முகநூலா? முகமூடியா?
ஆம். செய்திகளை வேகமாக பரிமாறிக் கொள்ளவும், அதிகமான நண்பர்களை தெரிந்தும், தெரியாமலும் அறிமுகப் படுத்திக் கொள்ளவும் நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டிய முகநூல் பல தீய சக்திகளின் ஊடுருவல் தளமாக, முகமூடி மனிதர்களின் இயங்கு தளமாக மாறியிருப்பது வருத்தத்திற்குரியது. முகநூல் அறிமுகமாகி வளர்ந்த பிறகு, அதன் பயன்பாடுகளை முறியடிக்கும் விதமாக இதுவரை பல நூறு நிகழ்வுகள் மக்கள் மன்றத்தில் அரங்கேறிவிட்டன. அனைத்து தளங்களிலும் வலம் வரும் மக்கள் பிரதிநிதிகள் மேல் விமர்சனம் என்னும் போர்வையில் தரம் தாழ்ந்த வசைகளைப் பொழிவது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. இன்னொரு புது பாணி இப்போது எங்கும் எல்லா மொழிகளிலும் வலம் வரத் துவங்கி உள்ளது. தன் ஜென்ம எதிரியாக நினைப்பவர்களுக்கு- தத்துவத்திற்கு- மதத்திற்கு- கட்சிக்கு ஆதரவாக இருப்பது போன்ற முகமூடியை அணிந்து கொண்டு நேர் மாறான கருத்துக்களை நச்சு மொழிகளில் நாக்கூசாமல் பேசுவதும், எழுதுவதுமான பாணி அது. மூலவர் யார் என யாரும் பார்ப்பதில்லை. எதிர்வினை புரிபவர்களாக நடித்து பதில் எழுதுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வசைகளைக் கண்டு மனம் வருந்துபவர்கள், அந்தக் குறிப்பிட்ட குழுவின் நிர்வாகியை முகநூல் மூலமாகவே, வசைபாடுபவர்களை நீக்குங்கள் வேண்டுகிறார்கள். ஆனாலும் இழிமொழிகள் தொடர்கின்றன. எப்படி? அந்த வசைமொழி மன்னர்களே குழுவின் அட்மினாக இருக்கிறார்கள். சிறு பொறியாக வைக்கும் தீ, பெரு நெருப்பாய் பரவி, சமூகத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் உண்டாக்கி விடுகிறது. முக்கியமான பிரச்சினை மீதான கவனக் குவிப்பை சிதறடிக்கும் வகையில் விஷமத் தனமான வேலையைச் செய்து வேடிக்கை பார்க்கும் குரூர மனப்பான்மை இவர்களுக்கு உரியது. கந்த சஷ்டி கவசம் பற்றிய செய்தியும், அதற்கான எதிர் வினையும் கொரோனா காலத்தில் மக்கள் படும் துயரத்தை- அதிலிருந்து மீளமுடியாத சூழ்நிலையை- அது வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் உண்டாக்கியிருக்கும் பேரழிவை எண்ணிப் பார்த்து செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி கவலைப்படாமல், இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் சமூகம் சார்ந்த அக்கறை இல்லை. சுகமாக வாழ்ந்து கொண்டு, பொழுது போக்க, திமிர்த்தனமாக- பொறுப்பற்ற முறையில் எதையும் எழுதலாம். விளைவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சிக்கல்கள் வந்தாலும் அவற்றிலிருந்து மீண்டு வர வசதியும், செல்வாக்கும் உள்ளது என்ற சூழலில் வாழ்பவர்கள்தான் இப்படி செய்ய முடியும் என்பது என் கருத்து.
கந்தசஷ்டி கவசம் பற்றியோ, வேறு எந்தக் கடவுள்கள் பற்றியோ நினைப்பதற்கு நேரமின்றி அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம். சொந்த அனுபவங்களே மனிதனுக்கு எளிதில் பாடங்களளைக் கற்றுத் தர வல்லவை. எல்லோர் மனங்களிலும் கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார் என்ற கேள்வியும், சிறு குழந்தைகள் முதல் வயோதிகர் வரை வேறுபாடின்றி தொற்று நோய்க்கு ஆளாகிக் கொண்டிருக்கும் வேளையில் கடவுள் பற்றிய சிந்தனை வருவதே அரிதுதான். மகாத்மா காந்தி அடிகள் சொன்னார்: பசியால் துடிப்பவனுக்கு சோறே கடவுள்.
இப்போது அதே மனநிலையில் தான் எல்லோரும் இருக்கிறோம். அடுத்த வேளை சோற்றுக்கு வழியின்றி வேலை வாய்ப்பு அற்றுப் போக பலநூறு கி.மீ.கள் கூட்டம் கூட்டமாக கொடும் வெயிலில் நடந்தே சொந்த மாநிலம் திரும்பிய ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு யார் கடவுள்? பள்ளி செல்ல வேண்டிய பிஞ்சுகளை, கொடும் வெயிலிலும் மழையிலும் நடக்க வைத்த கொடுமையிலிருந்து காக்க எந்தக் கடவுள் வந்தார்? 16 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இரயில் பாதை வழியே ஊருக்குச் சென்று விடலாம், எப்படியோ பிழைத்துக் கொள்ளலாம் என நம்பிக்கையை மட்டுமே கைக்கொண்டு போனார்களே! ஊர் போய்ச் சேர்ந்தார்களா? இரவில் படுத்துறங்க இடமின்றி இரயில் பாதையில் படுத்துக் கிடந்து உயிர் இழந்தார்களே! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? காப்பாற்ற ஒருவரும் வரவில்லையே? 500 முதல் 600 கி.மீ. வரை நடந்து இறுதியில் உயிரை விட்ட பிள்ளைகளைக் கொல்லுங்குணம் கடவுளுக்கு உண்டா?
என்ன துன்பம் வந்தாலும், வறுமையிலே வாழ நேர்ந்தாலும் சுயமரியாதையுடன் எந்தத் தவறையும் செய்யாமல் முதுகொடிய உழைத்துப் பிழைக்கும் அன்றாடங்காய்ச்சிகள் வேலையின்றி குடும்பத்தோடு பட்டினி அல்லது தற்கொலை என்னும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளனவே! தடுப்பதற்கோ, காத்து அருள் புரியவோ வந்தவர் யார்? கொரோனா காலத்தில் உலகெங்கும் மக்கள் குறிப்பாக ஏழைகள் படும் இன்னல்களைத் தீர்க்க எந்த மதம் சார்ந்த கடவுளர்கள் வந்தார்கள்? இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
இந்தக் கேள்விகளைக் கேட்க இரத்தமும் சதையும் உள்ள மானுட உணர்வு மிக்க மனம் துடிப்பது நியாயம்தானே! கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு என்று பாடிய பட்டுக்கோட்டையார் வரிகள் நெஞ்சில் அலை மோதுகின்றன.
இந்த நேரத்தில் புராண ஆய்வு, நாத்திக, ஆத்திக சார்பு, எதிர்ப்பு பேச்சுக்கள் துயரப்படும் மனங்களின் குரலாகத் தெரியவில்லை. கோணல் மனம் கொண்டவர்கள் சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் திட்டமிட்டு, பொறுப்பற்ற ஆட்சியாளர்களால் படும் இன்னல்களிலிருந்து கடவுள் முதல் நம் எல்லாராலும் கைவிடப்பட்ட மக்களுக்கு இனியாவது ஏதும் உருப்படியாக செய்ய முயலாமல் இப்படி கவனத்தை, ஆடுகளை மோதவிட்டு வழியும் இரத்தத்தை சுவைக்கக் காத்திருக்கும் நரியின் வேலையைச் செய்கிறார்கள் என்றே மனதில் படுகிறது.
நித்தம் நித்தம், காலகாலமாய்ப் போராடி பெற்ற உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. சமூகத்தில் கீழடுக்கின் வாழ்க்கை நெருக்குதலில் மூச்சு முட்டப் போராடி வெளி வரும் வேளையில் மீண்டும் மீள முடியாப் படுகுழியில் வீழும்படியான சட்ட விளக்கங்கள். அரசின் உயர் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய வழி இல்லா பெரும் மக்கள் தொகுதி, விதிவிலக்காக அரிதாய் விரல்விட்டு எண்ணக்கூடிய பாரதத் தாயின் தரித்திரப் புத்திரர்கள் ஓரிருவர் உள்ளே சென்றாலும் உயிரோடு படித்து திரும்ப முடியாத அவலம்.
அடுக்கிக் கொண்டே போகலாம். நம் அடுத்த தலைமுறையினரின் சுயம் சார்ந்த வாழ்வுக்காய் அணி திரட்டிப் போராட வழி தேடாது, பொருத்தமற்ற சூழலில் கவனம் சிதைக்க வைக்கும் மாய மான்களைத் துரத்தும் நேரம் அல்ல இது. அவர்கள் யார் என சமூகப் பொதுவெளியில் உணர்த்தும் நேரம்!
முகநூல் யாருக்காவது முகமூடியாய் இருந்து விட்டுப் போகட்டும். அவர்களைப் போலன்றி நம் உண்மை முகங் காட்டும் நூலாய்ப் பயன்படுத்தி சதிகாரர்களை முறியடிப்போம்!
விலாசம் மறைத்து வெளியே உலவும் வீணர்களை அரசாங்கம் அதிகாரப் பூர்வமாய்த் தோலுரிக்கட்டும்!
No comments:
Post a Comment