Wednesday, July 1, 2020

சாத்தான் குளம் சொல்வதென்ன?

காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கொலைக் களங்களாக மாறி வருகின்றன. ஏழை எளிய மக்களுக்கு எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லை. காவல் நிலையங்களில் அவர்கள் நடத்தப்படும் விதம் நாடறிந்தது. காவல் துறைக்கு வருவோரில் வந்து சில நாட்களில் மன நோயாளிகளாக ஆகி விடுகின்றனர் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. மன அழுத்தம் காரணமாக உயர் அதிகாரிகளிடமும், நீதிபதி முன்புமே மரியாதைக் குறைவாக நடந்து கொள்வார்கள் என்றால் தனி மனிதனை எப்படி நடத்துவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கையில், மனம் பதை பதைக்கிறது. ஒவ்வொரு காவல்நிலையத்திலும், காவலர்களின் நண்பர்கள் என்ற கூட்டம் இருப்பது சட்டப் பூர்வமானதா? அவர்களுடைய வேலைத் தன்மை என்ன? கொலை வெறித் தாக்குதல் நடத்த காவலர்களுக்கு உதவுவதா? காரியம் முடிந்ததும் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள். அதிகார பூர்வமற்ற இந்த மாஃபியா கும்பல் சாத்தான் குளம் காவல் நிலையத்திலும் இருந்தார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள் வெளி வராதது ஏன்?

கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி மரணமுற்ற தந்தை-மகன் இருவரை அந்த நிலையில் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்ட உள்ளூர் நீதிபதி, சான்றிதழ் வழங்கிய மருத்துவர் இவர்கள் எல்லாம் தங்கள் கடமையிலிருந்து தவறியவர்கள் தானே. தெரிந்தோ தெரியாமலோ காவலர் கும்பலுக்கு உதவி செய்தது போல் அல்லவா தெரிகிறது. இது சட்டத்தின் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் அதிலிருந்து தவறிவிட்டார்கள் என்பதையே நிரூபிக்கிறது. மாவட்ட நீதிபதியின் விசாரணையை கேலி செய்யும் வகையில் மிரட்டல் பாணியில் ஆபாச சொற்களைத் தம் துறை உயர்அதிகாரிகள் முன்பே ஒரு கான்ஸ்டபிள் பேச முடியும் என்றால் அந்த அளவுக்கு துணிச்சலை யார் கொடுத்தது? லத்தி எங்கே என்றால் ஒருவன் சுவர் ஏறிக்குதித்து ஓடுகிறான். கைது செய்யப் போனால் ஒருவன் தலைமறைவு ஆகிறான். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட உயர் அதிகாரிகள் உடனையே மாற்றல் செய்யப்பட்டு புதிய பொறுப்புக்கு மாற்றப் படுகின்றனர். இன்ஸ்பெக்டர் மீது மருமகளை விஷம் வைத்துக் கொல்லமுயன்றதற்கான புகார் நடவடிக்கை இன்றி தூங்குகிறது. லாக்-அப் மரணத்திற்கு விளக்கம் கொடுத்து குற்றவாளி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தரும் வண்ணம் அமைச்சர் ஒருவர் அறிக்கை விடுகிறார். விசாரணை துவங்கிம பிறகு அமைச்சர் அறிக்கை விட சிறப்பு அதிகாரம் சட்டத்தில் இருக்கிறதா? சட்டம் அதன் கடமையைச் செய்வதைத் தடுக்கும் முயற்சியா? தாங்கள் யார் பக்கம் என்பதை வெளிப்படையாக காட்டும் வழியா? 
குற்றத்திற்கான முகாந்திரமும், உறுதிப் படுத்தும் சாட்சியமும் இருக்கும் போது கொலை வழக்கு பதிவு செய்ய சுணக்கம் ஏன்? நீதித்துறை பரிந்துரையை காவல்துறை கருத்தில் எடுக்காத துணிவு யாரால் கொடுக்கப்பட்டது?

இப்படி கேள்விகளும் சந்தேகங்களும் அணி வகுக்கின்றன. மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அரசு நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் அரசின் மீதான அவநம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் அரசின் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்கு உட்பட்ட அதே நேரத்தில், இவ்விரட்டைக் கொலைகள் பிரச்சினையில் அரசு அதிகாரிகள், அமைச்சர் சிலர் நடந்து கொள்ளும் முறை கண்டனத்திற்கு உரியதாய் உள்ளது. 
பொறுத்திருக்கிறது தமிழகம்! நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 
என்ன ஆகிறது பார்ப்போம்.

No comments:

Post a Comment