின் ஓர் அம்சமாகவே இருந்தது.
1.காஷ்மீருக்கான 370 பிரிவின் படி சிறப்புச் சலுகை இரத்து செய்யப்பட்டது.
2.லடாக், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப் பட்டது.
3. இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இவைகளின் மீது பாகிஸ்தான் தன் கண்டனத்தைத் தெரிவித்து, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகத் தன்னை காட்டிக்கொள்ள இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. தீவிரவாதிகளின் ஊடுருவல் கணிசமான எண்ணிக்கையில் இன்று அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானின் எதிர்வினை (Reaction) எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் சீனாவின் அறிவிப்பு, இரு நாடுகளின் உறவில் ஏற்படப் போகும் விரிசலை எதிரொலித்தது. லடாக், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை சீனா கண்டித்ததோடு, இந்த சட்டம் அமுலாவதை ஏற்க முடியாது என பகரங்கமாக அறிவித்து தன் அதிருப்தியை பதிவு செய்தது. லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சனை இருக்கும் போது, தீர்வை இறுதி செய்யாத சூழ்நிலையில் தன்னிச்சையாக இவ்வாறு அறிவித்ததை சீனா ஏற்கவில்லை. எது சரி, எது தவறு என்பதற்கு அப்பால் பல ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுடனான நட்பு சீர்கெடத் துவங்கியது என்பதை கவலையோடு நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அடுத்து, உள்துறை அமைச்சர், லடாக்கை ஒட்டிய, 1962 போருக்குப் பின், சீன வசம் இருக்கும் 'அக்சாய் ச்சின்' பகுதியை மீட்டெடுப்போம் என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி விரைவில் நம்மோடு வந்து விடும் என்றும் அதிரடி அறிவிப்பை அறிவித்தார். அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு அமைச்சர், அந்தப் பகுதி மக்கள் நம்மை நாடி வந்து விடுவார்கள் என, உள்துறை அமைச்சரின் பாட்டுக்கு, தெளிவுரை எழுதினார். இந்திய ஊடகங்கள் இவற்றுக்குப் பெரிதாக விளம்பரம் கொடுக்காமல், TRP (Television Rating Point) எகிற உருப்படாத உள்ளூர் விவகாரங்களில் கவனம் செலுத்தின.
ஆனால், சீனாவுக்கு இந்த அறிவிப்புகள் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் உண்டாக்கின. 1993 இல் போடப்பட்ட 'இந்திய- சீன எல்லைப் பகுதிகளில் LAC நெடுகிலும் சமாதானத்தையும், அமைதியையும் காப்பது' என்ற ஒப்பந்தமும், 1996 இல் எட்டப்பட்ட 'இந்திய-சீன எல்லைப் பகுதிகளில், LAC நெடுகிலும் இராணுவ தளத்தில் நம்பிக்கையைக் கட்டுவதற்கான அளவுகோல்கள்' பற்றிய ஒப்பந்தமும் இன்று முறியக்கூடிய ஆபத்தான சூழலை, ஆர்ப்பாட்ட அறிவிப்புகள் ஏற்படுத்தி உள்ளன. 'இரு தரப்பினரும், LAC க்கு இரு பக்கமும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குள், துப்பாக்கி சூடு நடத்தவோ, ஆபத்தான இரசாயன பொருட்களைப் பயன்படுத்தவோ,துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களைக் கொண்டு வேட்டையாடவோ கூடாது' போன்ற அம்சங்கள் 1996 ஒப்பந்தத்தில் உள்ளன. சமீபத்திய மோதலின் போது கூட, இதை இரு தரப்பினரும் மீறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதைவிட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் 45 ஆண்டுகளுக்குப் பின் நடந்து இரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்?
அக்சாய் ச்சின்னை மீட்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் எப்படி, எந்த வழியில் என்பதற்கான பதில் இந்திய அரசிடம் இல்லை. இது ஒரு புறம் இருக்க, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது பற்றிய அறிவிப்பு சீனாவின் கவலையை அதிகரித்தது. அப்பகுதி, சீனாவுக்கு இன்றியமையாத ஒன்றாக ஆகியிருக்கிறது. சீன-பாகிஸ்தான் பொருளாதார நீள் வழி (CPEC), இப்பகுதி வழியேதான் செல்கிறது. பெரும் அளவு நிதியை சீனா இங்கு முதலீடு செய்துள்ளது. ஏற்கெனவே, சீனாவின் 'பெல்ட் ரோடு' திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு, சீனாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கலாம்.
இதோடு மட்டுமன்றி, அகில உலக ரீதியிலான இந்தியாவின் அரசியல் அணுகுமுறைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், சீனாவின் சந்தேகத்தை அதிகப் படுத்துவதாக அமைந்தன. நேரு காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றி வந்த 'கூட்டு சேராக் கொள்கையிலிருந்து' கொஞ்சம் கொஞ்சமாக இப்போதைய அரசு விலகி, அமெரிக்காவின் 'செல்வாக்கு வளையத்திற்குள்' வரும் போக்கை கடைப்பிடிக்கத் துவங்கியிருப்பதை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சுட்டிக் காட்டுகிறார். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எழும் பிரச்சினைகளில், அமெரிக்க ஆதரவு நிலையையே இந்தியா எடுத்தது. இந்திய பசிபிக் பிராந்தியத்திய பிரச்சினைகளில் சீனாவுக்கு எதிராக, இந்தியா, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்தது.
மேலும், நான்கு நாடுகளின் கூட்டமைப்பில் (Quad), அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு இந்தியா நான்காவது நாடாக சேர்ந்துள்ளது. எஞ்சிய மூன்று நாடுகளும் எல்லா பிரச்னைகளிலும், கோவிட்-19, உள்பட சீனாவுக்கு எதிர்நிலை எடுப்பவை. இந்தியா இதில் சேர வேண்டிய அவசியம் என்ன? அமெரிக்காவின் குழப்ப அரசியலுக்குத் தனி உரிமை கொண்டாடும் அதிபர் ட்ரம்ப், G-7 ஏழு பெரும் நாடுகள் அமைப்பில் சீனா நீங்கலாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளை இணைப்பதற்கான அறிவிப்பை செய்தார். இதுவும் சீனாவுக்கான ஓர் எதிர் முகாமை அமெரிக்கா அமைக்கும் வேலைதான். இதில் சேர்வதற்கான ஒப்புதலை இந்தியா முன்னரே தெரிவித்து விட்டது. புதுடெல்லியும், வாஷிங்டனும் மிக நெருக்கமாக ஆவதை சீனா எச்சரிக்கையோடு பார்ப்பதாக அதன் அதிகாரப்பூர்வ அரசியல் ஏடு 'குளோபல் டைம்ஸ்' எழுதியது. கொரோனாத் தொற்று நோய் குறித்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், சீனா மீது சாட்டிய குற்றச்சாட்டுகளை இந்தியாவும், உண்மை நிலைகளை ஆராயாமல், நிதானமின்றி ஆமோதித்தது. மீண்டும், 'குளோபல் டைம்ஸ்', தனது தலையங்கத்தில், சீனா, இந்தியா மீது காட்டும் நட்புறவுக் கொள்கையை, இந்தியாவும் கடைப்பிடிக்க வேண்டும்; வாஷிங்டனால், இந்தியா முட்டாளாக்கப்படக் கூடாது என பகிரங்கமாகக் குறிப்பிட்டது. இத்துடன் மட்டுமன்றி, இந்தியா, சீனாவில் இருந்து பெறும் 'அந்நிய நேரடி முதலீட்டின்' அளவை ஒருதலைப் பட்சமாகக் கணிசமாகக் குறைக்கத் துவங்கியது. இந்த மாற்றங்கள், சீனாவின் சந்தேகத்தை அதிகமாக்கியது.
சீனாவிலும் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் கோவிட்-19 க்குப் பிறகு அதிகமாயின. தென் சீனக் கடலில் சீன மேலாதிக்கம், அதற்கு புதிய எதிரிகளை உண்டாக்கி உள்ளது. தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சீனாவின் மேல் குற்றம் கூறுகின்றன. ஆஸ்திரேலியா, கனடா போன்று சீனாவை எப்போதும் எதிர்க்கும் நாடுகளும், ஐரோப்பாவில் அமெரிக்க ஆணையை மீற முடியாத சில நாடுகளும் உலக அரங்கில் சீனாவுக்கு எதிரான மேடையை அமைக்கத் துவங்கினர். சீன அதிபரின் சில கொள்கைகளுக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. மாவோவுக்குப் பின் அதிகாரக் குவிப்புகளோடு ஆளும் ஒருவராக, 'க்சி ஜின்பிங்' விளங்குகிறார். நோய்த் தொற்றின் பாதிப்பால் உலக வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கேற்பட்ட பொருளாதார சரிவும் கணிசமானது. இந்தப் பின்னணியில் நம் இரு நாட்டு எல்லைப் பிரச்சினை, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதைப் போல் ஆகியது. ஏதாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசியல் கட்டாயம் அவருக்கு! 1962 போருக்கும், பூகோள அரசியல் காரணமானது என்றாலும், மாவோ முன்னெடுத்த 'தாவிப் பாய்ச்சல்' (Great Leap) திட்டம், பெரும் தோல்வியை உண்டாக்கி, அவருக்கு கட்சி மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடியைத் தோற்றுவித்தது. உலக அரங்கில், சோவியத் நாடு உள்பட அனைவரும் மாவோவின் அரசியல் நிலையை ஏற்கவில்லை. இவ்வாறு தனிமைப்பட்டுப் போன சூழலில், அதிலிருந்து மீள, மாவோ, (நம் நாட்டு தலைவர்களைப் போல) இந்தியாவின் மீதான போரை தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றினார். அதே போன்ற நெருக்கடி இப்போது அந்நாட்டு அதிபருக்கு வந்திருக்கிறது. ஹாங்காங் பிரச்சினை நெருக்கடியை முற்ற வைத்துள்ளது. எனவே மோதல் போக்கை கையிலெடுக்க வேண்டிய நிலைக்கு சீனா தள்ளப் பட்டுள்ளது.
எனவேதான், ஏப்ரல் மூன்றாம் வாரம் முதல் கல்வான் பள்ளத்தாக்கில் ஆக்கிரமிப்பு நிலையை சீனா மேற்கொள்ளத் துவங்கியது. அதுவரையில், நாம் சாலை போடுவதை எதிர்க்காத சீன இராணுவம், தங்கள் எல்லைக்குள் சாலை போடுவதாகச் சொல்லி தடுத்தது.
கொஞ்சம் கொஞ்சமாக தற்காலிக மற்றும் நிரந்தர கட்டிடங்களை முன்தயாரிப்பு(Prefabricated) பாகங்கள்
மூலம் வேகமாக அமைத்தது. தங்கள் பக்கம் உள்ள கல்வான் ஆற்றின் நீர்ப்பகுதியை தூர்த்து நிலமாக்கி, அங்கும் கட்டிடங்களைக் கட்டி முடித்த பின் இப்போது கல்வான் நதி, பள்ளத்தாக்கு முழுவதும் தங்களுக்கே சொந்தம் எனக் கோரி வருகிறது. அதையொட்டி நடந்த நிகழ்வுகள் இறுதியில் பெரும் மோதலாக மாறி இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதோடு மீண்டும் நல்லுறவு திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமான தருணங்களில் நமக்கு உதவி செய்யாத அமெரிக்காவை நம்பி, நம் அண்டை நாடுகளைப் பகைத்துக் கொள்வதும், ஆசியாக் கண்டத்தில் வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியாவும், சீனாவும் நல்லுறவோடு இருப்பது மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போவதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் இரு நாடுகளும் நிதானமாக, உறுதியான அரசியல் திசைவழியில், பொறுமையான பேச்சு வார்த்தை மூலம் இச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என முன்னாள் வெளியுறவுச் செயலரும், சீனாவில் இந்தியத் தூதராகப் பணி புரிந்த நிருபமா ராவ் கூறியிருப்பது பொருள் பொதிந்தது. போரிடுவது வெற்றிக்கான வழியல்ல. இப்போர் மூள வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் எதிர்பார்க்கின்றனர். உலகிற்கே வழி காட்டக் கூடிய அளவிற்கு வளர்ந்துள்ள இரு நாடுகளின் வலிமை ஒரு போர் மூலம் சிதைய வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவேதான் சொந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாது தவித்து வரும் வேளையிலும், கொம்பு சீவும் வேலையில் துரிதம் காட்டுகின்றனர். போரில் இந்தியாவுக்கு ஆதரவாக வருவதற்கு தயார் என வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர்.
1967 ஆம் ஆண்டு இந்திய சீனப்போரில், இந்தியாவுக்கு எதிராக அணுஆயுதத்தை சீனா பயன்படுத்தும் என்ற வதந்தி செய்தியாக உருப்பெற்று உலவ விடப்பட்டது. அப்போது இந்தியாவிடம் அணு ஆயுதத் தொழில் நுட்பம் இல்லை. எனவே, அமெரிக்க உதவியை இந்தியா கோரியது. தேவைப் பட்டால் அணு ஆயுதம் வழங்கக் கேட்ட போது, முதலில் உதவுவதாக வாக்களித்துப் பின் மறுத்து விட்டது. ஏழாவது கப்பற்படை ஏன் அனுப்பியது என முன்பே பார்த்தோம்.
தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உதவுவதாக வீரசபதம் போட்டாலும், பாகிஸ்தானுக்கு ஆயுதம் தர மாட்டோம் என அவ்வப்போது சொன்னாலும் இன்று வரை அந்நாட்டுக்கு ஆதரவான நிலை அமெரிக்கா எடுப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில், நம் பிரதமர் தனக்கு மிகவும் பிடித்த நண்பர் என வாய்ப்பு வந்த போதெல்லாம் உரக்கக் கூறி வந்த ட்ரம்ப், கொரோனா தடுப்பு மருந்தான 'ஹைட்ராக்ஸி குளோரோ க்யின்' பெருமளவில் தர வேண்டும் என இந்தியப் பிரதமரைக் கேட்டார். நம் நாட்டின் தேவைக்குப் பின் அனுப்புவதாக நெருங்கிய நண்பர் மோடி சொன்னவுடன், அனுப்பாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என மிரட்டியதன் மூலம் மோடியை 'நெருக்கிய' நண்பரானார் ட்ரம்ப் என்பதை நாம் அனைவரும் கண்டோம். பிறகு இந்தியா, மனிதாபிமான அடிப்படையில் அம்மருந்தை அனுப்பி வைத்ததையும் பார்த்தோம். சிறந்த நட்பு என்பது சம தளத்தில் சம மரியாதையுடன் வளர வேண்டும். 'கூடா நட்பு கோடி இன்னல்' என்பதை மறந்தால், அதற்கான விலையைத் தர நாம் தயாராக வேண்டும்.
நேற்று வரை நட்பு நாடு என்றும், இன்று எதிரி நாடு என்றும், போலித் தனமான தேசபக்த உணர்வைத் தூண்டி உள்நாட்டில் அரசியல் பிழைப்பு நடத்தும் வேலை, ஆக்கபூர்வமான எல்லைத் தீர்வுக்கு உதவாது. எல்லையில் நம் பகுதியில் சீனா ஊடுருவி ஏராளமான படை பலத்தோடு இராணுவம் அத்து மீறியதை மறுக்க வேண்டியதில்லை. அவ்வாறு மறுத்த அடுத்த நாள் மறுத்த பிரதமரைப் பாராட்டு சீனப் பத்திரிகை, 'நாங்கள் ஊடுருவவில்லை என இந்தியப் பிரதமரே சொல்லி விட்டார்', என எழுதிய உடன், தர்மசங்கடமான சூழலில், பிரதமர் அலுவலகம், அவரது பேச்சை மறுமொழி பெயர்ப்பு செய்ய வேண்டியதாயிற்று. செய்தி ஊடகங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த யுகத்தில் யாரும் எதையும் மறைக்கவோ, உண்மைக்குப் புறம்பாக மறுக்கவோ இயலாது என்பதை அனைவரும் உணரவேண்டும். இன்றும் எல்லை நெடுக நம் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் அவர்களுடைய கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றன. ஐந்தாம் கட்டமாகப் பேச்சு வார்த்தை தொடர்கிறது. தாமதமானாலும் இது நல்ல அணுகுமுறை.
அதை விடுத்து, வெற்று ஆரவார உரைகள், 'டிஜிட்டல்' தாக்குதல், வர்த்தக ரீதியான அவசர நடவடிக்கைகள், ஒவ்வொரு பிரச்சினையிலும் தீர்வுக்கான வழிகளைப் பாராது, குறுகிய தேசியவாத வெறியைக் கிளப்புதல், கவலையோடு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பிரச்சினையை அணுகும் அனைவரையும் தேச விரோத சக்திகள் என அடையாளப் படுத்த முனைவது எல்லாம் ஆரோக்கியமான அரசுக்கு அழகல்ல.
இந்தியாவின், சமரசமற்ற, கூட்டுச் சேராக்கொள்கை வழி நின்று உலகிற்கு வழி காட்டும் நாடாக நம்மை உயர்த்திக் கொள்ளும் பாதையில் பயணிக்க முயல்வோம்.
No comments:
Post a Comment