கொரோனா காலச் சிந்தனைகள்
நீதித்துறை சீர்திருத்தம் - உடனடித் தேவை
1950, ஜனவரி 26 ஆம் நாள் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 28 முதல் நீதித்துறையின் கீழ் சுதந்திர இந்திய நீதிமன்றங்கள் செயல்படத் துவங்கின. இன்று 70 ஆண்டுகளை நிறைவு செய்து 71 ஆம் ஆண்டில் நடை பயிலும் வேளையில், நீதி மன்றங்களின் செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையைப் போக்கி விரைந்து செயல்பட வேண்டிய தேவைகளை அனைவரும் உணரவும், கவலையோடு விவாதிக்கவுமான நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாட்டில், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அதிகரிக்கும் சிவில், கிரிமினல் வழக்குகளின் மீதான தீர்ப்புகள் வருவதிலான அசாதாரண தாமதம், மக்கள் நீதி மன்றங்கள் மீது வைக்கும் நம்பிக்கை தகர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் தலையாய கடமையும், பொறுப்பும் நீதித்துறையின் இயங்கு தளங்களாக விளங்கும் நீதிமன்றங்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்பில் எண்முறை (digital) தொழில் நுட்பத்தின் வரவு, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளில் யாரும் கற்பனை செய்ய இயலாத அளவுக்குப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இம் மாற்றங்கள் ஒரே சீரான வேகத்தில் அனைத்துத் துறைகளிலும் வர முடியாது என்பது நடைமுறை உண்மை என்றாலும், மாற்றத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைக்க வேண்டிய அவசியத்தை தள்ளிப்போட முடியாது. இந்திய நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.
சுதந்திர இந்தியாவின் உச்சநீதிமன்ற முதல் நீதிபதி ஹரிலால் கனிகா,'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளில் சில, ஒன்றுக்கொன்று முரண்பாடு உள்ளவையாக இருக்கின்றன. சிக்கலாக அவை உருவெடுக்கும் போது, அதை சரிசெய்ய வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு இருக்கிறது' என உச்ச நீதி மன்ற துவக்கத்தில் குறிப்பிட்டார். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நீதிமன்றங்கள், அரசதிகார வரம்பு மீறல்களை முறியடித்தும், மக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்கு வரும் ஆபத்தை பல கட்டங்களில் தடுத்து நிறுத்தியும், நீதிமன்றத்தை நாடி தங்கள் பாதிப்பை சரி செய்து கொள்ளக் கூடிய அளவுக்குப் பொருளாதார வசதியற்ற மக்கள் தொகுதிக்கு ஆதரவாக முன்கை எடுத்து காப்பாற்றியும், பொதுநல வழக்குகளைத் தானே முன் வந்து ஏற்று நடத்தி, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அற்றுப் போகாத வண்ணம் பெரும் பங்காற்றி உள்ளன. வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர்களின் நீண்ட பட்டியலே உள்ளது. வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஓ.சின்னப்ப ரெட்டி தொடங்கி மார்க்கண்டேய கட்ஜு மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற செலமேஸ்வரர் வரை பலரை நாம் மறக்க இயலாது. ஆனாலும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையும், தீர்ப்பு வருவதற்கான காலத்தின் அதிகரிப்பும் நீதிமன்ற நடைமுறைகளில் குறிப்பாக குற்றப் பின்னணி (criminal) வழக்குகளில் மேற்கொள்ளும் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மீதான விவாதங்கள் விரிவான தளங்களில் எதிரொலிக்க வேண்டும்.
சமீபத்தில் நம் கவனத்தை ஈர்த்த சில வழக்குகள் பற்றிய செய்திகளும், சமூக அக்கறையுள்ள சில வழக்கறிஞர்கள் பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளும் நம்மை சிந்திக்க வைத்தன. விளைவே இக் கட்டுரை.
தமிழ்நாட்டின் தென்மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக் கொலையில், சென்னை உயர் நீதி மன்ற மதுரை அமர்வு சற்றும் தாமதமின்றி எடுத்த சீரிய நடவடிக்கை காரணமாக காவல்துறையினர் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பின் வெம்மையை உணர்ந்த மாநில அரசாங்கம், சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தது. இப்போது சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் வந்த ஒரு செய்தி நமக்கு கவலை தருவதாக உள்ளது. 1985 ஆம் ஆண்டு இராஜஸ்தானில் நடந்த கொலை மீதான வழக்கில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வந்துள்ளது. குற்றவாளிகளாய் நிரூபிக்கப்பட்ட ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் உட்பட பதினொரு காவல்துறையினருக்கு மதுரா செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. கொலையுண்டவர் ஏழுமுறை இராஜஸ்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை உறுப்பினர். ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பரத்பூர் சமஸ்தானத்தின் பட்டத்து இளவரசரான இராஜா மான்சிங். காவல் நிலையத்திற்கு சரணடையச் செல்லும் போது, இடையில் காவல்துறையினர் வழி மறித்து அவரையும் அவர் உதவியாளர் இருவரையும் மோதலில் (Encounter) சுட்டுக் கொன்றதே வழக்கு. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையினர். கொலையுண்டவர் மக்கள் பிரதிநிதி என்பதோடு மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர் சமூகத்தின் உச்ச மட்டத்தில் இருந்தவர் என்பதால் அல்ல; பொருளாதார ரீதியாக வழக்கை சந்திக்கும் வல்லமை பெற்ற குடும்பம். அப்படி இருந்ததால்தான் விடாப்பிடியாக, வழக்கு இழுக்கடிக்கப் பட்டாலும், தீர்ப்பை பெற முடிந்தது. ஆனால் அதற்கு முப்பத்தைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்தது. இதுவும் இறுதியானதல்ல; இந்த செசன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உயர்நீதி மன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல மேலமை நீதி மன்றங்கள் உள்ளன. இறுதியாகத் தண்டனையை அடையும் போது, அதை அனுபவிக்க எவ்வளவு பேர் உயிரோடு இருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. இவ்வழக்கின் போக்கைப் பார்க்கையில் சாத்தான்குளம் வழக்கு என்ன ஆகுமோ என்ற கவலை அதிகரிக்கிறது.
இது போன்று மிகத் தாமதமாக தலைமுறைகள் கடந்து தீர்ப்புகள் வந்த வழக்குகள் பல உள்ளன. 1975 ஆம் ஆண்டு ஜனவரியில் அன்றைய இரயில்வேத்துறை அமைச்சராக இருந்த லலித் நாராயண மிஸ்ரா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் செய்தவர்கள் 2014 இல் வந்த தீர்ப்பு மூலம் தண்டிக்கப்பட்டனர். தீர்ப்பு வெளி வர 39 ஆண்டுகள். 1987 இல் ஹஸிம்புராவில் 40 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 இல் தீர்ப்பு வெளியாயிற்று. தீர்ப்பு என்ன தெரியுமா? குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பின் அவ்வளவு பேரையும் கொலை செய்தவர்கள் யார்? நல்ல வேளை. மேல் முறையீட்டில் டெல்லி உயர்நீதி மன்றம் மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 16 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அளித்ததன் மூலம் நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொண்டது. ஆக இதுபோன்ற கொடுமையான குற்ற வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வர இவ்வளவு தாமதத்தை எவ்வாறு ஏற்க இயலும்? வழக்கு மன்றத்திற்குச் சென்று ஆண்டுக் கணக்கில் நியாயம் கிடைக்க அலைக்கழிக்கப்பட்டு அழிந்த குடும்பங்கள் பற்றிய கதைகள் நம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உலவி வருவதை நாம் அனைவரும் அறிவோம். குற்றம் செய்தவர்கள் கூட தப்பிக்கலாம், ஆனால் குற்றமற்றவர்கள் சிறிதும் தண்டிக்கப்படக் கூடாது என்னும் உயர்ந்த அறநெறியைக் காப்பதற்காக, நீதிமன்றங்களுக்கு வெளியே குற்றம் செய்யாதவர் குடும்பங்கள் சிதைந்து போவதைப் பற்றிய கவலையும் அதையொட்டி எழும் விவாதங்களும் இன்று கூர்மை அடைந்துள்ளன. இவை எல்லாம் நீதித்துறையின் சீரமைப்பைக் கோருகின்றன.
உச்ச நீதிமன்றத்தின் முப்பெரும் பணிகளில் ஒன்று அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் நீதி வழங்குதல். இவ்வாறு வழங்கும் தீர்ப்புகளை தாமதமின்றி அமுல்படுத்துவது, அச்சட்டத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பிரதிநிதிகளாக இருக்கும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஆளுநர்களின் தலையாய கடமை. ஆனால் அதன் இன்றியமையாமையை உணராத போக்கு அதிகரித்திருப்பதும், தாமதம் பற்றிய பொறுப்பின்மையும் நீதியை நிலைநாட்டும் கருவிகள் மீதான ஐயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகள் இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் விடுதலை செய்யப்படவில்லை. நன்னடத்தை மற்றும் தலைவர்களின் பிறந்த நாள் அல்லது தேசிய, மாநில அரசுகளின் முக்கிய விழாக்களை ஒட்டி இதே போன்ற குற்றத்தைச் செய்து ஆயுள் தண்டனைப் பெற்றவர்கள், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டும், பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்கு இன்னும் விடியவில்லை. இது குறித்த போராட்டங்கள், வழக்குகள் எல்லாம் நடந்து முடிந்து இறுதியில் மாநில அரசு, சட்டசபையில் ஒரு மனதான தீர்மானம் நிறைவேற்றி, விடுதலையைப் பரிந்துரை செய்து, ஆளுநருக்கு முறையான கடிதமும் அனுப்பியது. இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம், 'எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைப்புச் சட்டத்தின் பிரதிநிதியாக உள்ள அதிகாரி கோப்பை வைத்துக்கொண்டு இருக்க முடியாது, அமைப்புச் சட்டத்தின் காவலர்கள், நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசத்தை வரையறுக்காத காரணம், அப்பிரதிநிதிகள் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையே', என சாடியுள்ளது. சட்டத்தின் காவலர்கள் அதை மீறுவதும், நடைமுறைப் படுத்துவதில் காட்டும் சுணக்கமும் ஏற்படுத்தும் விளைவுகளை எண்ணிப் பார்ப்பதில்லை.
நாடெங்கும் ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் சமூக விரோத சக்திகளைத் தூண்டி, கலகங்களை நடத்தி, அதன் மூலமாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்லி சிலரைக் குறி வைத்து தண்டிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பீமா கொரேகான் என்னும் இடத்தில் நடந்த வன்முறைக் கலகங்கள், கொரோனாத் தொற்று துவங்கிய நேரத்தில் வடகிழக்கு டெல்லியில் 53 பேர் கொல்லப்பட்டும், பொதுச் சொத்துக்கள் கொள்ளை மற்றும் அழிவுக்கு ஆளாக்கப்பட்டும் நடந்த திட்டமிட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் நீதிமன்ற விசாரணை ஏதுமின்றி சிறையில் வாடும் இளைஞர்கள், மாணவர்கள், அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கை தெரியாது. தொலைக்காட்சி ஊடகங்களுக்கு இது TRP ஐ எகிறச் செய்யும் பிரச்சினை அல்ல. பீமா கொரேகான் கலவரத்தை ஒட்டி மகாராஷ்ட்டிர அரசின் 'சட்டப்புறம்பு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்' படி
(UAPA) பதினோரு பேர் தனிமைச் சிறைகளில் பல்வேறு இடங்களில் அடைக்கப் பட்டுள்ளனர். அறிஞர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மக்கள் இயக்கச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் அடங்குவர். பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுவதை உறுதிப் படுத்தும் அதிகாரப் பூர்வ மருத்துவச் சான்றிதழ்களை நீதிமன்றம் முன் அளித்த பிறகும் பிணையில் விடுவதற்கும் கூட நீதிமன்றங்கள் தயாரில்லை. பிணைக்கான பூர்வாங்க நடைமுறைகளை முடிக்கவே பல மாதங்கள் ஆகின்றன. அதற்குப்பின்னும் நீதிமன்றம் மறுப்பது தொடர்கிறது. உடல்நிலை மோசமாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் 'உரிமை மீறல்கள்' தடுக்கப் படுவது எப்போது இங்கே சாத்தியம்? யாருக்கும் தெரியாது. 81 வயதான கவிஞர் வர வர ராவ், 64 வயதான சுதா பரத்வாஜ், டெல்லிப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கியப் பேராசிரியர் சாய்பாபா ஆகியோர் சமீபத்திய எடுத்துக்காட்டுகள்.
நீதித்துறைதான் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எடுப்பதில்லை. பெருங்கொடுமையான, நெஞ்சை உலுக்கும் செய்தி என்ன தெரியுமா? தேசிய குற்றப் பதிவு ஆய்வகம் (National Crime Record Bureau) தந்துள்ள விபரம் தான். இந்தியாவில் உள்ள 1400 சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் கைதிகள் ஏறத்தாழ 4.33 இலட்சம். குற்றம் நிரூபிக்கப் படாமல் விசாரணக் கைதிகளாக சுமார் 68% அதாவது ஏறத்தாழ 2,90,000 பேர் ஆண்டுக் கணக்கில் அடைபட்டுள்ளனர். விசாரணைக்கு நீதிமன்றங்களால் அழைக்கப் படாதவர்கள், பிணைத் தொகையைக் கட்டக்கூட வழியற்ற ஏழை மக்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுள் 63% கைதிகள் SC, ST மற்றும் OBC இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற செய்தி அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது. இவர்களின் குடும்பம், மனைவி, மக்களின் எதிர்காலம் என்ன ஆகியிருக்கும்? எத்தனைக் குடும்பங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் அல்லல் படும்? அவர்கள் ஆற்றாது அழுத கண்ணீர் எத்தகையப் பலம் வாய்ந்தது என்பதை காலம் சொல்லும். பானை பொங்கி வெடிக்குமுன் தீர்வு நோக்கி சிந்திப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
கொரோனா தொற்று பூதாகரமாக கிளம்புவதற்கு முன், மார்ச் 24, 2020 முதல் ஊரடங்கு போன்ற வீட்டுக்குள் முடங்கி இருக்கும் Lockdown உத்தரவை முதல் நாள் 4 மணி நேர அவகாசத்தில், பண மதிப்பிழப்பு அறிவிப்பு போல் அறிவித்து, 138 கோடி மக்கள் தொகுதியை முடக்கியது. அவரவர்கள் அங்கேயே முடங்கிக் கொள்வது என்பதால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றிய முன் எச்சரிக்கை மத்திய அரசுக்கு இல்லாததால் இன்று அதன் சீரழிவுகளை நம் மக்கள் பல முனைகளிலும் சந்தித்து வருகிறார்கள். நம் தலைமுறையில் இப்படி ஒரு முடக்கம் மாதக்கணக்கில் தொடரும் என யாரும் எண்ணியதில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டில் பல மாதங்கள் என தொடர்ந்து பல ஆண்டுகளாக அவ்வப்போது அம்மக்கள் அனுபவிக்கும் ஊரடங்கால் சமூக வாழ்க்கையே எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை இப்போது நாம் உணரமுடிகிறது. மார்ச் மாத முடக்கம் துவங்கும் முன்பே, சென்ற ஆண்டு ஆகஸ்டு 4 முதல், அரசியல் பிரிவு 370 ஐ ரத்து செய்து மாநில அந்தஸ்தை மாற்றி யூனியன் பிரதேசமாக அறிவித்த சட்டம் நடைமுறை படுத்தும் முன் இராணுவக் கட்டுப்பாட்டிலான ஊரடங்கு உத்தரவும் ஆளுக்கட்சி அல்லாத பிற கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்கும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தாக்குதலை முறியடித்தல் என்ற பெயரில் ஒட்டுமொத்த தொலைத் தொடர்புச் சேவை நிறுத்தப்பட்டது. வலைதளச் சேவை 'இண்டர்நெட்' அடியோடு முடக்கப்பட்டது. ஓராண்டு முடியப் போகிறது. மூன்று முறை உச்ச நீதி மன்றக் கதவை தட்டியபின், இப்போது 2G சேவை வரையறைகளோடு தரப்பட்டுள்ளது. ஆனால் அதிவேக 4G சேவை தரப்படவே இல்லை. இதன் அவசியம் பற்றி விளக்க வேண்டியதில்லை. கல்வி, மருத்துவம், வணிகம் போன்ற சமூகத்தின் உயிர் நாடியான அனைத்து துறைகளுக்கும் அன்றாடம் எவ்வளவு அவசியம் என்று தெரிந்தும் அதைத் தருவது பற்றி மத்திய அரசு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
இண்டர்நெட் சேவை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவற்றோடு நெருக்கமான தொடர்பு கொண்டது. ஆகவேதான் 'அனுராதா பாசின்' என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முதலாவதாக, சேவை முடக்குவதற்கான அரசு ஆணையை வெளியிடவும், இரண்டாவதாக, நாட்டின் பாதுகாப்புக்கும், இச்சேவை முடக்கத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை நிரூபிக்கும் எந்த சோதனை அடிப்படையிலான ஆதாரங்களும் இல்லாத போது நிறுத்தப் பட்டதற்கான காரணத்தை வெளியிடவும் நீதிமன்றம் முன் அவர் வைத்த வேண்டுகோள்கள். ஆணை ஏதும் இல்லாமல் சேவை முடக்கி மக்களின் உரிமைகளைப் பறித்தது ஏன் என வினவினார். உச்ச நீதிமன்றம் ஐந்து மாதங்களை எடுத்துக் கொண்டு பிரச்சினை தீர்வுக்கான தெளிவான தீர்ப்பை தருவதற்குப் பதில், வழுக்கலான முடிவை அறிவித்தது. 'வார ஆய்வுக் குழு' ஒன்று போட்டு சேவை தருவது பற்றி பரிசீலிக்க ஆணையிட்டது. அரசின் பொறுப்பை சுட்டிக்காட்டி, முடக்கியதற்கான உத்தரவை வெளியிட அரசைப் பணிக்கவில்லை. முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதால் இரண்டாம் முறையாக, ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் அமைப்பின் சார்பில் எட்டு மாதங்களாக 4G சேவை முடக்கப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்றத்திடம் சுட்டிக் காட்டினர். இம்முறை உச்ச நீதிமன்றம் மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆராயச் சொல்லிவிட்டு தன் வேலையை முடித்துக் கொண்டது. யார் முடக்கினார்களோ, அவர்களையே ஆய்வு செய்யச் சொல்லிய வேடிக்கையைப் பற்றி என்ன சொல்வது? முன்னேற்றம் ஏதாவது வந்ததா? இன்று வரை 4G சேவை இல்லை. ஓராண்டு ஆகப் போகிறது. மீண்டும் அவர்களே உச்ச நீதிமன்றத்தை அணுகியதன் பின் 2G சேவை வரையறைகளோடு தரப்பட்டுள்ளது. ஆனால் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. இப்போது ஆய்வுக்குழு அறிக்கையை 'மூடுறையில்' (Sealed Envelope) போட்டு நீதிமன்றம் முன் சமர்ப்பிப்பதாக சொல்லி இருக்கிறது. முடக்கப்பட்ட ஆணையை வெளியில் சொல்வதில் என்ன தடை? எண்பது இலட்சம் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கான காரணத்தை சொல்ல விரும்பாத மத்திய அரசை நெறிப்படுத்துவதில் உச்ச நீதிமன்றம் தவறி இருக்கிறது. மக்களின் நீதித்துறை மீதான நம்பிக்கை சிதைந்து விட்டது என்பதை கவலையோடு பார்க்க வேண்டியிருக்கிறது. உச்ச நீதிமன்றமே இப்படி எனில் சொச்ச நீதிமன்றங்கள் என்ன செய்யும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவேதான் நீதித்துறை சீர்திருத்தங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது.
சிறைகளின் மொத்தக் கொள்ளளவு 100% எனில், கைதிகளின் எண்ணிக்கை 116% முதல் 119% ஆக இருக்கிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணைக் கைதிகள் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்க வேண்டிய கொடுமை ஒரு புறம். ஆனால் எந்தக் குற்றமும் செய்யாமல், கைதிகளுக்கு சிறையில் பிறந்த குழந்தைகள் என்ன செய்தார்கள்? செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்க நேர்ந்த இக்குழந்தைகளின் எதிர்காலம்? இவர்களுக்கான நல்வாழ்வை உறுதிப் படுத்த முடியாதது நம் ஒவ்வொருவருக்கும் அவமானமன்றோ? காரணங்களை ஆய்வு செய்தால், இறுதி விடை, நீதிமன்றங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பும், போதிய நீதியரசர்களும், வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சூழ்நிலைகளும் என்பது தெரியவரும். நீதிமன்றங்களில் தேவைக்கேற்ற விசாரணை அறைகள் இல்லை. ஏறத்தாழ 5,000 அறைகள் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மாவட்ட/ வட்ட நீதிமன்றங்களின் நீதியரசர் எண்ணிக்கை 17,891, உயர்நீதி மன்றங்களில் பணிபுரியும் நீதியரசர்கள் 676. உச்ச நீதி மன்றத்தில் 33. நிரந்தர பற்றாக்குறை விகிதம் 22% நவீன வசதிகள் இல்லாமலும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததாலும் விரிவாக்க வேலைகள் தடைப்படுகின்றன. காவல் துறை செயல்பாடுகளில் உள்ள குளறுபடிகள், அரசியல் வாதிகளின் காவல்துறை தலையீடு மற்றும் சமூகத்தில் பணபலம் உள்ளவர்களின் செல்வாக்கு எல்லாம் நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவையும் இன்ன பிற காரணங்களும் வழக்கை முடிப்பதில் தேவையற்ற தாமதத்தை உருவாக்குகின்றன.
'விதி' என்னும் நீதிக்கொள்கை பற்றி ஆய்வு செய்யும் மையம், முதன் முறையாக காவல்துறை, நீதிமன்றங்கள், சட்ட உதவி மற்றும் சிறைகள் பற்றிய ஒன்றிணைந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு முன் சமர்ப்பித்துள்ளது. அவ்வறிக்கை மீதான பரவலான விவாதங்களை நாடெங்கும் மக்கள் நல ஆர்வலர்கள் நடத்துவதும், பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளை மத்திய, மாநில அரசுக்குத் தெரிவிப்பதன் மூலம் நீதித்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர இடையறாது முயல வேண்டும். இந்நாட்டு குடிமக்கள் அனைவரது நலம் குறித்து அக்கறைப்படும் நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமைகளுள் ஒன்றாகும்.
Justice delayed means Justice denied!
No comments:
Post a Comment